டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் தோல்வி குறித்து விளக்கமளித்துள்ளார் ஆப்கன் கேப்டன் ரஷித் கான்.
அரையிறுதியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கன் அணி, தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 12 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 56 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 8.5 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து வெற்றி பெற்றது.
இந்தத் தோல்வி குறித்து ஆப்கன் கேப்டன் ரஷித் கான் கூறியதாவது:
ஒரு அணியாக இந்தத் தோல்வி கடினமாக இருக்கிறது. நாங்கள் இன்னும் நன்றாக விளையாடியிருக்க வேண்டும். ஆனால் ஆடுகளம் எங்களுக்கு ஒத்துழைக்கவில்லை. அதுதான் டி20 கிரிக்கெட். நீங்கள் அனைத்து வகையான ஆடுகளங்களுக்கும் தயாராக இருக்க வேண்டும். தெ.ஆ. வீரர்கள் நன்றாகப் பந்து வீசினார்கள்.
எங்களது தொடக்க வீரர்கள் (வேகப் பந்து வீச்சாளர்கள்) தொடர் முழுவதுமே சிறப்பாக பந்து வீசினார்கள். தொடக்கம் சிறப்பாக அமைய வேண்டும். முஜீப் காயம் எதிர்பாராதது. எங்களது வேகப் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். அதனால் ஸ்பின்னர்களான எங்களுக்கு வேலை எளிதாகியது.
நாங்கள் இந்த டி20 உலகக் கோப்பையில் மகிழ்ச்சியாக கொண்டாடினோம். தெ.ஆ. போன்ற வலுவான அணியுடன் தோற்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் எங்களது தொடக்கம். எங்களால் எந்த அணியையும் வெல்ல முடியுமென நம்பிக்கை இருக்கிறது. இதற்கான செயல்முறைகளை தொடர்சியாக செய்ய வேண்டும். இது எங்களுக்கு மிகப்பெரிய கற்றல்.
இந்த உலகக் கோப்பையில் இருந்து நம்பிக்கையை எடுத்து கொள்கிறோம். எங்களிடம் திறமை இருக்கிறதென எங்களுக்குத் தெரியும். அழுத்தமான சூழ்நிலைகளில் அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதை மட்டுமே மேம்படுத்த வேண்டும்.
முக்கியமாக மிடில் ஆர்டர் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும். மிடில் ஆர்டர் பேட்டர்கள் கடைசிவரை விளையாட வேண்டும். அணியாக கற்றுக்கொள்கிறோம்; இதுவரை நல்ல முடிவுகளைப் பெற்றுள்ளோம். குறிப்பாக பேட்டிங்கில் இன்னும் முன்னேற்றத்துடன் கம்பேக் கொடுப்போம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.