தமிழ்நாடு

ஊராட்சி உதவியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படுமா?

பெரம்பலூர்:  கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி உதவியாளர்கள், துப்புரவுப்  பணியாளர்கள், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிப் பணியாளர்கள், மக்கள் நலப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு மாதந்தோறும் முறையாக ஊதியம

கே.​ தர்மராஜ்

பெரம்பலூர்:  கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி உதவியாளர்கள், துப்புரவுப்  பணியாளர்கள், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிப் பணியாளர்கள், மக்கள் நலப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு மாதந்தோறும் முறையாக ஊதியம் வழங்க  வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

  கடந்த 1995 ஆம் ஆண்டு ஊராட்சிச் சட்டம் கொண்டு வரப்பட்டு, அதனடிப்படையில் மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், கிராம ஊராட்சிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    1996 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை வரையறுக்கப்படாத காலமுறை ஊதியத்தின் கீழ், 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டதாரிகள் மற்றும் முதுநிலைப் பட்டதாரிகள் கிராம ஊராட்சிகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

   தமிழகத்தில் உள்ள 385 ஊராட்சி ஒன்றியங்களில் 12,618 கிராம ஊராட்சிகள்  உள்ளன.

    ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் ஓர் உதவியாளர், ஓர் மக்கள் நலப் பணியாளர் எனப் பணிபுரிந்து வருகின்றனர். மேலும், தமிழகத்தில் சுமார் 60 ஆயிரம் துப்புரவுப் பணியாளர்களும், 70 ஆயிரம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிப் பணியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்தப் பணியாளர்கள் ஊராட்சிக் கூட்டம் நடத்தி தீர்மானம் எழுதுவது, பொது நிதி, திட்ட நிதி, மின் கட்டண நிதி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிதி,  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் உள்ளிட்ட திட்டப் பதிவேடுகளைப் பராமரித்து வருகின்றனர்.

   மேலும், வீட்டு வரி, தொழில் வரி, நூலக வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரி வசூல்களில் ஈடுபடுவதும், கலைஞர் வீட்டு வசதித் திட்டம், அனைத்துக்   கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், ஊரக உள் கட்டமைப்புத் திட்டம், இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம் உள்ளிட்ட திட்டப் பணிகளைக் கண்காணிப்பதும், கிராமசபைக் கூட்டம், சிறப்பு கிராமசபைக் கூட்டங்களையும் நடத்துவது உள்ளிட்ட பணிகளையும் செய்து வருகின்றனர்.

    வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்புப் பணி, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் குறித்த கணக்கெடுப்புப் பணி, குடிநீர்க் குழாய், தெருவிளக்கு, விசை பம்புகளை சீரமைப்பது, கிராமங்களைச் சுகாதாரமாக வைத்துக் கொள்வது, இலவச மருத்துவ முகாம், கால்நடை மருத்துவ முகாம், கண் சிகிச்சை முகாம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி வருகின்றனர்.

     மேலும், மாவட்ட ஆட்சியர், திட்ட இயக்குநர், ஊராட்சிகள் உதவி இயக்குநர் (தணிக்கை), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் உத்தரவிடும் களப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பணிகளில் ஈடுபடும் ஊராட்சி உதவியாளர்களுக்கும், மக்கள் நலப் பணியாளர்களுக்கும் மாத ஊதியமாக | 4000 வழங்கப்படுகிறது.

    ஆனால், துப்புரவுப் பணியாளர்களுக்கும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி  பணியாளர்களுக்கும் மாத ஊதியமாக | 1500 வழங்கப்பட்டு வருகிறது. தேசிய ஊரக  வேலைவாய்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.100 ஊதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில், துப்புரவுப் பணியாளர்களுக்கும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பணியாளர்களுக்கும் சராசரியாக நாள் ஒன்றுக்கு | 45 மட்டுமே வழங்கப்படுகிறது.

  மத்திய, மாநில அரசுகள் ஒட்டு மொத்த ஊராட்சி நிர்வாகத்துக்கும், குறைந்தபட்சமாக 8 சதம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாலும், கிராம ஊராட்சிகளுக்கு  போதுமான நிதி கிடைக்காததாலும், இந்தப் பணியாளர்களுக்கு மாதந்தோறும் ஊதியம்  வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால், நிதி ஒதுக்கீடு பெறப்பட்ட பிறகு,  காலாண்டுக்கு ஒரு முறையே ஊராட்சியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஊதியம்  வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

    மேலும், கிராம ஊராட்சி நிர்வாகங்களில் போதுமான வருமானம் இல்லாதது, நிதிப் பற்றாக்குறையால் கிராமப் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை உடனுக்குடன் மேற்கொள்ள முடியாமல் ஊராட்சி நிர்வாகம் காலதாமதப்படுத்தி  வருவதாகக் கூறப்படுகிறது.  

  எனவே, கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி உதவியாளர்கள், துப்புரவுப்  பணியாளர்கள், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிப் பணியாளர்கள், மக்கள் நலப் பணியாளர்களுக்கு பொது நிதியிலிருந்து ஊதியம் வழங்குவதைத் தவிர்த்து, ஒவ்வொரு கிராம  ஊராட்சியிலும் அவர்களுக்கு என தனி ஊதிய தலைப்புக் கணக்கு தொடங்கி, நிதி  ஒதுக்க வேண்டும்.

    மத்திய, மாநில அரசுகள் ஊராட்சிகளுக்கு வழங்கும் 8 சத நிதி ஒதுக்கீட்டை 15 சதமாக  உயர்த்தி மாதந்தோறும் முறையாக ஊதியம் வழங்க வேண்டும் என்பதே இந்தப் பணியாளர்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT