மூடுபனியால் ரயில்களை குறைந்த வேகத்தில் இயக்க உத்தரவு
சென்னை, ஜன. 2: மூடுபனி காரணமாக அதிகாலை நேரத்தில் ரயில்களை மிகவும் குறைந்த வேகத்தில் எச்சரிக்கையுடன் ஓட்டுமாறு ரயில் என்ஜின் ஓட்டுநர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பனிமூட்டம் காரணமாக உத்தரப்பிரதேசத்தில்
சென்னை, ஜன. 2: மூடுபனி காரணமாக அதிகாலை நேரத்தில் ரயில்களை மிகவும் குறைந்த வேகத்தில் எச்சரிக்கையுடன் ஓட்டுமாறு ரயில் என்ஜின் ஓட்டுநர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பனிமூட்டம் காரணமாக உத்தரப்பிரதேசத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் நடைபெற்ற மூன்று ரயில் விபத்துகளில் 10 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதையடுத்து நாடு முழுவதும் ரயில்களை அதிகாலை 2 மணி முதல் காலை 7 மணி வரை அடர்த்தியான மூடுபனி காலத்தில் மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்திலும், முற்பகலில் 30 கிலோ மீட்டரில் இருந்து அதிகபட்சமாக 60 கிலோ மீட்டர் வேகத்திலும் அனைத்து விரைவு ரயில்களை இயக்க ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது. பனிமூட்டம் காரணமாக ரயில் விபத்துகள் ஏற்படாமல் வருமுன் காக்கும் வகையில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள நிலையான எச்சரிக்கை விதிகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு ரயில் சேவை இயக்கப் பிரிவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரயில் பாதையில் மிகவும் அடர்த்தியாக பனி மூட்டம் இருப்பது தெரியவந்தால் இதுகுறித்து எதிரே வரும் ரயில்களுக்கு எச்சரிக்கும் வகையில் "ஃப்யூசீ' எனப்படும் சிவப்பு நிற ஒளியை சிந்தும் மத்தாப்பூ வாண வெடிகளை உடனடியாக போதிய அளவில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வாண வெடிகள் ஈரப்பதம் காரணமாக பதப்பட்டு விடாமல் எளிதில் தீப்பற்றக் கூடியவை ஆகும். இதே போல ரயில் பாதையில் உள்ள சிவப்பு சிக்னல்கள், ரயில் நிலையங்களுக்கு முன்பு உள்ள சிக்னல்கள் மற்றும் லெவல்கிராசிங்குகளுக்கு 300 முதல் 500 மீட்டர் தூரத்துக்கு முன்பாகவே ரயில் பாதையில் டெட்டனேட்டர்கள் கட்டி வைக்கப்படும்.
இந்த டெட்டனேட்டர்கள் மீது ரயில் என்ஜின்கள் ஏறிய சில விநாடிகளில் இது அதிக சப்தத்துடன் வெடித்து எச்சரிக்கப்படும்.
இந்த டெட்டனேட்டர்கள் மற்றும் சிவப்பு ஒளி சிந்தும் வாண வெடிகள் ரயில் ஓட்டுநர்கள், ரயில் நிலைய அலுவலர், கார்டுகள், கேட்}கீப்பர்கள் மற்றும் காங்}மென் ஆகியோருக்கு தேவையான அளவு வழங்க தெற்கு ரயில்வே அவசர உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
தெற்கு ரயில்வே மண்டலத்தில் ஏற்கெனவே உள்ள ரயில்வே சிக்னல் கம்பங்களில் நீண்ட தூரத்துக்கு முன்னரே தெரியும் வகையில், பிரகாசமாக ஒளிரும் "எல்.இ.டி.' (லைட் எமிட்டிங் டையோட்ஸ்) குழல் பல்புகள் பொருத்தப்பட்டு வருகின்றன. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் புறநகர் மின் ரயில்களை அதிகாலை நேரத்தில் மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்துக்கும் மேல் இயக்கக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தண்டவாளத்தில் விரிசல் - ரயில் சேவையில் தாமதம்: இரவு முதல் பனி கொட்டுவதால் ரயில் பாதையில் விரிசல் ஏற்படுவதை ஊழியர்கள் (காங்-மென்) தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
மீனம்பாக்கம்- திரிசூலம் இடையே ரயில் பாதையில் விரிசல் ஏற்பட்டதால், தென் மாவட்டங்களில் இருந்து வந்த முத்துநகர், நெல்லை, அனந்தபுரி உள்ளிட்ட விரைவு ரயில்கள் எழும்பூருக்கு தாமதமாக வந்து சேர்ந்தன.
விமான சேவை தாமதம்: சென்னையில் இருந்து தில்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படவிருந்த பல்வேறு விமான சேவைகளும் பனிமூட்டம் காரணமாக 2 மணி நேரத்துக்கும் மேல் தாமதமாக இயக்கப்பட்டன. இதேபோல தில்லி உள்ளிட்ட வட இந்திய நகரங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் விமான சேவைகளும் தாமதமாக வந்து சேர்ந்தன.
கண்டெய்னர் லாரிகள்... நகரில் 47 இடங்களில் ஒளிரும் "பெலிக்கான்' சிக்னல்கள் இந்த ஆண்டு நிறுவப்பட்டுள்ளன. மூடுபனி காலத்திலும் இந்த சிக்னல்கள் நீண்ட தூரத்துக்கு ஒளிரும் திறன் கொண்டவை ஆகும்.
மீனம்பாக்கம், அண்ணா சாலை, பூந்தமல்லி சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் கண்டெய்னர் லாரிகள் மற்றும் கனரக வாகனங்களை குறைந்த வேகத்தில் இயக்குமாறு மாநகர போக்குவரத்து காவல் துறை எச்சரித்துள்ளது.