முகப்பு
தமிழ்நாடு

பத்தாம் வகுப்பு படித்தவருக்கு ஐ.ஏ.எஸ். பதவி உயர்வு!

சென்னை, ஆக. 5: பத்தாம் வகுப்பு படித்தவர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.  18 வயதில் இளநிலை உதவியாளராக அரசுப் பணியில் சேர்ந்து உயர் இடத்துக்கு வந்துள்ள அவருக்கு இன்னும் 5 ஆண்டுகள் பதவிக்

Updated On : 27 டிசம்பர், 2023 at 4:59 PM
பகிர்:

சென்னை, ஆக. 5: பத்தாம் வகுப்பு படித்தவர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

 18 வயதில் இளநிலை உதவியாளராக அரசுப் பணியில் சேர்ந்து உயர் இடத்துக்கு வந்துள்ள அவருக்கு இன்னும் 5 ஆண்டுகள் பதவிக் காலம் உள்ளது.

  ஐ.ஏ.எஸ். தேர்வை நேரடியாக எதிர்கொண்டு அதில் வெற்றி பெற்று அரசுத் துறைகளில் பணியில் சேர்வது ஒருவகை. பதவி உயர்வு மூலம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக வருவது மற்றொரு வகை. அதன்படி, இப்போது தமிழகத்தில் 19 பேர் பதவி உயர்வின் மூலம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆக்கப்பட்டுள்ளனர்.

  தலைமைச் செயலகத்தில் முதல்வரின் புகார் பிரிவில் தனி அதிகாரியாக உள்ள ஜெயகாந்தன், சென்னை மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி ஆகியோர் பதவி உயர்வு மூலம் ஐ.ஏ.எஸ். ஆக உயர்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். இதில், முனுசாமியின் கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு ஆகும்.

 பத்தாம் வகுப்பு படித்த ஒருவர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பதவி உயர்வு பெற்றுள்ளது தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலக வட்டாரங்களில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 கடந்த 1973-ம் ஆண்டு குரூப் 4 தேர்வு மூலம் அரசுப் பணியில் சேர்ந்தார் முனுசாமி. பள்ளிப்பட்டு தாலுகாவில் இளநிலை உதவியாளராக பணியைத் தொடங்கினார்.

அதன்பின்னர், வட்டாட்சியர், துணை ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் என பல்வேறு நிலைகளில் கடந்த 37 ஆண்டுகளாக அரசுத் துறைகளில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.

  அனுபவம் கைகொடுக்கும்: பட்டப் படிப்பு படிக்காத நிலையிலும், அரசுத் துறைகளில் நீண்ட காலம் பணியாற்றிய அனுபவம் இருப்பதால் எதையும் சமாளிக்க முடியும் என தலைமைச் செயலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, அதிகளவிலான அதிகாரிகளுக்கு இந்த ஆண்டு ஐ.ஏ.எஸ். என்ற நிலையில் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.