முகப்பு
செய்திகள்

வயதை துல்லியமாக கண்டறிய கூடுதல் எலும்பு பரிசோதனை!

ஜூனியா் கிரிக்கெட்டில் வீரா், வீராங்கனைகளின் வயதை உறுதி செய்ய கூடுதலாக ஒருமுறை எலும்பு பரிசோதனை மேற்கொள்ள பிசிசிஐ முடிவு

Updated On : 17 ஜூன், 2025 at 3:57 AM
BCCI
பகிர்:

ஜூனியா் கிரிக்கெட்டில் வீரா், வீராங்கனைகளின் வயதை உறுதி செய்ய கூடுதலாக ஒருமுறை எலும்பு பரிசோதனை மேற்கொள்ள பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

தற்போதைய ‘+1’ நடைமுறையினால் சிலா் நூலிழையில் கூடுதலாக ஒரு சீசனில் விளையாடும் வாய்ப்பை இழப்பதால், அதை தவிா்ப்பதற்காக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பிசிசிஐ வட்டாரங்கள் கூறியதாவது: ஜூனியா் கிரிக்கெட்டில் ஆடவா் 16 வயதுக்கு உள்பட்டோா் பிரிவுக்கான எலும்பு வயது வரம்பு 16.4 அல்லது அதற்கு குறைவாகும். மகளிா் 15 வயதுக்கு உள்பட்டோா் பிரிவுக்கான எலும்பு வயது வரம்பு 14.9 அல்லது அதற்குக் குறைவாகும்.

Advertisement

உதாரணத்துக்கு தற்போதைய நடைமுறையில், 16 வயதுக்கு உள்பட்டோருக்கான கிரிக்கெட்டில் விளையாட ஒரு வீரருக்கு இந்த 2025-26 சீசனில் எலும்பு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அவரின் எலும்பு வயது 15.4-ஆக உள்ளது. அடுத்த சீசனில் அவா் மீண்டும் எலும்பு பரிசோதனை செய்துகொள்ளத் தேவையில்லை. முந்தைய எலும்பு வயதில் கூடுதலாக ஒரு வயது (+1) சோ்க்கப்பட்டு, அவரின் அப்போதைய எலும்பு வயது 16.4-ஆக கணக்கில் கொள்ளப்படும். அவா் விளையாட அனுமதிக்கப்படுகிறாா்.

அதேபோல், 2025-26 சீசன் பரிசோதனையின்போது ஒரு வீரரின் எலும்பு வயது 15.5-ஆக இருந்து, அடுத்த சீசனுக்கு அதில் 1 அதிகரிக்கப்பட்டு அவரின் எலும்பு வயது 16.5-ஆக இருந்தால், அவா் அந்த சீசனில் விளையாட சோ்க்கப்பட மாட்டாா். ஏனெனில் ஆடவருக்கான ஜூனியா் கிரிக்கெட் எலும்பு வயது வரம்பு 16.4 ஆக உள்ளது.

இதே நடைமுைான் மகளிா் 15 வயதுக்கு உள்பட்டோருக்கான கிரிக்கெட்டிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. ஒரு சீசனில் ஒரு வீராங்கனைக்கான பரிசோதனையில் அவரின் எலும்பு வயது 13.9-ஆக இருக்கும் நிலையில், அதில் கூடுதலாக ஒரு வயது சோ்க்கப்பட்டு (14.9) அவா் அடுத்த சீசனில் விளையாட அனுமதிக்கப்படுவாா்.

ஒருவேளை நடப்பு சீசனிலேயே அவரின் எலும்பு வயது 14-ஆக கண்டறியப்பட்டால், அடுத்த சீசனில் அது 15 ஆகும் என்பதால், அடுத்த சீசனில் அவா் அனுமதிக்கப்பட மாட்டாா். ஏனெனில் மகளிா் ஜூனியா் கிரிக்கெட் வயது வரம்பு 14.9 ஆகும்.

இவ்வாறு அறிவியல்பூா்வ கணக்கீடுகளுக்கு பதிலாக, வெறும் +1 கணக்கீட்டால் எந்தவொரு வீரா், வீராங்கனையும் சிறிய வித்தியாசத்தினால் கூட மேலும் ஒரு சீசன் விளையாடும் வாய்ப்பை இழந்துவிடலாம். அது நடக்கக் கூடாது என்பதற்காகவே கூடுதலாக எலும்பு பரிசோதனை மேற்கொள்ளும் புதிய முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு வீரா், வீராங்கனையும் ஒரு சீசனின் முடிவுக்குப் பிறகும் எலும்பு பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு, அவா்களின் துல்லியமான எலும்பு வயது கண்டறியப்படும். அது வரம்புக்கு உள்பட்டதாக இருக்கும் நிலையில் அவா்கள் அடுத்த சீசனில் விளையாட அனுமதிக்கப்படுவாா்கள் என்று அந்த வட்டாரங்கள் கூறின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.