முகப்பு
தமிழ்நாடு

யார் பெறுவார் அந்த அரியாசனம்-10: ஜாதிகள் - பலமா? பலவீனமா?

   1989-ல் தொடங்கிய அடித்தட்டு மக்களின் எழுச்சி என்பது, மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் ஏதோ பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் எழுச்சி என்று தோன்றினாலும் உண்மையில் அது சமூக அமைப்பில் ஏற்பட்ட ஜாதிகளின் அணி மா

Updated On : 25 டிசம்பர், 2023 at 1:47 PM
பகிர்:

 1989-ல் தொடங்கிய அடித்தட்டு மக்களின் எழுச்சி என்பது, மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் ஏதோ பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் எழுச்சி என்று தோன்றினாலும் உண்மையில் அது சமூக அமைப்பில் ஏற்பட்ட ஜாதிகளின் அணி மாற்றம் என்றுதான் கூற வேண்டும். உயர் ஜாதியினர், தாழ்த்தப்பட்டவர் மற்றும் சிறுபான்மையினரின் கூட்டணியாகத் திகழ்ந்த காங்கிரஸின் வாக்கு வங்கி சிதறியதால் ஏற்பட்ட அணிமாற்றம்தான் 1989-ல் ஏற்பட்டது எனலாம்.

 பிற்படுத்தப்பட்ட சமுதாயம், தாழ்த்தப்பட்ட சமுதாயம் மற்றும் சிறுபான்மையினர் என்கிற கூட்டணி உத்தரப் பிரதேசம் மற்றும் பிகாரில் ஏற்பட்டது. அந்தக் கூட்டணி மகத்தான வெற்றியும் பெற்றது. ஆட்சியும் அமைத்தது. அப்போதும்கூட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த எல்லா பிரிவினரும் ஓரணியில் நிற்கவில்லை என்பதுதான் உண்மை. அதேநிலைதான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலும்.

 உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தாழ்த்தப்பட்ட சமார் பிரிவினரின் ஒட்டுமொத்த ஆதரவையும் பெற்ற கட்சியாக அப்போது இருக்கவில்லை. சமார்களின் ஆதரவு கணிசமாகக் காங்கிரஸ் கட்சிக்கும் இருந்து வந்தது. அதேபோல, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான யாதவர், குர்மி, கோரி மற்றும் லோத் பிரிவினரில் குர்மி, கோரி, மற்றும் லோத் பிரிவினர், லோத் பிரிவைச் சேர்ந்த கல்யாண் சிங் தலைமையில் இயங்கிய பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக இருந்தனர்.

 உயர் ஜாதி பிராமணர், ஷத்திரியர் மற்றும் வைசியர்களும் சரி ஒட்டுமொத்தமாகவோ கணிசமாகவோ பாரதிய ஜனதாவின் ஆதரவாளர்களாக இல்லை. இவர்களில் கணிசமான பகுதியினர் காங்கிரஸின் ஆதரவாளர்களாக 1989-ல் தொடர்ந்தனர். இப்படி எல்லா ஜாதிப் பிரிவினரும் எல்லா கட்சிகளிலுமாகப் பிளவுபட்டுக் கிடந்ததால்தான் 1990 சட்டப்பேரவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் பாரதிய ஜனதாக் கட்சியின் ஆதரவுடன் ஜனதா தளத்தால் ஆட்சி அமைக்க முடிந்தது.

 தங்களைப் பிற்படுத்தப்பட்ட சமுதாயம் என்று சொல்லிக் கொள்வது கேவலம் என்று கருதும் பிற்படுத்தப்பட்ட சமுதாயமான ஜாட்டுகளும் ஜனதா தளத்தின் ஆதரவாளர்களாக இருந்ததால், ஜனதா தளம் மற்றும் பாரதிய ஜனதா கூட்டணியால் முலாயம்சிங் யாதவ் தலைமையில் உத்தரப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்க முடிந்தது. அதற்குப் பிறகு காங்கிரஸ் மீண்டும் அந்த மாநிலத்தில் தலைதூக்கவே முடியாமல் போய்விட்டது என்பது வேறு விஷயம்.

 உத்தரப் பிரதேசத்தின் சமூக அமைப்பு என்பது ஏறத்தாழ இந்தியாவிலுள்ள பெருவாரியான பகுதிகளின் அமைப்பைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது. நிலச்சுவான்தார்களாக இருக்கும் உயர் ஜாதியினர், அதிலும் குறிப்பாக ஷத்திரியர்கள், அடுத்தாற்போல பிராமணர்கள், நிலத்தை உழுது பயிரிடும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர், அந்த நிலத்தில் வேலை பார்க்கும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த விவசாயக் கூலிகள் என்பதுதான் இந்திய சமுதாயத்தின் அடிப்படை அமைப்பு.

