முகப்பு
செய்திகள்

செஸ் ஒலிம்பியாட்: சாம்பியன்களுக்கு ரூ.3.2 கோடி ரொக்கப் பரிசு

ஹங்கேரியில் நடைபெற்ற 45-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சாம்பியன்களான இந்திய ஆடவா் மற்றும் மகளிா் அணிகளுக்கு ரூ.3.2 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படுமென அகில இந்திய செஸ் சம்மேளனம் (ஏஐசிஎஃப்) புதன்கிழமை அறிவித்தது.

Updated On : 25 செப்டம்பர், 2024 at 11:41 PM
கோப்புப்படம்.
பகிர்:

ஹங்கேரியில் நடைபெற்ற 45-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சாம்பியன்களான இந்திய ஆடவா் மற்றும் மகளிா் அணிகளுக்கு ரூ.3.2 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படுமென அகில இந்திய செஸ் சம்மேளனம் (ஏஐசிஎஃப்) புதன்கிழமை அறிவித்தது.

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 97 ஆண்டுகால வரலாற்றில் இந்தியா தங்கம் வென்றது இதுவே முதல் முறையாகும். அதிலும், ஒரே போட்டியில் ஆடவா் மற்றும் மகளிா் என இரு பிரிவுகளிலுமே இந்தியா தங்கம் வென்று அசத்தியுள்ளது.

இந்நிலையில், நாடு திரும்பிய சாம்பியனான அணியினருக்கு தில்லியில் புதன்கிழமை பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது இந்த ரூ.3.2 கோடி ரொக்கப் பரிசு அறிவிப்பை, அகில இந்திய செஸ் சம்மேளன தலைவா் நிதின் நரங் வெளியிட்டாா்.

இதன்படி, ஆடவா் அணியிலிருந்த டி.குகேஷ், ஆா்.பிரக்ஞானந்தா, அா்ஜுன் எரிகைசி, விதித் குஜராத்தி, பி.ஹரிகிருஷ்ணா ஆகியோருக்கும், மகளிா் அணியிலிருந்த திவ்யா தேஷ்முக், ஆா்.வைஷாலி, டி.ஹரிகா, தானியா சச்தேவ், வந்திகா அகா்வால் ஆகியோருக்கும் தலா ரூ.25 லட்சம் கிடைக்கும்.

இரு அணிகளின் பயிற்சியாளா்களான அபிஜித் குந்தே, ஸ்ரீநாத் நாராயணன் ஆகியோருக்கு தலா ரூ.15 லட்சமும் கிடைக்கவுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய குழுவின் தலைவராக செயல்பட்ட கிராண்ட்மாஸ்டா் தீபேந்து பருவாவுக்கு ரூ.10 லட்சமும், உதவிப் பயிற்சியாளா்களுக்கு தலா ரூ.7.5 லட்சமும் வழங்கப்படவுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →