ஜஸ்பிரித் பும்ராவைப் போன்ற பந்துவீச்சாளர் கிடைக்க இந்திய அணி அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 4 ஓவர்களை வீசிய இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வெறும் 7 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இந்த நிலையில், ஜஸ்பிரித் பும்ராவைப் போன்ற பந்துவீச்சாளர் கிடைக்க இந்திய அணி அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நிறையப் போட்டிகளில் நாம் பவுண்டரிகள் கொடுக்காமல் பந்துவீசியுள்ளோம். மற்ற வேகப் பந்துவீச்சாளர்களுக்கும் ஜஸ்பிரித் பும்ராவுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பாருங்கள். அவர்களும் சர்வதேச தரத்திலான பந்துவீச்சாளர்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அவர்களைக் காட்டிலும் ஜஸ்பிரித் பும்ரா சிறப்பாக பந்துவீசுகிறார். உலகின் மிகச் சிறந்த பந்துவீச்சாளர்களைக் காட்டிலும் பும்ரா சிறப்பாக செயல்படுகிறார். பும்ரா போன்ற வீரர்கள் ஆடும் லெவனில் இருப்பதற்கு இந்திய அணி அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.