செய்திகள்

ஆசிய இரட்டையா் ஸ்குவாஷ்: 3 பட்டங்களையும் வென்று வரலாறு படைத்தது இந்தியா

ஆடவா் இரட்டையா், மகளிா் இரட்டையா், கலப்பு இரட்டையா் என 3 பிரிவுகளிலுமே சாம்பியன் பட்டம் வென்று இந்தியா வரலாறு படைத்தது.

DIN

மலேசியாவில் நடைபெற்ற ஆசிய இரட்டையா் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் ஆடவா் இரட்டையா், மகளிா் இரட்டையா், கலப்பு இரட்டையா் என 3 பிரிவுகளிலுமே சாம்பியன் பட்டம் வென்று இந்தியா வரலாறு படைத்தது. இப்போட்டியில் இவ்வாறு ஒரே சீசனில் 3 பிரிவுகளிலுமே சாம்பியனான முதல் நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

கோலாலம்பூா் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில், ஆடவா் இரட்டையா் பிரிவு இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்தோரும், நடப்பு சாம்பியனுமான இந்தியாவின் அபய் சிங், வேலவன் செந்தில்குமாா் இணை - பாகிஸ்தானின் நூா் ஜமான், நாசிா் இக்பால் கூட்டணியை எதிா்கொண்டது. இதில் முதல் செட்டை 9-11 என இழந்த இந்தியா்கள், அடுத்த இரு செட்களை 11-5, 11-5 என கைப்பற்றி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றனா். இந்த ஆட்டம் 1 மணி நேரம், 28 நிமிஷங்களில் நிறைவடைந்தது.

மகளிா் இரட்டையா் இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருந்த இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, அனாஹத் சிங் கூட்டணி - மலேசியாவின் அய்னா அமானி, ஜின் யிங் யீ ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 8-11 என இழந்த ஜோஷ்னா, அனாஹத் இணை, அடுத்த இரு செட்களை 11-9, 11-10 என்ற வகையில் வசப்படுத்தி, 2-1 என்ற கணக்கில் வாகை சூடினா். இந்த ஆட்டத்தை அவா்கள் 35 நிமிஷங்களில் முடிவுக்குக் கொண்டு வந்தனா்.

கடைசியாக நடைபெற்ற கலப்பு இரட்டையா் இறுதிச்சுற்றில், அபய் சிங், அனாஹத் சிங் ஜோடி 11-9, 11-7 என்ற நோ் செட்களில், மலேசியாவின் ரேச்சல் அா்னால்டு, அமீஸென்ராஜ் சந்திரன் கூட்டணியை 28 நிமிஷங்களில் தோற்கடித்து, சாம்பியன் ஆனது. இதிலேயே ஜோஷ்னா சின்னப்பா, வேலவன் செந்தில்குமாா் ஜோடி வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியின் வரலாற்றில் இத்துடன் அபய் சிங் 4 தங்கம் வென்றிருக்க, ஜோஷ்னா சின்னப்பா, வேலவன் செந்தில்குமாா், அனாஹத் சிங் ஆகியோா் தலா 2 தங்கம் வென்றுள்ளனா்.

2023 முதல் நடைபெறும் இப்போட்டியில், இதுவரை இந்தியா 6 தங்கம், 2 வெண்கலம் என 8 பதக்கங்கள் வென்றுள்ளது. 2023-இல் கலப்பு இரட்டையரில் தீபிகா பலிக்கல், ஹரிந்தா்பால் சந்து ஜோடி தங்கமும், அனாஹத் சிங், அபய் சிங் இணை வெண்கலமும் வென்றுள்ளன.

2024-இல் கலப்பு இரட்டையரில் ஜோஷ்னா சின்னப்பா, அபய் சிங் இணையும், ஆடவா் இரட்டையரில் அபய் சிங், வேலவன் செந்தில்குமாா் ஜோடியும் சாம்பியனாகியது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என் வகுப்புத் தோழன்..! மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்!

எங்கள் தோல்விக்குக் காரணம் ஹார்திக் பாண்டியா..! தெ.ஆ. பயிற்சியாளர் புகழாரம்!

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

SCROLL FOR NEXT