முகப்பு
தமிழ்நாடு

சூரிய சக்தி மூலம் மின்சாரம் 300 மெகா வாட் உற்பத்திக்கு வாய்ப்பு

சென்னை, பிப்.5: சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்து அதை மத்திய அரசிடம் விற்கும் திட்டத்துக்கு தமிழகத்தில் இருந்து இதுவரை 37 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களை அனுமதிப்பதன் மூலம், மின் உற்பத்தியில் 3

Updated On : 27 டிசம்பர், 2023 at 2:38 PM
பகிர்:

சென்னை, பிப்.5: சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்து அதை மத்திய அரசிடம் விற்கும் திட்டத்துக்கு தமிழகத்தில் இருந்து இதுவரை 37 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

அவர்களை அனுமதிப்பதன் மூலம், மின் உற்பத்தியில் 300 மெகா வாட் மேலும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் மின் பற்றாக்குறை தொடர்ந்து நிலவி வருகிறது. இதனால், சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் மின் வெட்டு செய்யப்பட்டு வருகிறது. இது, மேலும் ஓராண்டுக்கு நீடிக்கும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அண்மையில் அறிவித்தது. இந்த நிலையில், மாற்றுத் திட்டங்கள் மூலம் மின் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில் எரிசக்தி மேம்பாட்டு முகமை ஈடுபட்டு வருகிறது. மத்திய அரசின் திட்டங்களையும் தமிழகத்தில் செயல்படுத்தி வருகிறது.

சூரிய சக்தி மூலம்...சூரிய சக்தி மூலம் தனியார் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை யூனிட்டுக்கு ரூ.18 என்ற அளவில் வாங்கிக் கொள்ளும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்துக்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஜவாஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, சூரிய சக்தி மூலம் தனியார் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை தேசிய அனல் மின் கழகம் (என்.டி.பி.சி) பெற்றுக் கொள்ளும்.

எந்தெந்த மாவட்டங்களில்...மத்திய அரசின் திட்டத்துக்கு தமிழகத்தில் இருந்து இதுவரை 37 விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களில், 30}க்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி, விருதுநகர், மதுரை போன்ற தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

""சூரிய சக்தி மூலம் ஒரு மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டுமானால் 5 ஏக்கர் நிலமும், ரூ.17 கோடி முதலீடும் தேவை. தென் மாவட்டங்களில் போதுமான நிலமும், மின் உற்பத்திக்கான கருவிகளை அமைப்பதற்கு சாதகமான அம்சங்களும் உள்ளன. இதனால், தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்வதற்கான கருவிகளின் விலை அதிகம். ஆனாலும், முதலீட்டில் 80 சதவீத பணத்தை கடனாக இந்திய புதுப்பிக்கதக்க எரிசக்தி முகமை வழங்கி வருகிறது'' என்கின்றனர் தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமை அதிகாரிகள்.

வெறும் 100 கிலோ வாட்...சூரிய சக்தி மூலம் மின்சார உற்பத்தி செய்யும் அளவு தமிழகத்தில் மிக மிகக் குறைவாக உள்ளது. தோராயமாக அதன் அளவு 100 கிலோ வாட் மின்சாரமாக இருக்கும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே, மத்திய அரசின் திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை என எரிசக்தி மேம்பாட்டு முகமை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.