மதுரை, ஆக. 24: மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயில் சேத்தி மண்டபத்தில் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் தங்கத் தகடு பதிக்கும் பணி இன்னும் ஒரு வாரத்தில் முடிவு பெறும் என்று கோயில் நிர்வாக அதிகாரி இரா.பத்மநாபன் தெரிவித்தார்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் சுவாமி சன்னதியின் இரண்டாவது பிரகாரத்தில் உள்ள கன்னிமூலையில் உற்சவர் உறைவிடமான சேத்தி மண்டபம் உள்ளது.
இந்த மண்டபம் புனரமைக்கப்பட்டு சுமார் 70 ஆண்டுகள் ஆன நிலையில், இப்போது இதைப் புதுப்பித்து தங்கத் தகடு பதிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உபயதாரர் ஒருவர் இதற்காக ரூ. 25 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கத்தை வழங்கியுள்ளார்.
இப்பணி குறித்து கோயில் நிர்வாக அதிகாரி இரா.பத்மநாபன் செய்வாய்க்கிழமை கூறியது:
சேத்தி மண்டபத்தில் ஏற்கெனவே வேயப்பட்டிருந்த செப்புத் தகட்டை தூண்களில் இருந்து அகற்றியபோது தூண்களில் விரிசல் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இந்தத் தூண்கள் அகற்றப்பட்டு, சுமார் ரூ. 40 ஆயிரம் மதிப்பீட்டில் நான்கு புதிய கல் தூண்கள் புதுக்கோட்டையில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.
இப்போது இத்தூண்களில் செப்புத் தகடுகள் பதித்து அதன் மீது தங்கத் தகடுகள் வேயப்பட்டு வருகிறது. இந்தப் பணி இன்னும் ஒரு வாரத்தில் முடிவுற்றுவிடும். அதுவரை உற்சவர் சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் வைக்கப்படும். இதுதவிர, சேத்தி மண்டபத்தில் உள்ள சுண்ணாம்பு பூச்சை அகற்றுவதற்கான வேதியியல் சலவையும் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், மண்டபத்தின் மேற்பகுதியில் வெல்வெட் துணி மூலம் அலங்காரம் செய்யப்பட உள்ளது.
சோடச உபசார கல்மேடையில் வெள்ளித் தகடு: சுவாமி சன்னதி பகுதியில் சோடச உபசாரம் நடைபெறும் கல்மேடைப் பகுதியை 60 கிலோ வெள்ளி கொண்டு தகடு பதிக்கத் திட்டமிட்டுள்ளோம். இதற்கான பணி விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது.
கோயில் யானை மகாலில் மணல் குவியல்: கோயில் யானை மகாலில் உள்ள யானை இருப்பிடத்தில் 10 லோடு ஆற்று மணல் போடப்பட உள்ளது. இதனால், யானை நிற்கும்போது அதன் பாதத்தில் பாதிப்பு ஏதும் ஏற்படாது. கோயிலில் தற்போது இரு ஒட்டகங்கள், பசுமாடுகள் உள்ளன. குதிரையும், ஒரு யானையும் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பொற்றாமரை குளத்துக்கு தண்ணீர் வசதி: பொற்றாமரை குளத்துக்கு வைகை ஆற்றில் இருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டுவருவது தொடர்பாக மதுரை மாநகராட்சிக்கு ஏற்கெனவே கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 40 லட்சம் செலவாகும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
நாளொன்றுக்கு சுமார் 3 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதால் இதற்காக தொகை ஏதும் செலுத்த வேண்டுமா என்பது குறித்து மாநகராட்சியிடம் கேட்டு, தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறோம்
டிசம்பரில் முக்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் மதுரை தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத் திருப்பணிகள் ரூ. 60 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தக் கோயில் கோபுரத்தில் இடி, மின்னல் தாங்கி கருவி பொருத்தப்பட உள்ளது. புஷ்ப விமானப் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. வரும் டிசம்பரில் இந்தப் பணிகள் முடிவு பெற்று கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தெப்பக்குளம் மாரியம்மன் திருக்கோயிலிலும் ரூ. 60 லட்சத்தில் கும்பாபிஷேகப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
கோயில் நிலங்களை ஏலம் விட ஏற்பாடு: திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள கருப்பூரில் மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமாக 41 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம் ஏலம் விடப்பட உள்ளது என்றார் அவர்.
ரூ.5.25 லட்சத்தில் தங்க நெற்றிப் பட்டை
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கு ரூ.5.25 லட்சம் மதிப்புள்ள தங்க நெற்றிப் பட்டையை சென்னையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் உபயமாக வழங்கியுள்ளார்.
பெயர் வெளியிட விரும்பாத அந்த பக்தர், கோயில் நிர்வாக அதிகாரி இரா.பத்மநாபனின் அனுமதியின் பேரில் செவ்வாய்க்கிழமை, ஒற்றை சிவப்புக் கல் பதிக்கப்பட்ட தலையில் அணிவிக்கும் தங்க நெற்றிப் பட்டையை வழங்கினார்.
இந்த தங்க நெற்றிப் பட்டை 251 கிராம் எடையுள்ளது. இதன் மதிப்பு ரூ.5.25 லட்சமாகும். ஏற்கெனவே, கோயிலில் இரு வெள்ளி நெற்றிப் பட்டைகளும், ஒரு வைர நெற்றிப் பட்டையும் உள்ளன. தற்போது தங்க நெற்றிப் பட்டையை பக்தர் உபயமாக வழங்கியுள்ளார்.
முக்கிய விழாக் காலங்களில் சுவாமிக்கு அலங்காரம் செய்விக்கும் போது இந்த நெற்றிப் பட்டை அணிவிக்கப்படவுள்ளதாக நிர்வாக அதிகாரி இரா.பத்மநாபன் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.