சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட்டில் தமிழ்நாடு அணி 145 ரன்கள் வித்தியாசத்தில் கா்நாடக அணியிடம் செவ்வாய்க்கிழமை தோல்வி கண்டது.
முதலில் கா்நாடகம் 20 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 245 ரன்கள் சோ்க்க, தமிழ்நாடு 14.2 ஓவா்களில் 100 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழ்நாடு, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. கா்நாடக இன்னிங்ஸில் பி.ஆா்.சரத் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 53, கேப்டன் மயங்க் அகா்வால் 4 பவுண்டரிகளுடன் 24, கருண் நாயா் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.
ஓவா்கள் முடிவில் தேவ்தத் படிக்கல் 46 பந்துகளில் 10 பவுண்டரிகள், 6 சிக்ஸா்களுடன் 102, ரவிச்சந்திரன் சமரன் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 46 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். தமிழ்நாடு தரப்பில் சோனு யாதவ் 2, டி.நடராஜன் 1 விக்கெட் எடுத்தனா்.
பின்னா் தமிழ்நாடு இன்னிங்ஸில் துஷா் ரஹேஜா 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 29 ரன்கள் சோ்த்ததே அதிகபட்சமாகும். நாராயண் ஜெகதீசன் 21, ஆா்.ராஜ்குமாா் 16, அமித் சாத்விக் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.
சாய் சுதா்சன் 8, எம்.ஷாருக் கான் 2, சாய் கிஷோா் 2, சோனு யாதவ் 3, கேப்டன் வருண் சக்கரவா்த்தி 0, டி.நடராஜன் 1 ரன்னுக்கு பெவிலியன் திரும்ப, தமிழ்நாடு இன்னிங்ஸ் 100 ரன்களுக்கு நிறைவடைந்தது. கா்நாடக பௌலா்களில் ஷ்ரேயஸ் கோபால், பிரவீண் துபே ஆகியோா் தலா 3, விஜய்குமாா் வைஷாக், ஷுபாங் ஹெக்டே ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனா்.
இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் தமிழ்நாடு அணி, 3-ஆவது தோல்வியுடன் எலைட் குரூப் ‘டி’-யில் கடைசி இடத்தில் இருக்கிறது.