சுயநிதி மருத்துவக் கல்லூரிகளை அரசு நிர்பந்திக்குமா?
சென்னை, ஜூன் 21: தமிழகத்தில் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு உரிய கட்டணத்தை நீதிபதி பாலசுப்பிரமணியன் குழு விரைவில் அறிவிக்க உள்ளது. தமிழக மருத்துவக் கல்
சென்னை, ஜூன் 21: தமிழகத்தில் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு உரிய கட்டணத்தை நீதிபதி பாலசுப்பிரமணியன் குழு விரைவில் அறிவிக்க உள்ளது.
தமிழக மருத்துவக் கல்லூரிகள், மருத்துவ பல்கலைக்கழகங்களில் எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க ரூ.20 லட்சம் முதல் ரூ.45 லட்சம் வரை நன்கொடை கேட்பது தேசிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
இந்த நிலையில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு நிர்ணயிக்கப்படும் கட்டணத்தை மட்டுமே, மீதமுள்ள தங்களது நிர்வாக எம்.பி.பி.எஸ். இடத்துக்கும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் வாங்க வேண்டும் என நீதிபதி குழு மூலம் தமிழக அரசு வலியுறுத்துமா எனக் கேள்வி எழுந்துள்ளது.
சுயநிதி கல்லூரிகள் - அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் எவ்வளவு?
சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, சேலம், கோவை உள்பட 15 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 1,483 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவன் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு ஆண்டுக் கட்டணமாக ரூ.10,495 செலுத்தினால் போதும்.
மேல்மருவத்தூர் ஸ்ரீ ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி (150 இடங்கள்), கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி (150 இடங்கள்), கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி (100 இடங்கள்), ஈரோடு மாவட்டம் பெருந்துறை சாலைப் போக்குவரத்து நிறுவன (ஐ.ஆர்.டி.) மருத்துவக் கல்லூரி (60 இடங்கள்) என மொத்தம் 460 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் நான்கு சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரின் கட்டுப்பாட்டில் உள்ளன.
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் பல்கலைக்கழக அந்தஸ்து இல்லாத சுயநிதி பொறியியல் கல்லூரிகளும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளும் தங்களது மொத்த இடங்களில் 65 சதவீதத்தை அரசு ஒதுக்கீட்டுக்கு அளிக்கின்றன. மீதமுள்ள 35 சதவீதத்தை தங்களது இஷ்டத்துக்கு லட்சக்கணக்கில் கட்டணம் நிர்ணயித்து அவை நிரப்பிக் கொள்கின்றன.
அரசு ஒதுக்கீட்டுக்கு உரிய 65 சதவீத அடிப்படையில், மேல்மருவத்தூர் ஸ்ரீ ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியிலிருந்து 97 எம்.பி.பி.எஸ். இடங்கள், கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியிலிருந்து 97 எம்.பி.பி.எஸ். இடங்கள், பெருந்துறை ஐ.ஆர்.டி. மருத்துவக் கல்லூரியிலிருந்து 39 எம்.பி.பி.எஸ். இடங்கள், குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரியிலிருந்து 50 எம்.பி.பி.எஸ். இடங்கள் (இந்தக் கல்லூரி சிறுபான்மை அந்தஸ்தைப் பெற்றுள்ளதால், 50 சதவீத இடங்களை மட்டுமே அரசு ஒதுக்கீட்டுக்கு அளிக்கும்.) என மொத்தம் 283 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கும்.
அரசு ஒதுக்கீட்டுக்கு அளித்தது போக, மீதமுள்ள மொத்தம் 177 இடங்களை சுயநிதி மருத்துவக் கல்லூரி நிர்வாகமே நிரப்பிக் கொள்வது வழக்கமாக உள்ளது. அதாவது மேல்மருவத்தூர் ஸ்ரீ ஆதிபராசக்தி மற்றும் கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியில் தலா 53 நிர்வாகத் தரப்பு இடங்கள், பெருந்துறை ஐ.ஆர்.டி. மருத்துவக் கல்லூரியில் 21 நிர்வாக இடங்கள், குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரியில் 50 நிர்வாக இடங்கள் உள்ளன.
அரசு ஒதுக்கீட்டு பி.இ., எம்.பி.பி.எஸ். இடத்துக்கான கட்டணத்தை ஒவ்வொரு ஆண்டும் அரசு உயர் அதிகாரிகளை உள்ளடக்கிய நீதிபதி குழு தீர்மானித்து அறிவிப்பது வழக்கமாக உள்ளது. அரசு ஒதுக்கீட்டு பி.இ. இடத்தைப் பொருத்தவரை நீதிபதி குழு கடந்த ஆண்டு அறிவித்த கட்டணத்தில் மாற்றம் இல்லை என அண்மையில் அறிவிக்கப்பட்டு விட்டது.
எம்.பி.பி.எஸ்.-க்கு எவ்வளவு?
மேலே குறிப்பிட்ட சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் ஒரு அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டண விவரம்: மேல்மருவத்தூர் ஸ்ரீ ஆதிபராசக்தி - ரூ.2.5 லட்சம்; கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி - ரூ.2.25 லட்சம்; குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகை - ரூ.2.30 லட்சம்; பெருந்துறை ஐ.ஆர்.டி. மருத்துவக் கல்லூரி - ரூ.1.30 லட்சம்.
இந்த ஆண்டுக்கான கட்டணத்தை நீதிபதி பாலசுப்பிரமணியன் குழு விரைவில் அறிவிக்க உள்ள நிலையில், கட்டணத்தை உயர்த்தி அறிவிக்குமாறு சுயநிதி மருத்துவக் கல்வி நிர்வாகங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதாகத் தெரிகிறது. உதாரணமாக மேல்மருவத்தூர் ஸ்ரீ ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி ஆண்டுக் கட்டணத்தை ரூ.3.25 லட்சமாக (கடந்த ஆண்டு ரூ.2.50 லட்சம்) அதிகரிக்குமாறு கோரியுள்ளதாகத் தெரிகிறது.
நன்கொடை சட்ட விரோதம்:
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, தமிழ்நாடு நன்கொடை தடுப்புச் சட்டம் 1992 ஆகியவற்றின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் உள்பட கல்வி நிறுவனங்களில் நன்கொடை கேட்பது சட்டவிரோதமானது.
அரசு ஒதுக்கீட்டுக்கு ஒரு இடத்தைக்கூடத் தராத மருத்துவ பல்கலைக்கழகங்கள் நன்கொடை வாங்குவது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது; இந்த நிலையில் தங்களது நிர்வாகத் தரப்பு இடங்களுக்கு நன்கொடை வசூலிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ள சுயநிதி மருத்துவக் கல்லூரிகளையும் நீதிபதி குழு மூலம் தமிழக அரசு தடுக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தினர்.