முகப்பு
தமிழ்நாடு

பிளஸ் 2 தொழிற்கல்வி படித்தோருக்கு அண்ணா பல்கலைக் கழகத்தில் பி.இ. இட ஒதுக்கீடு கிடைக்குமா?

ஆரணி: பிளஸ் 2 தொழிற்கல்வி முடித்த மாணவர்களுக்கு, அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் பி.இ. படிப்புக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.  பி.இ. படிப்பில் சேர்வதற்கான கவுன்சலிங் த

Updated On : 20 செப்டம்பர், 2012 at 6:25 PM
பகிர்:
Updated On : 27 டிசம்பர், 2023 at 9:53 PM

ஆரணி: பிளஸ் 2 தொழிற்கல்வி முடித்த மாணவர்களுக்கு, அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் பி.இ. படிப்புக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

 பி.இ. படிப்பில் சேர்வதற்கான கவுன்சலிங் தர வரிசைப் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. இதில், பிளஸ் 2 தொழிற்கல்வி பிரிவுக்கான தரவரிசைப் பட்டியலில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்துள்ள ஒண்ணுபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவர் டி.கிருஷ்ணகுமார், கட்ஆப் மதிப்பெண் 199.83 பெற்று, மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இவரது தந்தை எஸ்.பி.தண்டபாணி, நெசவுத் தொழிலாளி.

 இதே பள்ளியில், தொழிற்கல்வியில் பயின்ற என்.டி.பூபாலன் 198.17, கே.விஜயகுமார் 196.83, ஜோதிபிரகாசம் 194.83 பெற்று முறையே 10வது, 26வது, 54வது இடங்களைப் பெற்று, ஒரே பள்ளியைச் சேர்ந்த 4 மாணவர்கள் முதல் 60 இடங்களுக்குள் வந்துள்ளனர்.

Advertisement

 முதலிடம் பிடித்த டி.கிருஷ்ணகுமாருக்கு, அண்ணா பல்கலைக்கழகக் கல்லூரிகளில் இடம் கிடையாது; அதன் கட்டுப்பாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் எனும் நிலை உள்ளது.

 இதையொட்டி, ஒண்ணுபுரம் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் தரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதில், "அண்ணா பல்கலைக்கழகத்தில் பின்பற்றப்படும் பாடங்களைத்தான் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பொறியியல் கல்லூரிகளும் பின்பற்றுகின்றன. பிளஸ் 2 தொழிற்கல்வி முடித்த மாணவர்களுக்கு இக் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன; ஆனால், அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்லூரிகளில் படிக்க மட்டும் அனுமதி மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.

 மேலும், அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு என 100 இடங்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இது பல ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்கப்பட்ட எண்ணிக்கை. தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்தும், இந்த ஒதுக்கீடு அதிகரிக்கவில்லை. இதை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, தனியார் கல்லூரிகளில் 4 சதவீதம் என்பதை 10 சதவீதமாக உயர்த்த வேண்டும்' என வலியுறுத்தி, ஒண்ணுபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி மாணவர்கள் சார்பில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வி அமைச்சர் க.பொன்முடி ஆகியோருக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

 தொடக்கத்தில் சென்னையில் மட்டுமே இருந்த அண்ணா பல்கலைக்கழகம், தற்போது திருச்சி, கோவை, திருநெல்வேலி என விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. 4 கல்லூரிகளிலும் சேர்த்து தலா 10 சதவீதம் வரை இட ஒதுக்கீடு அளித்தால், பிளஸ் 2 தொழிற்கல்வி பிரிவில் பயிலும் ஏராளமானோர் பயனடைவர் என்றும் மாணவர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.