ஏழைகளுக்கு எட்டாத நவீன மயம்!
சென்னை, அக்.25: சொகுசு பஸ்கள், "ஏ.சி.' பஸ்கள், டிஜிட்டல் டிஸ்பிளே பலகை, ஜி.பி.எஸ். சிஸ்டம் என பல கோடி ரூபாய் மதிப்பிலான எண்ணற்ற நவீனமயங்களை மாநகர போக்குவரத்துக் கழகம் செய்து கொண்டே போகிறது. புது பஸ்கள
சென்னை, அக்.25: சொகுசு பஸ்கள், "ஏ.சி.' பஸ்கள், டிஜிட்டல் டிஸ்பிளே பலகை, ஜி.பி.எஸ். சிஸ்டம் என பல கோடி ரூபாய் மதிப்பிலான எண்ணற்ற நவீனமயங்களை மாநகர போக்குவரத்துக் கழகம் செய்து கொண்டே போகிறது.
புது பஸ்கள் வர வர, குறைந்தபட்ச கட்டணமாக ரூ. 2 என்ற அளவில் வசூலிக்கப்படும் சாதாரண பஸ்களே இல்லாமல் போய்விடும், வெகு விரைவில் இந்த நிலை உருவாகும் என்கிறார் மாநகர போக்குவரத்து கழக நிர்வாகப் பணியாளர் சங்க நிர்வாகி ஒருவர்.
மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 3,084 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் தினந்தோறும் 43.55 லட்சம் மக்கள் பயணம் செய்கின்றனர். இதில் 70 சதவீதத்தினர் ஏழை மற்றும் நடுத்தர மக்கள்.
Advertisement
2005-ம் ஆண்டு மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்பட்ட 2,500 பேருந்துகளில், 1,500-க்கும் மேற்பட்ட பஸ்கள் சாதாரண கட்டண பஸ்கள். ஆனால், இப்போது 3,084 பஸ்களில் 600 பஸ்கள் மட்டுமே சாதாரணக் கட்டண பஸ்கள்.
மற்ற 2,484 பஸ்களும் வண்ண வண்ண பலகைகளைக் கொண்ட எல்.எஸ்.எஸ். (350), "எம்' சர்வீஸ் (700), டீலக்ஸ் (850), "ஏ.சி.' பஸ்கள் (30) என்ற பெயர்களில் விடப்பட்டிருக்கும் அதிகக் கட்டண பஸ்கள். எல்.எஸ்.எஸ். பஸ்ஸில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.2.50-ம், "எம்' சர்வீஸ் பஸ்களில் ரூ. 3-ம், டீலக்ஸ் பஸ்களில் ரூ. 5-ம் குறைந்தபட்சக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்த மறைமுகக் கட்டண உயர்வு போதாதென்று, டிஜிட்டல் டிஸ்பிளே சிஸ்டம், ஜி.பி.எஸ். உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை மாநகரப் போக்குவரத்துக் கழகம் புகுத்தி வருகிறது.
ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தின் மூலம் எந்த இடத்தில் பஸ் வந்து கொண்டிருக்கிறது என்று அறிந்து வழித்தடத்தில் ஏதாவது பிரச்னை என்றால், கட்டுப்பாட்டு அறையிலிருந்து உடனடியாக ஓட்டுனரை தொடர்புகொண்டு தீர்வு காண முடியும்.
இந்தக் கருவி ஒன்றின் விலை ரூ. 15,990. இந்தத் தொழில்நுட்பத்தைத் தொடர்ந்து பராமரிப்பதற்காக ஒப்பந்தக் காலம் முடியும் வரை கருவி பொருத்திய நிறுவனத்துக்கு மாதம் ரூ. 650 வரை மாநகரப் போக்குவரத்துக் கழகம் கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்த நவீனமயங்கள் நடைமுறைக்கு வந்தால் பஸ் கட்டணம் மேலும் உயர்த்தப்படும் அபாயம் உள்ளது.
சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் டிஜிட்டல் டிஸ்பிளே சிஸ்டம், பயணிகளிடம் வரவேற்பைப் பெறவில்லை என்பதுதான் உண்மை. தலா ரூ. 75 லட்சம் மதிப்புடைய "ஏசி' வால்வோ பஸ்கள், அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் இருவர் மட்டுமே பயணம் செய்கின்றனர். வசூல் இலக்கான ரூ. 18 ஆயிரத்தை எட்ட முடியாமல் தொடர்ந்து நஷ்டத்தில் "ஏ.சி.' பஸ்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. இதுபோல் ஜி.பி.எஸ். சிஸ்டமும் அவசியம் இல்லாதது என்கின்றனர் பஸ் ஓட்டுனர்கள்.
""சோதனை அடிப்படையில் கட்டுப்பாட்டு அறையில் இருந்து இந்தக் கருவி மூலம் தொடர்பு கொண்டனர். பஸ்ûஸ ஓரமாக நிறுத்திவிட்டுத்தான் பேச வேண்டியுள்ளது. ஓட்டிக்கொண்டே பேசும்போது, கவனம் சிதறுகிறது. அவசரமாக பஸ்ûஸ ஓட்டிக்கொண்டிருக்கும்போது, இதையும் கவனிப்பது சிரமமாக உள்ளது.
வழித்தடத்தில் பிரச்னை ஏற்படும்போது, இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உடனடியாக நிவர்த்தி செய்து கொள்ளலாம். இது ஒன்றுதான் முக்கிய பயன். இந்த ஒரு பயனுக்காக இத்தனை கோடிகள் செலவழிப்பது வீண். வழித்தடத்தில் எப்போதாவது ஒரு முறைதான் பஸ் பிரச்னைக்கு உள்ளாகும். இதைத் தொலைபேசி அல்லது செல்பேசி மூலம் சரி செய்து கொள்ளலாம்.
இதற்குப் பதிலாக சாதாரண கட்டண பஸ்களின் எண்ணிக்கையைக் கூட்டுவது, இரவு நேர பஸ் சேவையை மேலும் மேம்படுத்துவது உள்ளிட்ட பயனளிக்கும் சேவைகளை போக்குவரத்துக் கழகம் மேற்கொள்ளலாம்'' என்று 21 ஜி வழித்தட ஓட்டுனர் ஒருவர் கூறினார்.
பஸ்களின் பின் கண்ணாடியிலும் பஸ் நிறுத்தங்களையும் மறைத்து இப்போது அமைத்துள்ள விளம்பரங்கள் மூலம், போக்குவரத்துத் துறைக்கு பல கோடி ரூபாய் லாபம் வருகிறது.
இதைப் போன்ற பணிகள் மூலம் வருவாயைப் பெருக்கி, சாதாரண கட்டண பஸ்களை அதிகம் விட்டு ஏழைகளின் நிதிச் சுமையைக் குறைக்கும் வேலையில் எம்.டி.சி. அக்கறை காட்ட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.
2005 - ம் ஆண்டு
இயக்கப்பட்ட மாநகர பேருந்து - 2,500
சாதாரண கட்டண பேருந்து - 1,500
2009 - ம் ஆண்டு
இயக்கப்பட்ட மாநகர பேருந்து - 3,084
சாதாரண கட்டண பேருந்து - 600