முகப்பு
தமிழ்நாடு

கைவிரித்தது மத்திய அரசு, தாமதிக்குது மாநில அரசு; சிறார் தொழிலாளர்களுக்கு உணவு தருவது யார்?

ஈரோடு, ஏப்.1: சிறார் தொழிலாளர்களாகிய பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவினை மாநில அரசுகளே வழங்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.  தமிழக அரசு இதில் இறுதி முடிவு எடுக்காததால் தொண்டு நிறுவனங்களும் ஆசி

Updated On : 20 செப்டம்பர், 2012 at 12:35 PM
பகிர்:

ஈரோடு, ஏப்.1: சிறார் தொழிலாளர்களாகிய பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவினை மாநில அரசுகளே வழங்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.  தமிழக அரசு இதில் இறுதி முடிவு எடுக்காததால் தொண்டு நிறுவனங்களும் ஆசிரியர்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.

சிறார் தொழிலாளர் முறை முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் மத்திய அரசு 1995-ல்  தேசிய சிறார் தொழிலாளர் திட்டத்தை ஏற்படுத்தியது. நிறுவனங்களில் பணிபுரியும் சிறார் தொழிலாளர்கள் மீட்கப்பட்டு,  அவர்களுக்கு இந்த திட்டம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள சிறப்புப் பள்ளிகளில் கல்வி மற்றும் தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில் சேலம், கோவை, ஈரோடு, திருவண்ணாமலை, விருதுநகர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது. 534 பள்ளிகளில் சுமார் 25 ஆயிரம் சிறார் தொழிலாளர்கள் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி பெற்று வருகின்றனர். மத்திய அரசின் முழுமையான நிதி உதவியுடன் நடைபெற்றுவரும் இப் பள்ளிகளில் மாணவர்களுக்கு தினமும் மதிய உணவு வழங்கப்பட்டு வந்தது.

Advertisement

நிறுத்தப்பட்டது நிதி: இப்பள்ளி மாணவர்களின் மதிய உணவிற்கான நிதி ஒதுக்கீட்டினை கடந்த மார்ச் மாதத்துடன் மத்திய அரசு நிறுத்திவிட்டது. இப் பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கும் பொறுப்பினை ஏப்ரல் மாதம் முதல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மாநில அரசுகளை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.  

இப் பள்ளிகளின் மாணவர்களுக்கு எவ்வாறு மதிய உணவு அளிப்பது என்பது குறித்து தமிழக அரசு இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.  இந் நிலையில் மார்ச் 31-க்குப் பிறகு மாணவர்களுக்கு உணவு அளித்தால், அதற்கான செலவினை இத்திட்ட நிதியிலிருந்து அளிக்க முடியாது என்று தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட மாவட்ட திட்ட அதிகாரிகள், பள்ளிகளை நிர்வகிக்கும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஆசிரியர்களிடம் தெரிவித்துவிட்டனர்.

மதிய உணவுக்கு திண்டாட்டம்:  மாணவர்களின் மதிய உணவு குறித்து, மார்ச் 31  வரை தமிழக அரசிடமிருந்து எந்த உத்தரவும் வெளியாகாத நிலையில், ஏப்ரல் 1 (வியாழக்கிழமை) முதல் மதிய உணவினை தாங்களே கொண்டுவர வேண்டும் என்று மாணவர்களிடம் தெரிவிக்கும்படி தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட அதிகாரிகள் பள்ளிகளின் ஆசிரியர்களுக்குத் தெரிவித்துவிட்டனர்.

சில தொண்டு நிறுவனங்கள், தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு சொந்த ஏற்பாட்டின்பேரில் வியாழக்கிழமை வழக்கம்போல் உணவு வழங்கியுள்ளன. ஆனால் ஆசிரியர்களின் மேற்பார்வையில் இயங்கும் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு உணவு வழங்கப்படவில்லை. இதனால் ஈரோடு, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் வருகை எண்ணிக்கை வியாழக்கிழமை குறைந்துள்ளதாகப் பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து இத்திட்டத்தின் மாநில அலுவலரும் தொழிலாளர் துறை கூடுதல் ஆணையருமான பி.கருப்பசாமியிடம் கேட்டபோது,  சத்துணவு திட்டம் மூலம், குழந்தைத் தொழிலாளர் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படவுள்ளது.  ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பின்போது இத்திட்டத்தை செயல்படுத்த துறை அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட நிதி மூலம் மாணவர்களுக்கு உணவு வழங்க, மாவட்ட திட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

உணவும், உடையும் வழங்க இயலாத வறுமை நிலையில் உள்ள பெற்றோர்கள்தான் குழந்தைகளை வேலைக்கு அனுப்புகின்றனர். இக்குழந்தைகளை மீட்டு மறுவாழ்வு அளிக்கவேண்டும் என்பதுதான் இத்திட்டத்தின் முழுமையான நோக்கம். ஆனால் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குவதில் ஏற்பட்டுள்ள குளறுபடியால் இத்திட்டத்தின் நோக்கமே சிதைந்துபோகும் நிலை ஏற்பட்டுள்ளது வருந்தத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.