முகப்பு
தமிழ்நாடு

பொய்யான தகவல்கள்: கல்லூரிகளை தேர்வு செய்து ஏமாறும் மாணவர்கள்

சென்னை, ஆக. 5: இணைய தளத்தில் அளிக்கப்பட்டிருக்கும் பொய்யான தகவல்களை நம்பி, ஒற்றைச் சாளர கலந்தாய்வில் தனியார் கல்லூரிகளை தேர்வு செய்து மாணவர்கள் ஏமாறும் நிலை இப்போது தொடர்கதையாகி வருகிறது. இதுபோல் ஏமாற

Updated On : 20 செப்டம்பர், 2012 at 1:34 PM
பகிர்:

சென்னை, ஆக. 5: இணைய தளத்தில் அளிக்கப்பட்டிருக்கும் பொய்யான தகவல்களை நம்பி, ஒற்றைச் சாளர கலந்தாய்வில் தனியார் கல்லூரிகளை தேர்வு செய்து மாணவர்கள் ஏமாறும் நிலை இப்போது தொடர்கதையாகி வருகிறது.

இதுபோல் ஏமாறுபவர்களில், வசதிபடைத்தவர்கள், உள்கட்டமைப்பு வசதிகள் நிறைந்த தனியார் கல்லூரிகளில் பல லட்சத்துக்கு விலைபோகும் நிர்வாக இடங்களை நாடிச் செல்கின்றனர். ஆனால், ஏழை மாணவர்களோ, திண்டாடும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த என். முதசீர் முகமது என்ற மாணவர், 1-8-2010 அன்று அண்ணா பல்கலையில் நடைபெறும் ஒற்றைச் சாளர கலந்தாய்வில் பங்கேற்று, சென்னை புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பி.இ. (இஇஇ) இடம் பெற்றுள்ளார்.

Advertisement

இந்தக் கல்லூரியை தேர்வு செய்யும் முன், இணைய தளத்தின் மூலம் கல்லூரி, அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் பெற்றிருப்பதை உறுதி செய்துள்ளார்.

இந்த நிலையில், கட்டண விவரங்களைத் தெரிந்து கொள்வதற்காக தனது பெற்றோருடன் இடம் கிடைத்த தனியார் கல்லூரிக்கு முதசீர் முகமது புதன்கிழமை சென்றுள்ளார். அப்போது போதிய உள்கட்டமைப்பு வசதிகள் கல்லூரியில் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அங்கிருந்த மாணவர்களிடம் விசாரித்தபோது, கல்லூரியில் போதிய ஆசிரியர்கள் இல்லாததும், வகுப்புகள் முறையாக நடைபெறாததும் தெரியவந்துள்ளது.

மேலும், முதல் ஆண்டில் மட்டுமே வகுப்புகளில் ஆசிரியர்கள் முழு அளவில் பங்கேற்று பாடங்களை நடத்துவர். இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டுகளில் மாணவர்கள் தாங்களாகவே படித்துக் கொள்ளவேண்டும். ஆசிரியர்கள் எப்போதாவது வகுப்புகளுக்கு வருவர் என்பதும் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக உயர் அதிகாரியிடம் புகார் அளித்தபோது, அவர் அலட்சியமான பதிலை அளித்துள்ளார். இதுகுறித்து மாணவர் முதசீர் முகமது கூறியது:

இணைய தளத்தில் பொய்யானத் தகவலை கொடுத்துள்ள கல்லூரி குறித்து புகார் தெரிவிக்கவும், மாற்றுக் கல்லூரியில் இடம் பெற முடியுமா? என்பதை தெரிந்து கொள்வதற்காகவும், மாநில தொழில்நுட்ப கல்வி மன்ற அதிகாரிகளை சந்திக்கச் சென்றோம். ஆனால், அங்குள்ளவர்கள் அண்ணா பல்கலைக்கழக உயர் அதிகாரியை சந்திக்குமாறு கூறினர். இதைத்தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக உயர் அதிகாரியை சந்தித்தபோது, கலந்தாய்வில் மீண்டும் பங்கேற்க வழியில்லை. எனவே, சிறந்த தனியார் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டைப் பெற முயற்சி செய்யுங்கள் என்று பதிலளித்தார்.

தனியார் கல்லூரிக்குச் செல்லும் அளவுக்கு குடும்பச் சூழ்நிலை இல்லை. எனவே, என்ன செய்வதென்றே தெரியவில்லை என்றார். இதுபோல் மேலும் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கலந்தாய்வின் முடிவில் மிஞ்சும் பி.இ. இடங்களில், விரும்பிய கல்லூரிகளை இதுபோன்ற மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு செய்து கொள்ளும் வகையில் அரசு வழி செய்ய வேண்டும் என்கின்றனர் கல்வியாளர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.