முகப்பு
தமிழ்நாடு

கேரளத்துக்கு இடம்பெயரும் தேங்காய் எண்ணெய் ஆலைகள்!

திருப்பூர்: தேங்காய் எண்ணெய் உற்பத்திக்கு தமிழக அரசு விதித்துள்ள 5 சதவீத வரி விதிப்பால் காங்கயம் தாலுகாவில் தேங்காய் எண்ணெய் உற்பத்தி குறைந்து, ஆலைகளை கேரள மாநிலத்துக்கு கொண்டு செல்லும் முயற்சிகள் மேற

Updated On : 20 செப்டம்பர், 2012 at 5:51 PM
பகிர்:
Updated On : 27 டிசம்பர், 2023 at 9:39 PM

திருப்பூர்: தேங்காய் எண்ணெய் உற்பத்திக்கு தமிழக அரசு விதித்துள்ள 5 சதவீத வரி விதிப்பால் காங்கயம் தாலுகாவில் தேங்காய் எண்ணெய் உற்பத்தி குறைந்து, ஆலைகளை கேரள மாநிலத்துக்கு கொண்டு செல்லும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இதனால், தமிழக அரசுக்கு கிடைக்கும் வருவாய் மட்டுமின்றி, பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

தேங்காய் எண்ணெய் உற்பத்திக்கு இந்திய அளவில் புகழ்பெற்ற இடமாக திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட காங்கயம் தாலுகா திகழ்கிறது. தேங்காய் எண்ணெய் உற்பத்தி மற்றும் கொப்பரை தேங்காய் உலர்வதற்கு ஏற்ற சீதோஷ்ண நிலை நிலவுவதால் காங்கயம் சுற்றுவட்டாரப் பகுதியில் 200க்கும் மேற்பட்ட தேங்காய் எண்ணெய் ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Advertisement

இந்த ஆலைகளுக்கு காங்கயம், உடுமலை, பொள்ளாச்சி, சேலம் மட்டுமின்றி ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் கொப்பரை தேங்காய்கள் கொண்டு வரப்பட்டு நாளொன்றுக்கு 50 ஆயிரம் கிலோவுக்கு (50 டன்) அதிகமாக தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த எண்ணெய் இந்தியா மட்டுமின்றி பல்வேறு வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதுடன், இந்தியாவில் தேங்காய் எண்ணெய் வர்த்தகத்தில் மிகவும் பிரபலமான நிறுவனங்களுக்கும் காங்கயத்திலிருந்தே எண்ணெய் சப்ளை செய்யப்படுகிறது.

அதன்படி, காங்கயத்திலுள்ள தேங்காய் எண்ணெய் ஆலைகள் மூலம் நேரடியாகவும்,  மறைமுகமாகவும் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

இந்நிலையில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு கொப்பரை தேங்காயில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு 4 சதவீத உற்பத்தி வரியும், 1 சதவீத செஸ் வரி என 5 சதவீத வரி விதித்தது. ஆனால், தேங்காய் எண்ணெய் உற்பத்தியில் காங்கயத்துக்கு போட்டியாக உள்ள கேரள மாநிலத்தில் எவ்வித வரி விதிப்பும் இல்லை. இதனால், காங்கயம் ஆலைகளுக்கான தேங்காய் எண்ணெய் வர்த்தகம் நாளுக்கு நாள் பாதிக்கப்படுவதுடன் புதிய ஆலைகள் உருவாக்கமும் தடைபட்டு கொண்டிருக்கிறது.

இதையடுத்து, தேங்காய் எண்ணெய் உற்பத்திக்கு மாநில அரசு விதித்துள்ள வரி விதிப் பை விலக்கிக் கொள்ளவோ அல்லது அதை 2 சதவீதமாக குறைக்கவோ வேண்டி எண்ணெய் ஆலை உற்பத்தியாளர்கள் கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இவ்விஷயத்தில் அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. இதனால், பாதிக்கப்பட்டுள்ள காங்கயம் தேங்காய் எண்ணெய் ஆலை உரிமையாளர்கள் தங்களது தேங்காய் எண்ணெய் ஆலைகளை கேரள மாநிலத்துக்கு இடமாற்றம் செய்து வருகின்றனர்.

அதன்படி, தமிழகத்தில் கொப்பரை தேங்காய்களை கொள்முதல் செய்து அவற்றை எண்ணெய்யாக உற்பத்தி செய்வதை மட்டும் கேரளத்தில் மேற்கொள்ளத் திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய வருவாய் பாதிக்கப்படுவதுடன், பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பும் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து காங்கயம் தேங்காய் எண்ணெய் ஆலை உரிமையாளர்கள் கூறுகையில், தொடர்ந்து பல ஆண்டுகளாக வரி விதிப்பை நீக்கக் கோரி மாநில அரசிடம் கோரிக்கை விடுத்தும் பலனில்லை. ஆனால், அண்டை மாநிலமான கேரளத்தில் தேங்காய் எண்ணெய் உற்பத்திக்கு வரிச் சலுகை அளிக்கப்பட்டுள்ளதால் அங்கு உற்பத்தி செலவு குறைந்து வர்த்தக வாய்ப்பு அதிகரித்து வருகிறது. இதைக்கருத்தில் கொண்டே காங்கயம் ஆலை உரிமையாளர்கள் தங்களது தேங்காய் எண்ணெய் ஆலைகளை கேரளத்தில் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இந்திய அளவில் தேங்காய் எண்ணெய் உற்பத்தியில் முதலிடம் பிடித்துள்ள காங்கயம் தாலுகா மாநில அரசின் வரி விதிப்பால் தன் புகழை இழந்து வருவதுடன், வேலைவாய்ப்பும் குறைந்து வருகிறது. முழுமையாக தேங்காய் எண்ணெய் உற்பத்தி கேரள மாநிலத்துக்கு செல்லும் முன்பு மாநில அரசு போதிய கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.