வினாத்தாள் மோசடி எதிரொலி: முடங்கியது ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம்
சென்னை, ஜூலை 5: காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வில் நடந்த வினாத்தாள் மோசடி தொடர்பாக சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கின் எதிரொலியாக ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி.) முடங்கியுள்ளது. ந
சென்னை, ஜூலை 5: காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வில் நடந்த வினாத்தாள் மோசடி தொடர்பாக சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கின் எதிரொலியாக ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி.) முடங்கியுள்ளது.
நாடு முழுவதும் ரயில்வே துறையில் 2 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. சிக்கன நடவடிக்கை காரணமாக காலியிடங்களை நிரப்புவதில் தேக்க நிலை நீடித்தது. இந்த நிலையில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப "ஆன்-லைன்' தேர்வு முறையை ரயில்வே தேர்வு வாரியம் கடந்த 2008-09-ல் அறிமுகம் செய்தது. ஆனால், இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து "ஆன்-லைன்' தேர்வு முறை ரத்து செய்யப்பட்டது.
இதையைடுத்து, பல மாதங்களுக்கு பின்னர் மீண்டும் ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ரயில்வே தேர்வு வாரியம் முன்வந்தது.
பல கோடி ரூபாய் மோசடி: சென்னை உள்ளிட்ட அனைத்து மண்டலங்களிலும் ரயில் என்ஜின் உதவி ஓட்டுநர், உதவி ரயில் நிலைய அலுவலர் உள்ளிட்ட காலி பணியிடங்களுக்கு கடந்த ஜூன் 6 மற்றும் 13 ஆகிய தேதிகளில் எழுத்துத் தேர்வுகள் நடைபெற்றன.
ரயில்வே வரலாற்றில் முதன்முறையாக, நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அவர்களது தாய்மொழியில் கேட்கப்பட்ட வினாத்தாள்களுக்கு, கொள்குறி திறன் (அப்ஜெக்டிவ்) முறையில் இந்தத் தேர்வுகளை எழுதினர்.
விடைத்தாள்களுடன், வினாத்தாள்களையும் இணைத்து சமர்ப்பிக்காதவர்கள் மீது காவல்துறையினர் மூலம் சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட கெடுபிடி உத்தரவுகளை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் பிறப்பித்தது.
ஆனால், இந்தத் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியிடப்பட்டதாக, சி.பி.ஐ. விசாரணையில் தெரியவந்தது. இதில் பல கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளதாகப் புகார் கூறப்பட்டது.
சி.பி.ஐ. அதிரடி: இதுதொடர்பான வழக்கில், சி.பி.ஐ. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கைகளால், மும்பை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவர் எஸ்.என்.சர்மா, அவரது மகன் விவேக் மற்றும் மூத்த ரயில்வே அதிகாரி ஜி. சேத்தி உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மேலும் 7 பேரை சிபிஐ அதிகாரிகள் குழு தேடி வருகிறது.
இந்த மோசடி சம்பவம் நாடு முழுவதும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக நாடு முழுவதும் ரயில்வே துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப,ஆர்.ஆர்.பி. நடத்த இருந்த அனைத்து தேர்வுகளும் நிறுத்தப்பட்டன.
தமிழக அளவில் ரயில்வே முன்பதிவு மைய விசாரணை அலுவலர் மற்றும் சரக்கு அலுவலர் (கிளார்க்) ஆகிய 100 பணியிடங்களுக்கு ஜூன் 27-ம் தேதி நடைபெற இருந்த எழுத்துத் தேர்வுகள் மறுதேதி அறிவிப்பின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன. முன்னதாக இந்தப் பணியிடங்களுக்கு 41,000 பேர் வரை விண்ணப்பித்துக் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் தேர்வுகள் ஒத்திவைப்பு: இந்த நிலையில், ரயில்வே மருத்துவமனைகள், ரயில் நிலையங்களில் காலியாக உள்ள 12 பிரிவுகளில் சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுகள் வரும் ஜூலை 25-ல் நடைபெறுவதாக இருந்தது. இந்தத் தேர்வுகளை எழுத 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இப்போது இந்தத் தேர்வுகளும் மறுதேதி அறிவிப்பின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
வரும் டிசம்பருக்குள் தமிழகத்தில் ரயில்வே துறையில் காலியாக உள்ள 2,500 பணியிடங்களை நிரப்ப, எழுத்துத் தேர்வுகளை நடத்த சென்னை ஆர்.ஆர்.பி. திட்டமிட்டிருந்தது. ஆனால், இப்போது இந்தத் தேர்வுகள் திட்டமிட்டவாறு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையடுத்து, சென்னை, திருவனந்தபுரம், மும்பை உள்ளிட்ட அனைத்து மண்டல ஆர்.ஆர்.பி. அலுவலகங்களிலும் தேர்வுப் பணிகள் முடங்கியுள்ளன. இதனால், பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
முறைகேட்டில் ஈடுபட்ட ரயில்வே பணியாளர் தேர்வு வாரிய உயர் அதிகாரிகள் மீது விசாரணை நடவடிக்கைகளைத் தொடர சி.பி.ஐ.க்கு அனுமதி வழங்கி ரயில்வே அமைச்சகம் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
ரயில்வே பணியாளர் தேர்வுகளை வருங்காலத்தில், நியாயமான முறையில் கண்டிப்பான விதிகளுடன் நடத்துவது குறித்தும் ரயில்வே துறை ஆய்வு செய்து வருகிறது.