விதை நெல்லுக்கான அரசு மானியம் நிறுத்தம்: விவசாயிகள் விரக்தி
சிதம்பரம், ஜூலை 24: விவசாயிகளுக்கு அரசு வேளாண்மை அலுவலகங்களில் விதைநெல்லுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத் தொகை திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் சித
சிதம்பரம், ஜூலை 24: விவசாயிகளுக்கு அரசு வேளாண்மை அலுவலகங்களில் விதைநெல்லுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத் தொகை திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுக்காக்களில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் இல்லாததால் பெரும்பாலான விவசாயிகள் அச் சாகுபடியில் ஈடுபடவில்லை.
அதிக நிலம் வைத்துள்ள பெருநிலக்கிழார்கள் மட்டும் போர்வெல் மூலம் குறுவை சாகுபடி செய்தனர்.
Advertisement
இந் நிலையில் மேட்டூரில் ஆகஸ்ட் 7-ம் தேதி தண்ணீர் திறப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் சம்பா சாகுபடிக்கான ஆயத்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பா சாகுபடிக்காக தற்போது விதைவிடும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயிகளுக்கு வேளாண்மை அலுவலகங்கள் மூலம் ரகங்கள் வாரியாக ரூ.20 முதல் ரூ.26 வரை ஒரு கிலோ விதை விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கு அரசு மானியமாக கிலோ ஒன்றுக்கு ரூ.3 வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் இந்த ஆண்டு விதைக்கு மானியத் தொகை வழங்கப்படாமல் தனியார் விலையில் விதைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இது, விவசாயிகள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து உதவி வேளாண்மை அலுவலரை தொடர்பு கொண்டு கேட்டால், "இந்த ஆண்டிற்கு எங்களுக்கு மானியம் வழங்குமாறு எந்த உத்தரவும் வரவில்லை.
தற்போது உள்ள புதிய நெல் ரகங்களுக்கு மட்டுமே மானியம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள ரகங்களுக்கு மானியம் வழங்க எந்த உத்தரவும் எங்களுக்கு கிடையாது' எனத் தெரிவித்தார்.
ஆனால் எந்தரக விதைகளுக்கும் மானியத் தொகை வழங்கப்படவில்லை.
""இந்த ஆண்டு மானியம் வழங்க அரசு உத்தரவு வரவில்லை'' என அதிகாரிகள் சாக்குபோக்கு சொல்வதாக விவசாயிகள் சங்கத் தலைவர் கே.வி.இளங்கீரன் புகார் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழக அரசு இது குறித்து விசாரணை மேற்கொண்டு விவசாயிகளுக்கு தொடர்ந்து மானியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இளங்கீரன் கோரிக்கை விடுத்துள்ளார்.