 இந்தி பேசும் மாநிலங்களில் ஷத்திரியர்கள் அல்லது ஜமீன்தார்கள் பெரும் நிலச்சுவான்தார்களாக இருந்தனர் என்றால், மேற்கு மற்றும் தென் மாநிலங்களில் வேளாளர்களும், பிராமணர்களும் விவசாய நிலங்களின் உரிமையாளர்களாக இருந்தனர். இடைப்பட்ட சமுதாயத்தினர் என்று அழைக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயம் பல்வேறு ஜாதிப் பிரிவுகளாகப் பிரிந்திருந்து வடக்கு, தெற்கு என்கிற வித்தியாசமில்லாமல் உழுது பயிரிடும், நிலங்களின் குத்தகைதாரர்களாகவும் இருந்தது.

 பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் காணப்படும் பிரிவுதான், அந்தச் சமுதாயத்தை ஒரு வாக்கு வங்கியாகத் தனித்து இயங்க முடியாமல் செய்கிறது என்பதற்கு உத்தரப் பிரதேசமும் பிகாரும் உதாரணம். உயர் ஜாதியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் ஒன்றுபட்டால் சிறுபான்மையினர் ஆதரவு இல்லாமலே ஆட்சி அமைக்க முடியும் என்பதை கல்யாண் சிங் தலைமையில் 1991-ல் அமைந்த முதல் பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சி நிரூபித்தது. அதேபோல, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர், பிற்படுத்தப்பட்ட யாதவர்கள் மற்றும் சிறுபான்மையினர் கைகோர்த்தாலும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியும் என்பதை முலாயம்சிங் யாதவ் தலைமையில் அமைந்த சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ்கட்சி கூட்டணி 1993 தேர்தலில் நிரூபித்தது.

 அந்தத் தேர்தலில் முதன்முறையாக, பகுஜன் சமாஜ் கட்சி தாழ்த்தப்பட்டவர்களின் குரலைப் பிரதிபலிக்கும் ஒரு சக்தி வாய்ந்த கட்சியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது எனலாம்.

 ஏறத்தாழ இதே காலகட்டத்தில், பிகாரிலும் யாதவர், சிறுபான்மையினர் மற்றும் ராம்விலாஸ் பாஸ்வானின் தலைமையிலான "பாசி' எனும் தாழ்த்தப்பட்ட சமுதாயம் ஒரு பலமான கூட்டணியாக உருவெடுத்து ஆட்சியில் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. இப்படி ஜாதிகள் கூட்டணி அமைப்பது என்பது புதிய விஷயமல்ல. இப்படி சமுதாயப் பிரிவுகளை ஒருங்கிணைத்து ஒரு கூட்டணி வாக்கு வங்கி காங்கிரஸýக்கு ஆரம்ப காலத்தில் இயற்கையாகவே அமைந்தது என்றால் சமீபகாலமாக அதுபோன்ற கூட்டணிகளை அரசியல் தலைவர்கள் உருவாக்க முற்படுகிறார்கள்.

 எழுபதுகளில், கர்நாடகத்தில் இருந்த இரண்டு பெரிய ஜாதிப் பிரிவுகளான லிங்காயத்துகள் மற்றும் வொக்காலிகர்களை அகற்றி நிறுத்தி, ஏனைய சிறுபான்மை ஜாதிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் திரட்டி ஒரு பலமான கூட்டணி அமைத்த பெருமை தேவராஜ் அர்ஸýக்கு உண்டு. அதேபோல, எண்பதுகளில், "காம்' என்கிற வாக்கு வங்கிக் கூட்டணியைக் குஜராத்தில் அமைத்தவர் அன்றைய குஜராத் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான மாதவ்சிங் சோலங்கி என்பவர்.

 ஷத்திரியர், ஹரிஜன், ஆதிவாசி மற்றும் முஸ்லிம் என்கிற ஆங்கில வார்த்தைகளின் முதல் எழுத்தைக் கோர்த்ததுதான் "காம்' (ஓஏஅங) என்கிற மாதவ்சிங் சோலங்கியின் கூட்டணி. இதுபோன்ற கூட்டணிகள் எழுப்பும் மிகப்பெரிய கேள்வி என்ன தெரியுமா? இந்திய ஜனநாயகத்துக்கு இந்த ஜாதிகள் பலமா அல்லது பலவீனமா என்பதுதான்!

 தொடரும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.