நிரந்தர வாழ்வாதாரமின்றி தவிக்கும் ஆடு வளர்ப்பு தொழிலாளர்கள்
திருத்துறைப்பூண்டி : ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆடு வளர்க்கும் தொழிலாளர்கள் 6 மாதங்கள் சொந்த மாவட்டத்திலும், அடுத்த 6 மாதங்கள் காவிரி டெல்டா மாவட்டங்களிலும் தங்கி ஆடு மேய்க்கும் தொழில் செய்து வர
திருத்துறைப்பூண்டி : ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆடு வளர்க்கும் தொழிலாளர்கள் 6 மாதங்கள் சொந்த மாவட்டத்திலும், அடுத்த 6 மாதங்கள் காவிரி டெல்டா மாவட்டங்களிலும் தங்கி ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகின்றனர். தங்களின் நிரந்தரமான வாழ்வாதாரத்துக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த திருப்புல்லாணி, மேலமடை, கொம்பூதி, காஞ்சரங்குடி, உச்சிப்புளி, திருவாடானை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த, ஆயிரக்கணக்கான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து ஆடு வளர்க்கும் தொழிலைச் செய்து வருகின்றனர்.
மழை குறைவாகப் பெய்வதாலும், மாவட்டத்தில் சாகுபடிக்கு தண்ணீர் ஆதாரம் எதுவும் இல்லாத நிலையிலும், மானாவாரி நிலப்பரப்பில் ஆடுகளைப் பராமரிக்க வழியில்லாததாலும், பிப்ரவரி மாத இறுதியில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ஆடுகளை கால்நடையாக ஓட்டிக்கொண்டு வருகின்றனர். அவர்கள், வழிநெடுகிலும் சாலையோரம் ஆடுகளோடு தங்கி, பல நடைமுறை சங்கடங்களுக்கிடையே தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு வந்து சேர்வர். வழியில் சாலை விபத்தில் ஆடுகள் பலியாகும் சம்பவங்களும் நேரிடும்.
காவிரி டெல்டா மாவட்ட வயல்வெளிகளில் பனை மட்டையினால் அமைக்கப்பட்ட தாற்காலிக குடாப்களை அமைத்து, குடும்பத்தினருடன் தொழிலாளர்கள் தங்குவர். ஒரு குடும்பத்துக்கு சுமார் 400 முதல் 500 ஆடுகள் வரை இருக்கும். இதுபோலத் தங்கும்போது ஆடுகளை நரி, காட்டுப்பூனை போன்றவை தூக்கிச் செல்வதும், பலவகை நோய்களினால் ஆடுகள் இறப்பதும் தொடர்ந்து வாடிக்கையாகிவிட்டது.
இதுமட்டுமல்லாது, ஆடுகளுக்கு ஏற்படும் பில்முறிவு, நீலநாக்கு நோய் உள்ளிட்ட நோய்களைத் தடுப்பதற்கான தடுப்பூசி போடுவதற்கு அரசு கால்நடை மருத்துவமனைகளில் உரிய ஏற்பாடுகள் ஏதும் இல்லாத காரணத்தால், பல நேரங்களில் பெருமளவிலான ஆடுகள் இறப்பதும் உண்டு. இறக்கும் ஆடுகளுக்கு காப்பீடு செய்திருந்தாலும்கூட பல சமயங்களில் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து, சான்றிதழ் பெறுவதிலும் பல நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படுவதாக அந்தத் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
ஆடு வளர்ப்போர் வாழ்க்கை நிலை குறித்து அரசு ஆய்வு நடத்தி, அவர்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், குழுக் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். கால்நடைத் துறை, வனத் துறை, வருவாய்த் துறையினர் இணைந்த ஒருங்கிணைப்புக் குழு அமைத்து அவர்களின் பல்வேறு பிரச்னைகளையும் கண்டறிந்து, அதற்குரிய தீர்வு காண வேண்டும்.
மேலும், ஆடு வளர்ப்போருக்கென நல வாரியம் அமைத்து, நிரந்தர வாழ்வாதாரத்தை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே ஆடு வளர்ப்புத் தொழிலாளர்களின் எதிர்பார்ப்பு.