முகப்பு
தமிழ்நாடு

எம்.பி.பி.எஸ். அட்மிஷன் கட்டண நடைமுறையில் மாற்றம்

சென்னை, ஜூன் 15: அரசு எம்.பி.பி.எஸ். இடத்தை மாணவர்கள் வீணாக்காமல் இருக்கும் வகையில் இந்த ஆண்டு அட்மிஷன் கட்டண நடைமுறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.   இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்., பி.இ. படிப்பில் சேர

Updated On : 20 செப்டம்பர், 2012 at 6:12 PM
பகிர்:

சென்னை, ஜூன் 15: அரசு எம்.பி.பி.எஸ். இடத்தை மாணவர்கள் வீணாக்காமல் இருக்கும் வகையில் இந்த ஆண்டு அட்மிஷன் கட்டண நடைமுறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

  இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்., பி.இ. படிப்பில் சேர மாணவர்களிடையே கடும் போட்டி உள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட சிறந்த பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர்களிடையே ஒவ்வொரு 0.25 மதிப்பெண்ணுக்கும் கடும் கட் - ஆஃப் மதிப்பெண் போட்டி ஏற்பட்டுள்ளது.

  அட்மிஷன் கட்டணத்தில் மாற்றம் என்ன? கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், கவுன்சலிங்குக்கு வரும்போது "பிராஸஸிங்' கட்டணம் ரூ.500 உள்பட மொத்தம் ரூ.2,500-க்கு மட்டுமே டி.டி. எடுத்து வந்தனர். இதனால் எம்.பி.பி.எஸ். கவுன்சலிங்கில் கலந்து கொண்டு விட்டு, முன் கட்டணத் தொகையைப் பற்றிக் கவலைப்படாமல் பி.இ. படிப்பில் மாணவர்கள் சேர்ந்து வந்தனர். இவ்வாறு காலியாகும் இடங்கள், இறுதியில் அதே கட்-ஆஃப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மூலம் நிரப்பப்பட்டு வந்தன.

Advertisement

  ஆனால், இந்த ஆண்டு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் எம்.பி.பி.எஸ். கவுன்சலிங்குக்கு கலந்து கொள்ள வரும்போதே, மருத்துவக் கல்லூரி கல்விக் கட்டணமாக ரூ.8,500-க்கு டி.டி.-யும், "பிராஸஸிங்' கட்டணமாக ரூ.500-க்கு டி.டி.-யும் எடுத்து வர வேண்டும். எம்.பி.பி.எஸ். படிப்பில் சேராமல், பி.இ. உள்ளிட்ட வேறு படிப்பை அந்த மாணவர் தேர்வு செய்யும் நிலையில் மேலே குறிப்பிட்ட ரூ.8,500 டி.டி. தொகை மற்றும் ரூ.500 டி.டி. தொகை திருப்பித் தரப்பட மாட்டாது என மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

  சுயநிதி மருத்துவக் கல்லூரி ஒதுக்கீட்டுக்கும்...: தமிழகத்தில் உள்ள மேல்மருவத்தூர் ஸ்ரீ ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட நான்கு சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 251 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.

  மேலே குறிப்பிட்ட சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களில் சேர விரும்பும் மாணவர்கள் கவுன்சலிங்குக்கு மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்துக்கு வரும்போது ரூ.25,000-த்துக்கு (கடந்த ஆண்டு வரை இது ரூ.5,000-மாக இருந்தது.) டி.டி. எடுத்து வர வேண்டும் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  மாணவர்கள் சம்பந்தப்பட்ட சுயநிதி மருத்துவக் கல்லூரியில் சேரும்போது, கல்விக் கட்டணத் தொகையில் ரூ.25,000 கழித்துக் கொள்ளப்படும் என மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஒரே சீராக...: "அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் ஒரே சீரான கட்டண நடைமுறையை அமல்படுத்த எம்.பி.பி.எஸ். கவுன்சலிங்கின் போதே ரூ.8,500 டி.டி. வாங்க முடிவு செய்யப்பட்டது.

  மாணவர்கள் குறிப்பிட்ட கல்லூரியில் சேர்ந்தவுடன், மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்திலிருந்து இந்தக் கட்டணம் தொடர்புடைய கல்லூரிக்கு அனுப்பப்படும்' என்றார் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி.

11,364 விண்ணப்பங்கள் குவிந்தன

சென்னை, ஜூன் 15:   தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர இதுவரை மொத்தம் 11,364 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

  சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, சேலம், கோவை உள்பட 15 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,483 எம்.பி.பி.எஸ். இடங்களில் மாணவர்களைச் சேர்க்க கடந்த ஜூன் 3 முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. விண்ணப்பத்தைப் பெறவும் சமர்ப்பிக்கவும் ஜூன் 17-ம் தேதி கடைசி நாளாகும்.

சிறப்பு ஒதுக்கீடுகள்: மொத்தம் உள்ள 1,483 எம்.பி.பி.எஸ். இடங்களில் உடல் ஊனமுற்றோர் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு 45, விளையாட்டில் சிறந்து விளங்குவோருக்கு 3, முன்னாள் ராணுவ வீரர் வாரிசுகளுக்கு 3, பாதுகாப்புப் படை வீரர் வாரிசுகளுக்கு 2 என மொத்தம் 53 இடங்கள் உள்ளன. இதில் உடல் ஊனமுற்றோர் உள்பட சிறப்புப் பிரிவினருக்கு உரிய 45 இடங்களுக்கு 250 மாணவர்கள் இதுவரை விண்ணப்பித்துள்ளனர்.

   விளையாட்டில் சிறந்து விளங்குவோருக்கு உரிய 3 இடங்களுக்கு 64 மாணவர்கள் இதுவரை விண்ணப்பித்துள்ளனர்.

  சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் வரும் 28-ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படுகிறது. எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க வரும் ஜூலை 6-ம் தேதி கவுன்சலிங் தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.