23 ஆண்டுகளாக நிரப்பப்படாத கண் மருத்துவ உதவியாளர் பணியிடங்கள்
திருச்சி : தமிழகத்தில் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாகவுள்ள கண் மருத்துவ உதவியாளர் பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன. கண் பார்வை இழப்பைத் தடுக்கும் வகையில், மத்திய அரசால் தேசிய கண் ப
திருச்சி : தமிழகத்தில் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாகவுள்ள கண் மருத்துவ உதவியாளர் பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன.
கண் பார்வை இழப்பைத் தடுக்கும் வகையில், மத்திய அரசால் தேசிய கண் பார்வை இழப்புத் தடுப்புத் திட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத் திட்டத்தின் கீழ், ஊராட்சி ஒன்றியத்துக்கு ஒருவர் வீதம் தமிழகம் முழுவதும் உள்ள 385 ஒன்றியங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு கண் மருத்துவ உதவியாளர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
Advertisement
கண் பார்வை இழப்பைக் குறைக்கும் வகையில், அரசு அறிவிக்கும் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவது கண் மருத்துவ உதவியாளர்களின் பிரதான பணியாகும்.
இந்தப் பணியோடு தமிழகத்தில் வருமுன் காப்போம், கலைஞர் பள்ளிச் சிறார் கண்ணொளித் திட்டம் போன்றவற்றில் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகளின் கண்களைப் பரிசோதித்து, அவர்களுக்குத் தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் கண் மருத்துவ உதவியாளர்கள்.
ஆனால், கடந்த பல ஆண்டுகளாக எந்தவிதப் பதவி உயர்வும் இல்லாமல் தொடக்கத்தில் பணியில் சேர்ந்த போது எந்த நிலையில் இருந்தார்களோ, அதே நிலையில் இன்றும் இருந்து வருகின்றனர் கண் மருத்துவ உதவியாளர்கள்.
தமிழகத்தில் வட்டார முதன்மை ஆரம்ப சுகாதார நிலையங்கள் 385, கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள் 1,154 என மொத்தம் 1,539 சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், இன்றைய நிலையில் பணியாற்றி வரும் கண் மருத்துவ உதவியாளர்களின் எண்ணிக்கையோ 325 முதல் 330 ஆகத்தான் உள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் ஒருவர் வீதம் 385 பேர் பணியமர்த்தப்பட்டாலும், வேலையைவிட்டுச் சென்றவர்கள், வெளிநாடு சென்றவர்கள், இயற்கை எய்தியவர்கள் போன்ற காரணங்களால் 50 காலியிடங்கள் உள்ளன.
கண் மருத்துவ உதவியாளர் பணிக்கு கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்னர் பணியமர்த்தப்பட்டதோடு சரி, அதன் பின்னர் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கண் மருத்துவ உதவியாளர்கள் பணியிடங்களில் கண் மருத்துவ உதவியாளர்கள் யாரும் பணியமர்த்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து கண் மருத்துவ உதவியாளர்கள் கூறியது:
"தற்போது பணியில் உள்ள கண் மருத்துவ உதவியாளர்கள்தான் கூடுதல் சுகாதார நிலையங்களுக்குள்பட்ட கிராமங்களுக்குச் சென்று பணிகளை மேற்கொள்ளும் நிலை உள்ளது.
ஏற்கெனவே தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்டமாக இருந்தாலும் சரி, கலைஞர் பள்ளி சிறார் கண்ணொளித் திட்டமாக இருந்தாலும் சரி, கண் பரிசோதனையை தனியாக நாங்கள்தான் மேற்கொண்டு வருகிறோம்.
இதுவரை ஒவ்வொரு பள்ளியாகச் சென்று 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர் ஒவ்வொருவரையும் பரிசோதித்து, தேவைப்படுவர்களுக்கு கண்ணாடிகளை வழங்கி வருகிறோம். இதுவரை தமிழகத்தில் 2 லட்சம் மாணவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் பரிசோதனை செய்து கண்ணாடிகளை வழங்கியுள்ளோம்.
எங்களின் பணிச் சுமை அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கண் மருத்துவ உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது எங்களின் பணிச்சுமையை மேலும் அதிகரிக்கிறது' என்கின்றனர் கண் மருத்துவ உதவியாளர்கள்.
பழைய பரிசோதனைக் கருவிகள்: மேலும், இன்றைக்கு கண் பரிசோதனைக்கு நவீன கணினி மருத்துவக் கருவிகளை வைத்துக் கொண்டு தனியார் கண் மருத்துவமனைகள் சேவை செய்து வரும் நிலையில், முதன்மை ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருப்பது 1988 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட கண் பரிசோதனைக் கருவிகள்தான்.
எங்களிடம் பழைய வகை கண் பரிசோதனைக் கருவிகள் இருந்தாலும், அதைக் கொண்டே கிராமப்புறங்களில் நடைபெறும் முகாம்களில் பரிசோதனை செய்து வருகிறோம்.
எனவே, அதிநவீன கண் மருத்துவப் பரிசோதனைக் கருவிகளை ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்கின்றனர் கண் மருத்துவ உதவியாளர்கள்.
பதவி உயர்வு வழங்க வேண்டும்: மற்றத் துறைகளில் எல்லாம் குறிப்பிட்ட ஆண்டுகள் பணியாற்றிவிட்டாலே, அடுத்த நிலைக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுவிடும். ஆனால், எங்களுக்கு மட்டும் இதுவரை பதவி உயர்வு என்பது வழங்கப்படாதது ஏன் என்று தெரியவில்லை.
நாங்கள் பணிக்கு வந்து சுமார் 23 ஆண்டுகள் ஆகியும் தொடக்க நிலையிலேதான் உள்ளோம். இந்த நிலை வேறு எந்தத் துறையிலும் கிடையாது என்கின்றனர் கண் மருத்துவ உதவியாளர்கள்.
மேலும், தங்களது பணிப்பெயரை கண் மருத்துவ அலுவலர் என்று மாற்றி, பதவி உயர்வை விரைவாக வழங்க வேண்டும். கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாகவுள்ள கண் மருத்துவ உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதில் மத்திய அரசுக்கு மாநில அரசு உரிய வழிகாட்டுதலை அளிக்க வேண்டும் என்றும் கண் மருத்துவ உதவியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.