சீக்கிரம் கிடைக்குமா இலவச பஸ் பாஸ்?
பொன்னேரி, ஜூன் 29: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அரசு வழங்கும் இலவச பஸ் பாஸ் விரைந்து வழங்கப்பட வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் இலவச பஸ் பாஸ் மூ
பொன்னேரி, ஜூன் 29: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அரசு வழங்கும் இலவச பஸ் பாஸ் விரைந்து வழங்கப்பட வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் இலவச பஸ் பாஸ் மூலம் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். இலவச பஸ் பாஸ் காரணமாக நகரங்களில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கிராமப்புற மாணவர்கள் தற்போது அதிக அளவில் படித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் உலகநாத நாராயணசாமி அரசு கல்லூரி ஆகியவற்றில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் பொன்னேரியை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசித்து வருகின்றனர்.
பெரும் அவதி: கல்வியாண்டின் தொடக்கத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பஸ் பாஸ் ஆண்டு இறுதியில் ரத்து செய்யப்பட்டு விடும். பிறகு பள்ளிகள், கல்லூரிகள் திறந்ததும் மாணவர்கள் மீண்டும் பஸ்பாஸ் கோரி பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் கல்லூரி முதல்வரிடம் கடிதம் அளிக்க வேண்டும். அதன்பின் அக்கடிதம் அந்தந்த பகுதியில் உள்ள கோட்ட, மண்டல போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இதையடுத்து அந்த அலுவலகங்களுக்கு சென்று மாணவர்களின் இலவச பஸ் பாஸ்களை ஆசிரியர்கள் பெற்று வரவேண்டும்.
மேற்கண்ட பணிகள் முடிந்து இலவச பஸ் பாஸ் மாணவர்களுக்கு கிடைக்கும்போது அந்த கல்வி ஆண்டின் இரண்டு மாதங்கள் கடந்திருக்கும். அதுவரை மாணவர்கள் பஸ்களில் டிக்கெட் எடுத்துதான் பள்ளிக்கு வரவேண்டும். இதன் காரணமாக கிராமப் பகுதியில் இருந்து நகரப் பகுதிக்கு வந்து படிக்கும் மாணவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ""பள்ளி திறந்து முதல் மாதம் வரை மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. அதன் பிறகு மாணவர்கள் பஸ்பாஸ் கோரி புகைப்படம் அளிப்பதில் ஏற்படும் தாமதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் சிறிது தாமதமாக வழங்கப்பட்டு வருகிறது'' என்றார்.
இதுகுறித்து விழுப்புரம் கோட்ட போக்குவரத்து கழக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ""மாணவர்கள் நலன் கருதி மண்டல அலுவலத்தில் இருந்து இலவச பஸ் பாஸ் கோரும் விண்ணப்பங்களை நாங்களே பெற்று வந்து பள்ளியில் அளிக்கிறோம்'' என்றார்.
யோசனை: பொன்னேரி பகுதி மாணவர்களுக்கு பஸ் பாஸ் விழுப்புரம் போக்குவரத்து கழக காஞ்சிபுரம் மண்டல அலுவலகத்தில் இருந்து மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொன்னேரி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், திருத்தணி ஆகிய பகுதிகளில் உள்ள விழுப்புரம் கோட்ட போக்குவரத்து கழக அலுவலகங்களில் இருந்தும் அந்தந்த பகுதி மாணவர்களுக்கு பஸ்பாஸ் வழங்க நடவடிக்கை மேற்கொண்டால் மாணவர்களுக்கு அரசு வழங்கும் இலவச பஸ்பாஸ் பயணச்சீட்டு விரைந்து கிடைக்கும்'' என்கின்றனர் பெற்றோர்கள்.