முகப்பு
தமிழ்நாடு

இருட்டறையில் செஞ்சி நூலகம்...!

செஞ்சி, செப். 17: சொந்த கட்டடம் இருந்தும், போதிய வெளிச்சம் இல்லாத வாடகைக் கட்டடத்தில் தற்போது இயங்கி வருகிறது செஞ்சி கிளை நூலகம்.   செஞ்சியில் கிளை நூலகம் 1958-ல் தொடங்கப்பட்டு பல்வேறு இடங்களில் வாடகை

Updated On : 25 டிசம்பர், 2023 at 3:39 PM
பகிர்:

செஞ்சி, செப். 17: சொந்த கட்டடம் இருந்தும், போதிய வெளிச்சம் இல்லாத வாடகைக் கட்டடத்தில் தற்போது இயங்கி வருகிறது செஞ்சி கிளை நூலகம்.

  செஞ்சியில் கிளை நூலகம் 1958-ல் தொடங்கப்பட்டு பல்வேறு இடங்களில் வாடகைக் கட்டடங்களில் இயங்கி வந்தது. 37 ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்கி வந்த கிளை நூலகத்துக்கு, 1992-ல் செஞ்சி ஊராட்சி ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் வீ.ரங்கநாதன் செஞ்சி சந்தைதோப்பு பகுதியில் தனக்கு சொந்தமான 11 சென்ட் நிலத்தை வழங்கினார்.

  இதனையடுத்து ரூ.1.48 லட்சம் செலவில் 1993-ல் கட்டடம் கட்டப்பட்டு 1994-ல் திறக்கப்பட்டது. கட்டடம் முடிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டபோது மேல்தளம் தரமாக இல்லாததால் மழை பெய்யும் போது கட்டடத்தின் உள்ளே ஒழுகும் நிலையில் இருந்தது. மேலும் அடிப்படை வசதிகள், அலுவலக அறை, சுற்று சுவர் இன்றி தரமில்லாமல் கட்டிமுடிக்கப்பட்டு குறைபாடுகளுடன் ஒப்படைக்கப்பட்டது.

  மேல்தளம் ஒழுகியதால் அரிய பல நூல்கள் மழையில் நனைந்து வீணாகும் நிலை ஏற்பட்டது. இது குறித்து தினமணியில் ஜனவரி 2008-ல் செய்தி வெளியானது. இதனையடுத்து கிளை நூலகத்தை பராமரிக்க வேண்டியுள்ளதாகக் கூறி, கட்டி முடிக்கப்பட்ட 14 ஆண்டுகளிலேயே 15.1.2008 அன்று மீண்டும் வாடகை கட்டத்தில் நூலம் இயங்கியது. வாடகைக் கட்டடம் காற்றோட்டம் இல்லாமல், படிப்பதற்கு போதிய வெளிச்சம் இன்றி உள்ளது.

  தற்போது நூலகத்துக்கு 2 கணினிகள், நகல் எடுக்கும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. அவை போதிய இடவசதி இல்லாததால் வாசகர்கள் பயன்பாட்டுக்கு இயக்க முடியாமல் மூடி வைக்கப்பட்டுள்ளன. மேலும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படிப்புகளுக்கான நூல்கள் உள்ளிட்ட 30 ஆயிரம் நூல்கள் இங்கு போதிய இடவசதி இன்றி குவித்து வைக்கப்பட்டுள்ளன.

  தரமற்ற பழைய நூலக கட்டடத்தை இடித்து விட்டு 11 சென்ட் இடத்தில் புதிய நூலக கட்டடத்தை நூலகத் துறை விரைந்து கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இங்கு சிறுவர் பிரிவு, நூல்கள் அறை, வாசிப்பு அறை, இணையதள பிரிவு, குடிநீர், கழிப்பிட வசதி, பார்க்கிங் வசதி, சுற்றுச் சுவர் ஆகியவற்றை ஏற்படுத்தி தரவேண்டும் என்று செஞ்சி நகர வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →