தடகளப் போட்டிகளில் தன்னுடைய சாதனை இன்னும் பல ஆண்டுகளுக்கு முறியடிக்கப்படாது என உசைன் போல்ட் தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் தடகளப் போட்டிகளில் 8 முறை தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தவர் உசைன் போல்ட். கடந்த 2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றதன் மூலம், தொடர்ச்சியாக மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார் உசைன் போல்ட். கடந்த 2008 ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் தடகளப் போட்டிகளில் 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 4*100 மீட்டர் போட்டிகளில் வெற்றி பெற்று உலகின் கவனத்தை ஈர்த்தார் உசைன் போல்ட்.
100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 4*100 மீட்டர் தடகளப் போட்டிகளில் அதிவேகமாக பந்தய தூரத்தைக் கடந்த வீரர் என்ற சாதைனையை உசைன் போல்ட் தன்வசம் வைத்துள்ளார். அவர் 9.58 விநாடிகள், 19.19 விநாடிகள் மற்றும் 36.84 விநாடிகளில் முறையே பந்தய தொலைவைக் கடந்து உலக சாதனை படைத்தார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடைபெற்ற 100 மீட்டர் தடகளப் போட்டியில் பந்தய தொலைவை 9.72 விநாடிகளில் கடந்து முதன் முதலாக உலக சாதனை படைத்தார். 2008 ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 9.69 விநாடிகளில் பந்தய தொலைவைக் கடந்து அசத்தினார். பின்னர், 2009 ஆம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியின்போது, 9.58 விநாடிகளில் பந்தய தொலைவைக் கடந்து அவரது பழைய சாதனைகளை அவரே முறியடித்தார். 100 மீட்டர் தடகளப் போட்டியில் அதிவேகமாக பந்தய தொலைவைக் கடந்த முதல் மூன்று இடங்களிலும் (9.58 விநாடிகள், 9.64 விநாடிகள், 9.69 விநாடிகள்) உசைன் போல்ட்டின் சாதனைகளே உள்ளன.
இந்த நிலையில், தடகளப் போட்டிகளில் தன்னுடைய சாதனை இன்னும் பல ஆண்டுகளுக்கு முறியடிக்கப்படாது என உசைன் போல்ட் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
100 மீட்டர் தடகளப் போட்டியில் தனது உலக சாதனை குறித்து உசைன் போல்ட் பேசியதாவது: 100 மீட்டர் தடகளப் போட்டியில் என்னுடைய சாதனை எதிர்காலத்தில் முறியடிக்கப்படும். ஆனால், இன்னும் சில ஆண்டுகளுக்கு என்னுடைய சாதனை முறியடிக்கப்படாது என நினைக்கிறேன். 100 மீட்டர் தடகளப் போட்டியில் நான் செய்த சாதனை மிகவும் நம்பமுடியாததாக இருக்கிறது. என்னுடைய இந்த சாதனையை யாரும் விரைவில் முறியடிப்பார்கள் என நினைக்கவில்லை. 200 மீட்டர் தடகளப் போட்டியில் என்னுடைய உலக சாதனை முறியடிக்கப்படலாம். அதற்கான வாய்ப்பிருக்கிறது. ஆனால், அதுவும் மிகவும் கடினமான ஒன்று என்றே கூறுவேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.