முகப்பு
தமிழ்நாடு

கனவாகத் தொடரும் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள்

சென்னை, மே 18: தமிழகத்தில் இந்த ஆண்டு திருவாரூர், விழுப்புரத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படுவதற்கு வாய்ப்பில்லை என்பதை இந்திய மருத்துவக் கவுன்சில் உறுதிப்படுத்திவிட்டது.   திருவாரூர்

Updated On : 25 டிசம்பர், 2023 at 2:00 PM
பகிர்:

சென்னை, மே 18: தமிழகத்தில் இந்த ஆண்டு திருவாரூர், விழுப்புரத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படுவதற்கு வாய்ப்பில்லை என்பதை இந்திய மருத்துவக் கவுன்சில் உறுதிப்படுத்திவிட்டது.

  திருவாரூர், விழுப்புரத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும் என 2 ஆண்டுகளுக்கு முன் திமுக அரசு செய்த அறிவிப்பு செயல் வடிவம் பெறாத நிலை தொடர்கிறது.

  திருவாரூரில் 39.25 ஏக்கரில் ரூ.92 கோடியில் மருத்துவக் கல்லூரி தொடங்கத் திட்டமிடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பெரும் திட்ட வளாகத்தில் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை கட்டுவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

  மருத்துவமனையை ஓர் இடத்திலும் மருத்துவக் கல்லூரியை வேளாண் விற்பனைக் கூடம் உள்ள வேறு ஓர் இடத்திலும் அமைக்க தமிழக அரசு செய்த முயற்சிக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் கடந்த ஆண்டு ஒப்புதல் அளிக்கவில்லை.

  இதையடுத்து மருத்துவக் கல்லூரி, 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை இரண்டையும் மாவட்ட ஆட்சியர் பெரும் திட்ட வளாகத்தில் கட்டும் பணிகள் நடைபெறுகின்றன.

வழக்கில் தொடங்கிய விழுப்புரம்: விழுப்புரத்தில் மருத்துவக் கல்லூரி- மருத்துவமனை கட்ட அரசு தேர்வு செய்த இடம் முதலில் சர்ச்சைக்குள்ளாகி, உயர் நீதிமன்றம் வரை வழக்கு சென்றது. ஒரு வழியாக வழக்கு முடிவுக்கு வந்து, 45 ஏக்கரில் ரூ.97 கோடியில் மருத்துவக் கல்லூரி- மருத்துவமனையைக் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

15 அரசு மருத்துவக் கல்லூரிகள்: தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருச்சி, மதுரை, கோவை, தர்மபுரி உள்பட 15 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 1,483 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.

  இவ்வளவு குறைவான இடங்களுக்கு ஆண்டுதோறும் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர மொத்தம் 14 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பிப்பதால், ரேங்க் பட்டியலில் கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கு கடும் போட்டி தொடர்கிறது. மேலும் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். ஆண்டுக் கட்டணம் ரூ.10,584-தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடரும் ஆசிரியர் பற்றாக்குறை: அரசு மருத்துவக் கல்லூரி பற்றாக்குறை ஒருபுறம் இருக்க, "அனாடமி', "பிசியாலஜி', "பயோ கெமிஸ்ட்ரி', "ஃபாரன்சிக் மெடிசின்' போன்ற அடிப்படை மருத்துவ அறிவியல் படிப்புகளைப் போதிக்கும் மருத்துவப் பேராசிரியர் பற்றாக்குறையும் தொடர்கிறது.

  ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்க அரசு மருத்துவப் பேராசிரியர்களுக்கு அதிக ஊதியம், ஓய்வு பெறும் வயதை அதிகரித்தல் ஆகிய முக்கியப் பரிந்துரைகளை தமிழக அரசுக்கு சுகாதாரத் துறை செய்துள்ளது. இந்தப் பரிந்துரைகள் குறித்து முடிவு எதுவும் எடுக்க முடியாத நிலையில் நிதித் துறை உள்ளது.

  "அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.எஸ். அனாடமி உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்பு முடிப்போர் 3 ஆண்டுகளுக்கு அரசுப் பணியில் தொடர வேண்டும்' என தமிழக அரசு விதித்த நிபந்தனையையும் டாக்டர்கள் நீதிமன்றம் சென்று முறியடித்து விட்டனர்.

  ஏனெனில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளம் கிடைப்பதே இதற்குக் காரணம்.

  "வரும் காலங்களில் கட்டடங்களைக் கட்டி புதிய மருத்துவக் கல்லூரிகளை அரசு திறந்தாலும், மருத்துவப் பேராசிரியர் பற்றாக்குறையைப் போக்க நிரந்தரத் தீர்வைக் காணாதவரை அவை செயல்பட இந்திய மருத்துவக் கவுன்சிலின் அனுமதி கிடைக்காது. எனவே இந்த விஷயத்தில் முதல்வர் கருணாநிதி தனிக் கவனம் செலுத்துவது அவசியம்' என்பது கல்வியாளர்களின் கருத்து.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். கட்டணம்

தமிழகத்தில் உள்ள 15 அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டு எம்.பி.பி.எஸ். கட்டண விவரம்: 

    கல்விக் கட்டணம்    4,000

    தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலை. பதிவுக் கட்டணம் 3,825

    டெபாசிட் தொகை    1,000

    நூலகக் கட்டணம்     1,000

    சிறப்புக் கட்டணம்     500

    குழு இன்சூரன்ஸ்     170

    பிணை     50

    பிளஸ் 2 மதிப்பெண் சரி பார்ப்பு 20

    இளம் செஞ்சிலுவைச் சங்கம்     10

    கொடி நாள்     5

    என்எஸ்எஸ்     4

    மொத்த கட்டணம்     10,584

முழு கட்டுரையைப் படிக்க →