சொந்தக் கட்டடத்தில் குடிபுகும் நாள் வருமோ?
புதுக்கோட்டை, மே. 3: புதுக்கோட்டையில் கடந்த 21 ஆண்டுகளாக மிகவும் குறுகலான வீதியில் இயங்கிவரும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்தை, வேறு வசதியான இடத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை இது நாள் வரை நிறைவேறா
புதுக்கோட்டை, மே. 3: புதுக்கோட்டையில் கடந்த 21 ஆண்டுகளாக மிகவும் குறுகலான வீதியில் இயங்கிவரும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்தை, வேறு வசதியான இடத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை இது நாள் வரை நிறைவேறாமலேயே உள்ளது.
கடந்த 1974-ல் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு புதுக்கோட்டை தனி மாவட்டமாக உதயமானது. அப்போது நகரின் மார்த்தாண்டபுரம் பகுதியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தொடங்கப்பட்டது.
அங்கு இயங்கிவந்த அலுவலகம் இடநெருக்கடி காரணமாக 16 ஆண்டுகளுக்குப் பிறகு 1991-ல் புதுக்கோட்டை கிழக்கு 3-ம் வீதியில் உள்ள தனியார் வாடகைக் கட்டடத்துக்கு மாற்றப்பட்டது.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் ஓர் ஆணையர், 2 துணை இயக்குநர்களின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கி வருவதால், இந்த அலுவலகத்தை அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களின் அருகில் அமைக்க முடியும்.
மதுரை உள்ளிட்ட 3 மாவட்டங்களைத் தவிர ஏனைய மாவட்டங்களில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்கள் அனைத்துமே வாடகைக் கட்டடங்களில்தான் இயங்கிவருகின்றன. அதனால் ஒவ்வொரு மாவட்டத்துக்குக்கும் சராசரியாக ரூ. 10 ஆயிரம் மாத வாடகையாக செலவிடப்படுகிறது. அந்த வகையில் இதுவரை பல கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
மேலும், தற்போது புதுக்கோட்டையில் இயங்கிவரும் வேலைவாய்ப்பு அலுவலகம் மிகவும் குறுகலான வீதியில் உள்ள கட்டடத்தின் மாடியில் இயங்கிவருகிறது. இந்த அலுவலகம் அமைந்துள்ள கட்டடத்தின் மாடிக்கு செல்லும் மாடிப்படிகளும் மிகவும் குறுகலாகவும், வலுவிழந்தும் உள்ளன.
பதிவுக்காகவும், பதிவுமூப்பு சரிபார்ப்புக்காகவும் வரும் மாணவர்கள், இளைஞர்கள் சொற்ப எண்ணிக்கையில் கூடினாலே நீண்ட வரிசை உருவாகிறது. இதனால் ஒருவர் இறங்கினால்தான் மற்றவர் மாடிக்குச் செல்ல முடியும் என்ற நிலை உள்ளது.
இதனால் ஏற்படும் நெரிசலால் வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு அனைவரும் சிரமப்படும் சூழ்நிலை உள்ளது.
இதன் காரணமாக, எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மற்றும் ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியாகும்போது ஆயிரக்கணக்கானோர் ஒரே நாளில் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தால், நகரின் வேறு இடங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சிறப்புப் பதிவு முகாம்களை நடத்திச் சமாளிக்கும் நிகழ்வு வாடிக்கையாகிவிட்டது.
சுமார் 1.25 லட்சம் பேர் இந்த அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். எனவே, அலுவலகத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு, எந்தப் பயனும் இல்லாததால் இது சம்பந்தமாக பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்களும் நடைபெற்றன.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எஸ்.பி. முத்துக்குமரன் கூறுகையில், ""மிகவும் குறுகலான இடத்தில் உள்ள இந்த அலுவலகத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு மனுக்கள் அளித்தும், போராட்டங்கள் நடத்தியும் எவ்வித பலனுமில்லை'' என்றார்.
இது குறித்து அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் கி. நாகராஜன் கூறுகையில், ""தினமும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள் இங்கு வருகின்றனர். எனவே, பாதுகாப்பற்ற சூழலில் அனைவரும் சிரமப்படும் நிலையில் உள்ள இந்தக் கட்டடத்தை காலி செய்து, வேறு இடத்துக்கு மாற்றுவது அனைவருக்கும் நல்லது'' என்றார்.
புதுக்கோட்டை - திருச்சி சாலையில் திருக்கோகர்ணம் பகுதியில் உள்ள அரசுத் தொழில் பயிற்சி நிலையம் அருகே உள்ள இடத்தில் சொந்தக் கட்டடம் அமைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அங்கு மாற்றலாம் என சில ஆண்டுகளுக்கு முன்பே அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கிறது வேலைவாய்ப்புத் துறை.
எனவே இது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.