முகப்பு
தமிழ்நாடு

போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் சங்கங்கள் "கட்டாய வசூல்' புகார்

சென்னை, ஏப். 5: தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் 6-வது ஊதியக் குழு நிர்ணயிக்கப்பட்டுள்ள ஊதியத்துக்கான, நிலுவைத் தொகையைப் பெற அந்தந்த சங்கங்கள் சார்பில் மறைமுகமாக பணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எ

Updated On : 20 செப்டம்பர், 2012 at 12:39 PM
பகிர்:

சென்னை, ஏப். 5: தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் 6-வது ஊதியக் குழு நிர்ணயிக்கப்பட்டுள்ள ஊதியத்துக்கான, நிலுவைத் தொகையைப் பெற அந்தந்த சங்கங்கள் சார்பில் மறைமுகமாக பணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன..

 இந்த மறைமுக வசூலை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களுக்கு 6-வது ஊதியக் குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு வழங்க, 17.6.2009 அன்று அரசு உத்தரவு பிறப்பித்தது. மேலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தேதி முதல், ஊதிய உயர்வு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

இதன்படி, பொதுத் துறை நிறுவனமான போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் அதிகாரிகள், கண்காணிப்பாளர்கள், பணிமனை மேலாளர்கள், உதவிப் பொறியாளர்கள் ஆகியோருக்கு 1}2}2010 முதல் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது. இவர்களுக்கு அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தேதி முதல் ஜனவரி மாதம் வரை 7 மாதங்களுக்கு நிலுவைத் தொகை வழங்கப்பட வேண்டும்.

 இந்த நிலுவைத் தொகையில் ஒரு பகுதியை போக்குவரத்துக் கழக சங்கங்கள், ஊழியர்களிடமிருந்து மறைமுகமாக வசூல் செய்து வருகின்றன.

போக்குவரத்துக் கழகங்களில் பொதுவாக 3 முறைகளில்தான் ஊழியர்களுக்கு ஊதியமும், மற்ற பணப் பயன்களும் பட்டுவாடா செய்யப்படும். வங்கி காசோலையாக ஊழியர்களுக்கு அளிக்கப்படும் அல்லது ஊழியரின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் பட்டுவாடா செய்யப்படும் அல்லது போக்குவரத்துக் கழக தினசரி வசூலில் இருந்து குறிப்பிட்ட தொகையை எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்படும்.

 இந்த நிலையில், இப்போது போக்குவரத்துக் கழக உதவிப் பொறியாளர்கள், கண்காணிப்பாளர்கள் ஆகியோர் 6}வது ஊதிய உயர்வு நிலுவைத் தொகையில் ரூ. 12 ஆயிரம் பெற்றுக்கொண்டது போலவும், அதிகாரிகள் ரூ. 10 ஆயிரம் பெற்றுக்கொண்டது போலவும் "அக்யூடன்ஸ்' படிவத்தில் உதவிப் பொறியாளர்கள் சங்கமும், அதிகாரிகள் சங்கமும் கையெழுத்து வாங்கியுள்ளன.

 ஆனால், இந்த படிவத்தில் குறிப்பிட்டுள்ள பணம் ஊழியர்களை சென்று சேரவில்லை. உயர் அதிகாரிகளுக்கு கொடுக்கவேண்டும் என்ற கூறி ஊழியர்களிடம் பெறப்பட்டுள்ளது.

 இந்த "அக்யூடன்ஸ்' படிவங்களை போக்குவரத்துக் கழக தலைமையக நிதித் துறையில் சமர்ப்பித்து, சங்கங்களின் நிர்வாகிகள் நேரடியாக பணத்தை பெற்றுக் கொள்வதாகக்

கூறப்படுகிறது. இதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள், உதவிப் பொறியாளர்கள், கண்காணிப்பாளர்கள் ஆகியோரிடமிருந்து மறைமுக கொள்ளையாக ரூ. 5 கோடிக்கும் மேல் வசூலிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

 ஒரு சிலர் மட்டும் இந்த படிவத்தில் கையெழுத்திட மறுத்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்த பணம் என்ன செய்யப்படுகிறது? எங்கு செல்கிறது? என்று போக்குவரத்துக்கழக ஊழியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

 இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக உதவிப் பொறியாளர் ஒருவர் கூறியது:

 பொதுவாக "அக்யூடன்ஸ்' முறையில் எங்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதே கிடையாது. ஊதிய உயர்வு அளிக்கும்போதுதான் இதுபோன்ற அத்துமீறல்கள் நடைபெறுகின்றன.

 5}வது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதிய உயர்வு அளிக்கப்பட்டபோதும் நிலுவைத் தொகையில் ஒரு பைசாகூட எங்களை வந்து சேரவில்லை. இதே முறையில் நாங்கள் பெற்றுக் கொண்டதுபோல், "அக்யூடன்ஸ்' படிவத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டனர்.

 இப்போது 6}வது ஊதியக் குழு ஊதிய உயர்வு நிலுவைத் தொகையில் எங்களிடம் ரூ. 12 ஆயிரமும், அதிகாரிகளிடம் ரூ. 10 ஆயிரமும் பெற்றுள்ளனர். உதவிப் பொறியாளர்களுக்கு அதிகபட்சம் ரூ. 50 ஆயிரம் வரைதான் நிலுவைத் தொகை

கிடைக்கும். இதில் 10 ஆயிரம் சங்கம் கொள்ளையடித்துக் கொண்டது. மேலும் பல்வேறு வரிகள் பிடித்த பின்னர், ரூ. 30 ஆயிரம் மட்டுமே கையில் கிடைக்கும். எனவே சங்கங்களின் நடவடிக்கைகளை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். துறை ரீதியான பாதிப்பு வருமோ என்ற பயத்தில்தான் நாங்கள் கையெழுத்து போட்டு விடுகிறோம்.

 மேலும், "அக்யூடன்ஸ்' படிவங்கள் தணிக்கைக்காக அந்தந்த பணிமனைகளில்தான் வைக்கப்படவேண்டும். ஆனால், சங்கங்கள் இப்போது கையெழுத்து வாங்கியுள்ள படிவங்கள் அனைத்தும், போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

 இதுகுறித்து ஓய்வுபெற்ற அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியது:

 அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களின் ஊதியத்தை பட்டுவாடா செய்வதும், அதில் பிடித்தம் செய்வதும் அந்த துறைகள் மட்டுமே செய்யவேண்டும். சங்கங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. சங்க வளர்ச்சிக்கு, ஊழியர்களிடமிருந்து கேட்டுதான் பணம் பெறவேண்டும். ஊழியர்களிடம் "அக்யூடன்ஸ்' படிவத்தில் சங்கங்கள் கையெழுத்து வாங்கி, நேரடியாக பணம் பெற்றுக் கொள்வது சட்டத்தை மீறிய செயல் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.