முகப்பு
தமிழ்நாடு

விழுப்புரம்- மயிலாடுதுறை அகலப்பாதை ஜனவரியிலாவது ரயில்கள் இயக்கப்படுமா?

சிதம்பரம், அக். 13:    விழுப்புரம்- மயிலாடுதுறை தடத்தில் 2009-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலாவது ரயில்கள் இயக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. விழுப்புரம் - மயிலாடுதுறை தடத்தில் 122 கி.மீ. தொலைவிலான மீட்டர

Updated On : 25 டிசம்பர், 2023 at 3:57 PM
பகிர்:

சிதம்பரம், அக். 13:    விழுப்புரம்- மயிலாடுதுறை தடத்தில் 2009-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலாவது ரயில்கள் இயக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

விழுப்புரம் - மயிலாடுதுறை தடத்தில் 122 கி.மீ. தொலைவிலான மீட்டர் கேஜ் பாதை அகற்றப்பட்டு, ரூ.270 கோடியில் அகல பாதை அமைக்கும் பணி கடந்த 2006-ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கப்பட்டு, 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் முடிந்தபாடில்லை.

ரயில்வே விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் தற்போது 122 கி.மீ. பாதை அமைக்கும் பணி மட்டும் முடிவுற்றுள்ளது. கெடிலம், பெண்ணையாறு, வெள்ளாறு, கொள்ளிடம் ஆகிய 4 பெரிய ஆறுகளின் குறுக்கே பாலம் அமைக்கும் பணிகளும் முடிவுற்று, என்ஜின் சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது.

Advertisement

இருப்பினும், ரயில் நிலைய கட்டட கட்டுமானப் பணி, நடைமேடை, சிக்னல் அமைப்பு பணி உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவதால், குறிப்பிட்ட காலத்தில் ரயில்களை இயக்குவதில் தாமதம் ஏற்படலாம் என கூறப்படுகிறது. அகல ரயில் பாதை பணிகள் தொடங்கியதுமே மீட்டர் கேஜ் பாதையில் ஓடிக்கொண்டிருந்த ரயில்கள் நிறுத்தப்பட்டன. முதற்கட்டமாக, சீர்காழி- மயிலாடுதுறை இடையே 22 கி.மீ. தொலைவில் பாதை அமைக்கும் பணி முடிவடைந்ததும் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

2-வது கட்டமாக விழுப்புரம்- கடலூர் இடையே 48 கி.மீ. வரை பாதை அமைக்கும் பணி நிறைவடைந்ததை அடுத்து, கடந்த மே மாதம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. பின்னர், 3-வது கட்டமாக கடலூர்- சீர்காழி வரை 52 கி.மீ. பாதை அமைக்கும் பணி நிறைவடைந்ததும், ஜூலை 31-ல் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

ஆனால், அதன் பின்னர் இன்று வரை இப்பாதையில் ரயில்கள் இயக்கப்படவில்லை.

விழுப்புரம் அருகே பெண்ணையாற்றில் 700 அடி நீள பாலமும், கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் 1600 அடி நீள பாலமும், பரங்கிப்பேட்டை அருகே வெள்ளாற்றின் குறுக்கே 800 அடி நீள பாலமும், சிதம்பரம் அருகே கொள்ளிடத்தில் 2100 அடி நீள பாலமும் கட்டப்பட்டுள்ளன. மேலும், 128 சிறிய பாலங்களும் கட்டப்பட்டுள்ளன. இருப்பினும், 15 ரயில் நிலைய கட்டடங்களில் 60 சதவீதப் பணிகள்தான் முடிந்துள்ளனவாம். குறிப்பாக, சிதம்பரம் ரயில் நிலைய கட்டுமானப் பணிகளும், நடைமேடை அமைக்கும் பணிகளும் முடிவுறவில்லை.

இதன் காரணமாக வரும் ஜனவரி மாதம் முதல் விழுப்புரம்- மயிலாடுதுறை அகல ரயில் பாதையில் ரயில்கள் இயக்கப்படுமா? என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஜனவரியில் ரயில்களை இயக்க தென்னக ரயில்வே நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்கிறார் ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் சி.டி. அப்பாவு.

"பணிகள் விரைவில்  முடிவடையும்'

மயிலாடுதுறை, அக். 13:   மயிலாடுதுறை - விழுப்புரம் அகல ரயில் பாதை பணி வருகிற டிசம்பர் மாத இறுதிக்குள் முடிவடையும் என்று தெரிவிக்கிறார் தெற்கு ரயில்வே பொது மேலாளர் எஸ்.எம்.ஜெயந்த். மயிலாடுதுறை - விழுப்புரம் அகல ரயில் பாதைப் பணி குறித்து ஆய்வு மேற்கொள்ள திங்கள்கிழமை மயிலாடுதுறைக்கு வந்த அவர் அளித்த பேட்டி:

மயிலாடுதுறை அகல ரயில் பாதை அமைக்கும் பணியின் ஒரு பகுதியாக ரயில் நிலையங்களில் போதிய அடிப்படை வசதிகள் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப் பணிகள் அனைத்தும் விரைவில் முடிவடையும். மேலும், ரயில் நிலையங்களில் நடைபெறும் கட்டுமானப் பணிகளும் விரைந்து முடிக்கப்படும். கொள்ளிடம் ஆற்றில் கடினமான பாறைகள் உள்ளதால் பாலம் கட்டும் பணி தாமதமாகிறது. ஆனால், இப்பணிகள் வருகிற டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு, ரயில் போக்குவரத்து தொடங்குவதற்கான நடவடிக்கைள் எடுக்கப்படும் என்றார் ஜெயந்த்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments