நேரடி நியமன அறிவிப்பு: கலக்கத்தில் ஆயுதப் படை எஸ்.ஐ.க்கள்
கரூர், ஏப். 22: வட்டார காவல் நிலையங்களுக்கு உதவி ஆய்வாளர் நேரடி நியமன அறிவிப்பால் ஏற்கெனவே ஆயுதப் படை, சிறப்பு காவல் படையில் பணியாற்றி வரும் 592 உதவி ஆய்வாளர்கள் கலக்கமடைந்துள்ளனர். தமிழ்நாடு சீருட
கரூர், ஏப். 22: வட்டார காவல் நிலையங்களுக்கு உதவி ஆய்வாளர் நேரடி நியமன அறிவிப்பால் ஏற்கெனவே ஆயுதப் படை, சிறப்பு காவல் படையில் பணியாற்றி வரும் 592 உதவி ஆய்வாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் ஏப்ரல் 1-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், 1095 நேரடி காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பதாக அறிவித்திருந்தது. இதில், வட்டார காவல் நிலையங்களுக்கு 810 பேரும், ஆயுதப் படைக்கு 161 பேரும், தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்கு 124 பேரும் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ஆயுதப் படை மற்றும் சிறப்பு காவல் படையில் உதவி ஆய்வாளர்களாகப் பணியாற்றுபவர்கள் 2008-ம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்று பணிக்கு வந்தவர்கள். அப்போது நடைபெற்ற தேர்வில் 744 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில், 152 பேருக்கு வட்டார காவல் நிலையங்களிலும், 400 பேருக்கு ஆயுதப் படையிலும், மீதமுள்ள 192 பேருக்கு தமிழ்நாடு சிறப்பு காவல் படையிலும் பணி நியமனம் வழங்கப்பட்டது.
எனினும், இவர்கள் அனைவருக்கும் வண்டலூர் காவல் உயர் பயிற்சியகத்தில் ஓர் ஆண்டு சட்டம்-ஒழுங்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சி பெற்றவர்களில் 152 பேரைத் தவிர மற்றவர்கள் ஆயுதப் படையிலும், சிறப்பு காவல் படையிலும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசின் அறிவிப்பில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் 810 பேர் வட்டார காவல் நிலையங்களில் (சட்டம்-ஒழுங்கு) பணியமர்த்தப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஏற்கெனவே சட்டம்- ஒழுங்கு பயிற்சி பெற்றவர்கள் சீனியாரிட்டி அடிப்படையில் புறக்கணிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. காவல் துறையில் வேலைக்குச் சேருபவர்களின் லட்சியம் சட்டம்- ஒழுங்கு துறையில் பணியாற்றுவதுதான். அரசின் தற்போதைய அறிவிப்பால் இவர்களின் கனவு பாதிக்கப்படுவதுடன், ஜூனியர்களாக வேலைக்கு சேருபவர்களுக்குக் கீழ் பணியாற்றும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால், உதவி ஆய்வாளர்களுக்கு இடையே மனக்கசப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது.
அதேநேரத்தில், 2008-ம் ஆண்டு தேர்வின் போது காவலர்களுக்கு ஒதுக்கப்பட்ட 20 சத ஒதுக்கீட்டில் உதவி ஆய்வாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மிகவும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீட்டின் கீழ் தேர்வாகி தற்போது, ஆயுதப் படை, சிறப்பு காவல் படைப் பிரிவுகளில் பணியாற்றுவோருக்கு 45 வயது நிறைவடைந்துவிட்டால், அவர்கள் வழக்கமான மாறுதல்களில் அந்தத் துறையில் மட்டுமே பதவி உயர்வு பெற முடியும். சட்டம்- ஒழுங்கு பிரிவுக்குச் செல்ல முடியாது. இதனால், சிலர் ஆயுதப் படைப் பிரிவில் பணிக்குச் சேர்ந்து, அதே பிரிவில் ஓய்வு பெறும் நிலை ஏற்படுகிறது.
எனவே, காவல் துறையில் புதிதாகப் பணிக்கு சேருபவர்களை ஆயுதப் படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படைப் பிரிவுகளில் சேர்த்து பயிற்சியளிக்க வேண்டும். காலியாகவுள்ள இடங்களில் இந்தப் பிரிவுகளில் தற்போது பணியாற்றி வரும் உதவி ஆய்வாளர்களை நியமிக்கலாம். இதன்படி, காவல் துறையில் கடைப்பிடிக்கப்படும் 5 ஆண்டுகள் பணிக்குப் பின்னர் பதவி உயர்வு வழங்கி வேறு துறைகளுக்கு மாற்றம் செய்யலாம். இதன்மூலமாக அனைத்துத் தரப்பினரின் பணிமூப்பும் பாதுகாக்கப்படும். காவல் துறையினரின் இந்த எதிர்பார்ப்பை நிறைவு செய்யுமா அரசு?