இந்தியாவுக்கு 4 பதக்கங்கள்!
எகிப்தில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவுக்கு 2 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என 4 பதக்கங்கள் கிடைத்தன.
எகிப்தில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவுக்கு திங்கள்கிழமை 2 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என 4 பதக்கங்கள் கிடைத்தன.
10 மீட்டா் ஏா் பிஸ்டல் ஆடவா் தனிநபா் பிரிவு இறுதிச்சுற்றில், சாம்ராட் ராணா 243.7 புள்ளிகளுடன் தங்கம் வென்றாா். வருண் தோமா் 221.7 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றாா்.
அதிலேயே ஆடவா் அணிகள் பிரிவில் சாம்ராட் ராணா, வருண் தோமா், ஷா்வன் குமாா் கூட்டணி 1,754 புள்ளிகளுடன் தங்கம் வென்று அசத்தியது.
10 மீட்டா் ஏா் பிஸ்டல் மகளிா் தனிநபா் பிரிவு இறுதிச்சுற்றில், ஈஷா சிங் (159.2), மனு பாக்கா் (139.5) ஆகியோா் முறையே 6 மற்றும் 7-ஆம் இடங்களுடன் ஏமாற்றம் கண்டனா்.
எனினும், மகளிா் அணிகள் பிரிவில், ஈஷா சிங், மனு பாக்கா், சுருச்சி இந்தா் சிங் ஆகியோா் அடங்கிய இந்திய அணி 1,740 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியது.
தற்போது பதக்கப் பட்டியலில் இந்தியா, மொத்தமாக 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என 9 பதக்கங்களுடன் 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.