மதுரை, செப்.11: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் திருச்சிக்கு அடுத்தபடியாக மதுரையில் இருந்து திருப்பதிக்கு குளிர் சாதன வசதி கொண்ட நவீன சொகுசுப் பேருந்து சனிக்கிழமை முதல் இயக்கப்படுகிறது.
இது குறித்து அதன் மதுரை கிளை மேலாளர் ஏ.சிங்காரவேலன் வெள்ளிக்கிழமை கூறியதாவது: மதுரையில் இருந்து திருப்பதிக்கு குளிர் சாதன வசதி கொண்ட பேருந்து சனிக்கிழமை முதல் தினமும் மாலை 6.30 மணிக்கு இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் திருப்பதியில் இருந்து மதுரைக்கு தினமும் இரவு 7.15 மணிக்கு இந்தப் பேருந்து புறப்படுகிறது.
ஏற்கெனவே, மதுரையில் இருந்து திருப்பதிக்கு 3 நவீன சொகுசுப் பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. பொதுமக்களின் நலன்கருதி, அதில் ஒரு பேருந்து முழுமையான குளிர் சாதன வசதி செய்து மேலும் நவீனப்படுத்தப்பட்டு இயக்கப்படுகிறது. வழக்கமான நவீன சொகுசுப் பேருந்துகளில் 36 இருக்கைகள் மட்டுமே இருக்கும். ஆனால், இந்த குளிர் சாதன வசதி கொண்ட நவீன சொகுசுப் பேருந்து 44 இருக்கைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பேருந்துக்கான கட்டணம் ரூ.440 (முன்பதிவுக் கட்டணம் நீங்கலாக). சாதாரண பேருந்துக் கட்டணம் ரூ.285.
திருவனந்தபுரம், பெங்களூர், புதுவை மற்றும் தமிழகத்தில் சென்னை, திருப்பதி, ராமேசுவரம், ராமநாதபுரம், பழனி, தஞ்சை, நாகை, தூத்துக்குடி என 20-க்கும் மேற்பட்ட இடங்களில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக கிளைகள் உள்ளன. மேற்கண்ட எந்தக் கிளைகளில் உள்ள முன்பதிவு மையங்களிலும் மதுரையில் இருந்து திருப்பதிக்கு பயணம் செய்வதற்கு பொதுமக்கள் முன்பதிவு செய்யலாம். ஆனால், பயணத் தேதிக்கு 30 நாள்களுக்கு முன்னர்தான் முன்பதிவு செய்யமுடியும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.