பஸ் நிலையத்துக்குள் தடம் பதிக்குமா 202
ஸ்ரீபெரும்புதூர், ஆக. 1: சென்னையில் இருந்து ஆர்க்காடு வழியாக ஆரணி செல்லும் தடம் எண் 202 பஸ்கள் ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையத்துக்குள் வராமல் புறவழிச் சாலையிலே செல்வதால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ள
ஸ்ரீபெரும்புதூர், ஆக. 1: சென்னையில் இருந்து ஆர்க்காடு வழியாக ஆரணி செல்லும் தடம் எண் 202 பஸ்கள் ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையத்துக்குள் வராமல் புறவழிச் சாலையிலே செல்வதால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
÷சென்னையிலிருந்து ஆர்க்காடு வழியாக ஆரணிக்கும் அதேபோல் மறு முனையில் இருந்தும் தடம் எண் 202 இயக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்டம் திருவண்ணாமலை மண்டலத்தில் இருந்து ஆரணி, போளூர், கோயம்பேடு ஆகிய பணிமனைகளில் இருந்து 20 பஸ்களும், வேலூர் மண்டலம் ஆர்க்காடு பணிமனையில் இருந்து ஆரணியிலிருந்து ஆர்க்காடு வழியாக சென்னைக்கு 10 பஸ்களும், மொத்தம் இரு முனைகளிலிருந்தும் 30 பஸ்கள் தினமும் இயக்கப்படுகின்றன.
÷இந்த பஸ்கள் அனைத்தும் ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையத்துக்குள் வருவதில்லை. புறவழிச்சாலையிலேயே சென்று விடுகின்றன. இந்த பஸ்கள் ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையத்துக்கு வந்து செல்ல வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
÷இதையடுத்து 4 மாதத்துக்கு முன்பு திருவண்ணாமலை மண்டல மேலாளர், ஆரணி பணிமனையில் இருந்து இயங்கும் பஸ்களில் 8 பஸ்கள் மட்டும் நாள் ஒன்றுக்கு 32 தடவைகள் ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையத்துக்கு உள்ளே சென்று வர வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும் பஸ்களின் முன்புறம் ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் என பெயர்ப் பலகைகளை அமைத்துதான் இயக்க வேண்டும் எனவும் அறிவுறுத்திருந்தார். ஆனால் பேருக்குக் கூட பெயர் பலகை வைக்கவில்லை. ஊருக்குள்ளும் வரவுமில்லை.
÷ ஸ்ரீபெரும்புதூரை புறக்கணித்து புறவழிச்சாலையில் செல்லும் பஸ்களைப் போலவே மேலாளரின் உத்தரவும் புறக்கணிக்கப்படுவதாக மக்கள் எண்ணுகின்றனர்.
÷இதனால் ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையத்தில் இருந்து தாமல், பாலுச்செட்டிசத்திரம், ஓச்சேரி, காவேரிபாக்கம், ஆர்க்காடு, ஆரணிக்கு செல்லும் பயணிகளும் ஆரணி- ஆர்க்காடு பகுதிகளில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு வரும் பயணிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வரும் தொழிலாளர்கள் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
÷இது குறித்து திருவண்ணாமலை மண்டல துணை மேலாளர் (வணிகம்) ராஜசுந்தரிடம் கேட்டதற்கு தடம் எண் 202 ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையத்துக்குள் வராமல் புறவழிச்சாலையிலே சென்று வருவதாக எங்களுக்கும் புகார் வந்தது. இதையடுத்து ஆரணியில் இருந்து ஆர்க்காடு வழியாக செல்லும் தடம் எண் 202 பஸ்களில் 7 பஸ்கள் மட்டும் ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையத்திற்கு உள்ளே சென்று வர வேண்டும் எனவும், அந்த பஸ்களில் ஸ்ரீபெரும்புதூர் என பெயர் பலகை வைக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளோம்.
÷இந்த பஸ்களின் நடத்துநர்கள் அங்குள்ள நேரக் காப்பாளரிடம் கையெழுத்து வாங்கி வரவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தடம் எண் 202 பஸ்கள் ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையத்துக்கு உள்ளே செல்கிறதா என்பதைக் கண்டறிய எங்கள் மண்டல பரிசோதகர்கள் கடந்த வாரம் ஸ்ரீபெரும்புதூர் வந்து ஆய்வு செய்துள்ளனர்.
÷இதனால் பஸ்கள் ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையத்துக்கு உள்ளே சென்றுதான் வருகின்றன என்றார். புறவழிச் சாலையிலே சென்றால் ஓட்டுனர், நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராஜசுந்தர் தெரிவித்தார்.
÷பயணிகளுக்கு பயனளிக்கும் தடம் எண் 202 ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையத்துக்குள் தடம் பதிக்குமா என்பதுதான் பயணிகளின் இப்போதைய எதிர்பார்ப்பு.