முகப்பு
தமிழ்நாடு

சமையல் கேஸ் தட்டுப்பாடு!

சென்னை, பிப். 3: தமிழகத்தில் சமையல் வாயு சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்காக பதிவு செய்து 25 நாள்களுக்கு மேல் காத்திருக்கும் நிலை உள்ளது. இப்போது வட இந்திய பகுதிகளில் கடும் குளிர் ந

Updated On : 27 டிசம்பர், 2023 at 2:36 PM
பகிர்:

சென்னை, பிப். 3: தமிழகத்தில் சமையல் வாயு சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்காக பதிவு செய்து 25 நாள்களுக்கு மேல் காத்திருக்கும் நிலை உள்ளது.

இப்போது வட இந்திய பகுதிகளில் கடும் குளிர் நிலவுகிறது. இதையடுத்து தில்லி, உத்தரப் பிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட வட மாநிலங்களில் கேஸ் சிலிண்டர்களுக்கு தேவை மிகவும் அதிகரித்துள்ளது. இதனால் பெருமளவு சிலிண்டர்கள் அந்த மாநிலங்களுக்கு திருப்பி விடப்படுவதாகத் தெரியவந்துள்ளது.

சென்னையில் மட்டும் 102 விநியோகஸ்தர்கள் மூலம் 15.10 லட்சம் "இண்டேன்' சமையல் வாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

பாரத் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களும் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட இணைப்புகளை சென்னையில் வழங்கியுள்ளன.

சென்னையில் வீட்டு உபயோகத்துக்கான சமையல் வாயு சிலிண்டரின் (14.2 கிலோ) விலை ரூ. 314.55 பைசா ஆகும். மாவட்டங்களில் இதன் விலை சராசரியாக ரூ. 5 அதிகரிக்கும்.

இதேபோல உணவகங்கள் உள்ளிட்ட வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் வாயு சிலிண்டர்கள் (19 கிலோ) ரூ. 1,018 முதல் ரூ. 1,100 வரை விற்கப்படுகின்றன.

இந்த நிலையில் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் சமையல் வாயு சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

தமிழக அளவில் இப்போது தினமும் 225 முதல் 250 லாரிகளில் (ஒரு லாரி லோடு - 306 சிலிண்டர்கள்) சமையல் வாயு சிலிண்டர்களை விநியோகிக்க வேண்டிய தேவை உள்ளது.

காத்திருந்து..காத்திருந்து... ஒரு சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு "இண்டேன்' முகவர்களிடம் முன்பதிவு செய்து குறைந்தபட்சம் 25 முதல் 35 நாள்களுக்குப் பின்னரே சிலிண்டர் விநியோகிக்கப்படுகிறது.

2 சிலிண்டர்களுக்கான இணைப்பு வைத்திருப்போர், ஒரு சிலிண்டர் காலியாகிய பின் 21 முதல் 25 நாள்களுக்குப் பின்னரே முன்பதிவு செய்ய வேண்டும் என்ற "விதி' பின்பற்றப்படுகின்றது.

ஆனால், 2 சிலிண்டர்களுக்கான இணைப்பு வைத்திருப்போரும் பதிவு செய்து 15 நாள்களுக்கும் மேலாகியும் சமையல் வாயு கிடைக்காமல் தவிக்கின்றனர்.

கோயம்புத்தூர், திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் முன்பதிவு செய்து 25 முதல் 35 நாள்கள் வரை சிலிண்டர் பெற முடியாமல் ஏராளமானோர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.

சென்னையில் தட்டுப்பாட்டைச் சமாளிக்க ஒவ்வொரு விநியோகஸ்தரும் தினமும் 500 சிலிண்டர்களை விநியோகிக்க வேண்டிய நிலை உள்ளது.

கூடுதல் விலைக்கு... சென்னை உள்ளிட்ட நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளிலும், வாடகை வீடுகளிலும் வசிப்போர் சமையல் செய்வதற்கு, சிலிண்டரை மட்டுமே நம்பியுள்ளனர்.

மண்ணெண்ணெய், விறகு அடுப்புகளையும் பயன்படுத்த வாய்ப்பும், வசதியும் இல்லாததால் வேறு வழியின்றி பல மடங்கு கூடுதல் விலை கொடுத்து வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் வாயு சிலிண்டர்களை வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை சுமார் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட இலவச சமையல் வாயு இணைப்புகளை அரசு வழங்கியுள்ளது. இதற்கான சிலிண்டர்கள் விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து "இண்டேன்' முகவர்கள் சங்க மாநிலத் தலைவர் ஜெதீசன் புதன்கிழமை கூறியதாவது:

தமிழகத்தில் 750 விநியோகஸ்தர்கள் மூலம் ஆண்டுதோறும் 130 லட்சம் டன் அளவுக்கு சமையல் வாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுகின்றன.

சென்னையில் எண்ணூர், மணலி மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் உள்ள மையங்களில் இருந்துதான் பெருமளவு சமையல் வாயு சிலிண்டர்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன.

இப்போது வளைகுடா நாடுகளில் இருந்தும் சிலிண்டர்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. எனினும், வட மாநிலங்களில் அதிக தேவையுள்ளதால் தமிழகத்துக்கு வழங்கப்படும் சமையல் வாயு சிலிண்டர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்தப் பிரச்னைக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.