ரேஷன் அட்டைப் பிரச்னை: நுகர்வோர் சேவை மையத்தில் குவியும் புகார்கள்
சென்னை, ஜன.27: மாநில நுகர்வோர் சேவை மையத்தில் ரேஷன் அட்டை தொடர்பான புகார்கள் குவிந்து வருகின்றன. கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 2,715 புகார்கள் சேவை மையத்துக்கு வந்துள்ளன. அதில், அதிகபட்சமாக சென்னை
சென்னை, ஜன.27: மாநில நுகர்வோர் சேவை மையத்தில் ரேஷன் அட்டை தொடர்பான புகார்கள் குவிந்து வருகின்றன.
கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 2,715 புகார்கள் சேவை மையத்துக்கு வந்துள்ளன. அதில், அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் தொலைபேசி வழியாக வந்த புகார்களின் எண்ணிக்கை 741 ஆகும்.
சென்னை எழிலகத்தில் உள்ள உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையரகத்தில் மாநில நுகர்வோர் சேவை மையம் செயல்பட்டு வருகிறது.
ரேஷன் பொருள்கள், ரேஷன் அட்டை, வெளிச் சந்தையில் வாங்கிய பொருள்களின் குறைகள், சேவைகள் குறித்து பொது மக்களுக்கு தகவல்களை அளித்து வருகிறது சேவை மையம்.
தொலைபேசி (044}2859 2828), இ}மெயில், கடிதம் உள்ளிட்டவை மூலம் வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படுகிறது.
""எங்களுக்கு வரும் புகார்களில் பெரும்பாலானவை ரேஷன் அட்டை, ரேஷன் பொருள்கள் தொடர்பானவை. கடந்த டிசம்பர் மாதத்தில் வந்த 3,310 புகார்களில் ரேஷன் அட்டை தொடர்பானவை 2,715 ஆகும்.
ரேஷன் தணிக்கையின்போது வீட்டில் இல்லாதவர்கள், கடைகளில் பொருள்கள் வழங்கப்படுவது இல்லை என்பன போன்ற புகார்கள் கூறப்படுகின்றன. வெளிச் சந்தையில் வாங்கிய பொருள்களின் விவரங்கள், அதை விற்ற நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் சேவைகள் குறித்து 378 புகார்கள் வந்தன'' என்கிறார் நுகர்வோர் சேவை மையத்தின் ஊழியர் ஒருவர்.
எந்தெந்த மாவட்டத்தில்...நுகர்வோர் சேவை மையத்தை தொலைபேசி வழியாகத் தொடர்பு கொள்ளும்போது, நுகர்வோர் உரிமைகள், ரேஷன் அட்டை பெறுவது ஆகியவை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட தகவல்களைக் கேட்கலாம்.
வேலை நாள்களில் காலை 9.30 மணி முதல் மாலை 6 வரை சேவை மையத்தில் உள்ள அலுவலரைத் தொடர்பு கொண்டு புகார்களை பதிவு செய்யலாம்.
""தொலைபேசி வழியாக வந்த புகார்களில், சென்னை மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. டிசம்பர் மாதத்தில் 741 புகார்கள் வந்தன. பெரம்பலூர், புதுக்கோட்டையில் இருந்து எந்தப் புகாரும் வரவில்லை. இதர மாவட்டங்களில் இருந்து இரட்டை மற்றும் ஒற்றை இலக்க எண்ணிக்கையிலேயே புகார்கள் வந்தன. சென்னை மாவட்டத்தில் இருந்து வந்த தொலைபேசி அழைப்புகளில் பெரும்பாலானவை ரேஷன் அட்டை தொடர்பானவை. இந்தப் புகார்கள், சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர் போன்றோருக்கு அனுப்பப்படுகின்றன. அவர்கள், நடவடிக்கை எடுக்கின்றனர்'' என்றார் நுகர்வோர் சேவை மையத்தின் அலுவலர்.
இதுகுறித்து, உணவுத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ""நுகர்வோர் சேவை மையங்களில் இருந்து வரும் புகார்கள் மீது முடிந்த வரை விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதத்தில் 50 சதவீதத்துக்கு மேலான புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது'' என்றனர்.