வராகநதி திட்டம்: பாழடிக்கப்பட்ட பல கோடி ரூபாய்
செஞ்சி, மே 8: செஞ்சி வட்டம் செவலபுரை கிராமத்தில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே காமராஜர் ஆட்சி காலத்தில் பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட செவலபுரை அணை இன்று வரை செயல்படாமல் உள்ளது. இந்த அணையின் இருபுறம
செஞ்சி, மே 8: செஞ்சி வட்டம் செவலபுரை கிராமத்தில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே காமராஜர் ஆட்சி காலத்தில் பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட செவலபுரை அணை இன்று வரை செயல்படாமல் உள்ளது.
இந்த அணையின் இருபுறமும் சிமென்ட் கரை அமைத்து தூர் வாருவதற்கு ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்பட்டும் அந்த நிதி முறையாக பயன்படுத்தப்படவில்லை என்று இப் பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.
இந்த அணையின் மூலம் செஞ்சி வட்டத்தைச் சேர்ந்த செல்லபிராட்டி, மேல்களவாய், நெகனூர், பெரும்புகை, வடவானூர், நங்கிலிகொண்டான், ஆனத்தூர், விற்பட்டு, கடம்பூர், வடபுத்தூர், ஆனாங்கூர், கொறவந்தல், களையூர், நாட்டார்மங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி ஆண்டுதோறும் அமோக விளைச்சலை விவசாயிகள் பெற்றிருக்க வேண்டும்.
ஆனால் அணை கட்டி 34 ஆண்டுகளாகியும் இந்த அணையின் மூலம் விவசாயிகள் பயன் அடையவில்லை.
இந்த அணையில் இருந்து நீர், கிராமங்களுக்கு செல்ல பிரமாண்டமான கால்வாய் உள்ளது. ஆனால் இக்கால்வாய்கள் தூர்வாரப்படாமல் பராமரிப்பின்றி தற்போது காணப்படுகிறது.
இந்த அணைக்கு நீர் ஆதாரமாக செஞ்சி நகருக்கு மேற்கே உள்ள பாக்கம் மலை மற்றும் காட்டுப்பகுதியில் இருந்தும் மேல்மலையனூர் கலங்கலில் இருந்தும் மழை காலங்களில் நீர், வெள்ளம் ஒருங்கிணைந்து உருவானதுதான் வராகநதி.
இந்நதி செஞ்சி அருகே வரும்போது "சங்கராபரணி ஆறு' என்று அழைக்கப்படுகிறது.
காட்டாற்று வெள்ளமாக திரண்டு பாய்ந்து வரும் இந்த நதியை தடுத்து நிறுத்த உதவும் செவலபுரை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையின் மூலம் தண்ணீரை தேக்க வழியிருந்தும் இதன் மூலம் நூற்றுக்கணக்கான ஏரிகளை நிரப்ப வழியிருந்தும் அதிகாரிகளின் அலட்சியப்போக்கினால் இந்த ஆற்று நீர் விடூர் அணைக்கு சென்று பின்னர் வங்காள விரிகுடாவில் வீணாக கலக்கிறது.
மேலும் இந் நதியின் குறுக்கே 200 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கூடப்பட்டு அணையும் உள்ளது.
இந்த அணையின் மூலம் மேலச்சேரி, சிங்கவரம், செஞ்சி, பகுதி ஏரிகள் நிரம்பி இதன் மூலம் 3 போகம் விளைச்சலை விவசாயிகள் பெற்று வந்தார்கள்.
ஆனால் 10 ஆண்டுகளாக இந்த வாய்க்கால் தூர்ந்து போய் உள்ளது. அணையும் பராமரிப்பில்லாமல் உள்ளது.
வராகநதி சீரமைப்புத் திட்டம் என்ற பெயரில் 120 ஏரிகளில் மீன் குட்டை அமைத்தல், காய்கறி பண்ணை அமைத்தல், கால்நடைப் பராமரிப்பு, விவசாயப் பயிற்சி உள்ளிட்ட 8 திட்டங்கள் மூலம் ரூ.35 கோடி ரூபாய் மதிப்பில் திட்டமிட்டு 2011-ல் நிறைவடையும் என்று சொல்லப்படுகிறது.
ஆனால் ஏரி கரைகளில் பெயர்ப்பலகை வைத்ததோடு சரி இதில் எந்த திட்டமும் நடைபெறவில்லை.
மேலும் நீர்வள நிலவள திட்டத்தின் மூலம் வராக நதி வடிநிலப் பகுதியில் 236 ஏரிகள், 31 அணைக்கட்டுகள் மற்றும் 425 கிலோ மீட்டர் நீளமுள்ள நீர்வரத்து வாய்க்கால்கள் சீரமைப்பு செய்ய திட்டமிட்டு ரூ. 35 கோடி நிதி உதவி பெறப்பட்டு செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் பாசன வசதி பெறும் 10 ஒன்றியங்களிலும் உள்ள விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் பணிகள் எங்கே நடைபெற்றது என்று ஆவேசமடைந்து போராட்டம் நடத்த உள்ளனர்.