முகப்பு
தமிழ்நாடு

மூடு விழாவை நோக்கி 180 நிலவள வங்கிகள்

பொன்னேரி, ஜூலை 1: தமிழகம் முழுவதும் உள்ள 180 நிலவள வங்கிகள் (கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள்) மூடு விழாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.  1904-ம் ஆண்டு திருவள்ளூர் மாவட

Updated On : 20 செப்டம்பர், 2012 at 4:35 PM
பகிர்:

பொன்னேரி, ஜூலை 1: தமிழகம் முழுவதும் உள்ள 180 நிலவள வங்கிகள் (கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள்) மூடு விழாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

 1904-ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருர் கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டது முதல் கூட்டுறவு சங்கம். அது தற்பொழுது 4500 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், 180 நிலவள வங்கிகள், 12 கூட்டுறவு கிராம வங்கி என படிப்படியாக வளர்ந்துள்ளது.

 இதில் கிராமப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது நிலத்தை சீர் செய்யவும், கிணறு வெட்ட, டிராக்டர் போன்ற பல்வேறு விவசாய உபகரணங்கள் வாங்க நீண்ட கால அடிப்படையில் கடன் வழங்க தொடங்கப்பட்டது நிலவள வங்கிகள். இந்த வங்கிகளுக்கு அனைத்து நிதி உதவிகளும் சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிதான் செய்து வருகிறது.

Advertisement

 வங்கிகளில் விவசாயிகள் பெற்றிருந்த ஏழாயிரம் கோடி ரூபாய் விவசாயக்கடனை கடந்த 2006-ம் ஆண்டு அரசு தள்ளுபடி செய்தது. இதில் நிலவள வங்கிக்கான கடன் தொகை மட்டும் ரூபாய் 1218கோடி ஆகும். தள்ளுபடி செய்யப்பட்ட இந்த தொகையை 5தவணைகளில் தமிழ்நாடு மாநில கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிக்கு அளிப்பதாக அரசு தெரிவித்தது.

 அதன்படி தற்பொழுது மூன்று தவணையிலான தொகை திரும்ப அளிக்கப்பட்டுள்ளது. அரசு அளித்த அந்த மூன்று தவணையிலான தொகை இதுவரை எந்தவொரு நிலவள வங்கிக்கும் திரும்ப அளிக்கப்படவில்லை. மேலும் இவ்வங்கியில் விவசாயகடன்கள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதால் இவ்வங்கிகள் முற்றிலுமாக வருவாய் ஈட்டும் சக்தியை இழந்துள்ளது.

 இதன் காரணமாக வங்கி மெல்ல மெல்ல மூடு விழாவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.

 வங்கி மூடு விழாவை நோக்கி சென்று கொண்டிருப்பது குறித்து நிலவள வங்கிகளின் ஊழியர் சங்க மாநிலச் செயலர் செ.து ரோசு கூறுகையில், ""தற்பொழுது தமிழகம் முழுதும் உள்ள நிலவள வங்கிகள் பெயர் அளவில் மட்டுமே உள்ளது.

 வங்கியில் விவசாயக்கடன்கள் வழங்கப்படாததால் வங்கி நலிவடைந்து வங்கியில் பணிபுரியும் மொத்த ஊழியர்கள் 700பேரில் 300பேருக்கு கடந்த 10மாதமாக சம்பளம் கூட வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 இதனால் அந்த 300 பேரின் குடும்பம் வறுமையில் வாடி வருகிறது.

 நலிவடைந்துள்ள இவ்வங்கிக்கு நிதி பயன்கள் அளித்து புத்துணர்வு ஊட்ட கோரியும், இதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க கோரியும் வருகிற ஜூலை மாதம் 3-ம் தேதி தமிழகம் முழுதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக'' தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.