புழுதி பறக்கும் சாலை: திணறும் வாகன ஓட்டிகள்
பொன்னேரி, ஆக. 9: குண்டும் குழியுமான பொன்னேரி- தச்சூர் சாலையில் புழுதிகளுக்கு மத்தியில் வாகனத்தை ஓட்ட முடியாமல் இரு சக்கர வாகன ஓட்டிகள் திணறி வருகிறார்கள். இப் பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட கன்டெய
பொன்னேரி, ஆக. 9: குண்டும் குழியுமான பொன்னேரி- தச்சூர் சாலையில் புழுதிகளுக்கு மத்தியில் வாகனத்தை ஓட்ட முடியாமல் இரு சக்கர வாகன ஓட்டிகள் திணறி வருகிறார்கள்.
இப் பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட கன்டெய்னர் கிடங்குகளுக்கு வட மாநிலங்களில் இருந்து வரும் கனரக வாகனங்கள் இச்சாலை வழியேதான் செல்கின்றன.
சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து தச்சூர் கூட்ரோடில் பிரிந்து பொன்னேரி வரை 7 கி.மீ. நீள ஒருவழிச் சாலை கடந்த 5-ஆண்டுகளுக்கு முன்பு பல கோடி ரூபாய் செலவில் இரு வழிச் சாலையாக மாற்றப்பட்டது. சாலைப் பணிகள் முடிந் ஒராண்டிலேயே குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக சாலை மாறிவிட்டது.
÷அண்மையில் பெய்த மழை காரணமாக தச்சூர் கூட்ரோட் முதல் ஆண்டார்குப்பம் வரையும், பொன்னேரி பெட்ரோல் பங்க் அருகில் இருந்து மூகாம்பிகை நகர் வரையும் சுமார் 3 கி.மீ. தூரத்துக்கு இச்சாலை முற்றிலும் மோசமானது.
÷தார் மறைந்து மண் சாலையாக மாறியது. இதனால் கன்டெய்னர் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும் போது சாலையில் புழுதியைக் கிளப்புகிறது. இதன் காரணமாக பின்னால் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகள் முகம் முழுவதும் புழுதி அப்பிக் கொள்ள, முன்புறம் செல்லும் வாகனங்கள், எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாமல் விபத்து ஏற்படுகிறது. மேலும் இந்த புழுதிக் காற்றை சுவாசிப்பதால் சுவாசக் கோளாறுகள் ஏற்படுமோ என வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.
÷அத்துடன் இரவு நேரத்தில் சாலையில் இருக்கும் பள்ளம் தெரியாமல் அதில் விழுந்து காயம் ஏற்படுவதும் தொடர்கதையாக உள்ளது. பொன்னேரி- தச்சூர் சாலை தரம் குறைந்து அமைக்கப்பட்டதே இதற்கு காரணம் என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
÷எண்ணூர் துறைமுகம், வடசென்னை அனல் மின் நிலையம், கடல் நீரை குடிநீராக்கும் ஆலை, விரைவில் அமையவுள்ள கப்பல் கட்டும் தளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பொன்னேரி- தச்சூர் கூட்ரோட் சாலை தரம் உயர்த்தப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
÷புழுதி பறக்கும் சாலை மக்கள் மத்தியில் புயலை கிளப்பும் முன் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?