திருச்சி: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள், குறிப்பிட்ட நேரத்தைவிடவும் சுமார் 3 மணி நேரம் தாமதமாகப் புறப்படுவது அண்மைக்காலமாக வாடிக்கையாகிவிட்டது.
தொலைதூரப் பயணங்களுக்காக தமிழ்நாடு அரசால் 1975-ல் உருவாக்கப்பட்டது பல்லவன் போக்குவரத்துக் கழகம்தான் இப்போதைய, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் முன்னோடி. அப்போது வெறும் 276 பேருந்துகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் போக்குவரத்துக் கழகம், இப்போது ஏறத்தாழ 1,000 பேருந்துகளுடன் இயங்கி வருகிறது.
பல்லவன் போக்குவரத்துக் கழகம் 1980-ல் திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகமாகி, 1990-ல் ஜெஜெ போக்குவரத்துக் கழகம் என தனிப் பிரிவையும் உருவாக்கி, அந்தப் பிரிவும் பிறகு ராஜீவ் காந்தி போக்குவரத்துக் கழகம் என்று பெயர்மாறி, ஒரு வழியாக இப்போது "அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் (எஸ்இடிசி)' என்று ஓடிக் கொண்டிருக்கிறது.
தொலைதூரப் பயணங்களுக்கு பேருந்துகள் வசதியில்லை என்ற குறையை சற்றே நிவர்த்தி செய்து வரும் இந்த விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் இப்போது "செமி டீலக்ஸ்', "சூப்பர் டீலக்ஸ்', "அல்ட்ரா டீலக்ஸ்', "குளிர்சாதனப் பேருந்து' என 4 வகைப் பேருந்துகள் உள்ளன.
கால மாற்றத்துக்கேற்ப சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, கும்பகோணம், தூத்துக்குடி, நாகர்கோவில், கன்னியாகுமரி, பெங்களூர், சேலம், திருப்பதி ஆகிய இடங்களில் பணிமனைகளும், எல்லா மாவட்டப் பேருந்து நிலையங்களிலும் "ஆன்லைன்' முன்பதிவு மையங்களும் இதன் வளர்ச்சி.
வளர்ச்சிக்குத் தக்கவாறு சில சிரமங்களும் இந்தப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன. இதில் முக்கியமானது, குறித்த காலத்துக்கு பேருந்துகள் புறப்படாமைதான்.
குறிப்பாக, திருச்சியிலிருந்து நாகர்கோவிலுக்கு கடந்த மே 13-ம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்பட வேண்டிய அல்ட்ரா டீலக்ஸ் நள்ளிரவு 12.40 மணிக்குத்தான் வந்து- புறப்பட்டிருக்கிறது. அதேபோல, செவ்வாய்க்கிழமை இரவு திருச்சியிலிருந்து இரவு 11 மணிக்கு சென்னை செல்ல வேண்டிய விரைவுப் பேருந்து நள்ளிரவைத் தாண்டியும் குறிப்பிட்ட அந்தப் பேருந்து வரவில்லை.
நள்ளிரவில் பேருந்து நிலையத்தில் கூடியிருந்த மக்கள் கேட்டுக் கேட்டுப் பார்த்து அசந்துபோய், பெரும்பாலானோர் வேறுவழியின்றி தனியார் பேருந்தை நோக்கி ஓடியிருக்கின்றனர். இந்த இரு பிரச்னைகளும், சனி, ஞாயிறு போன்ற விடுமுறைக் காலங்களில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக வட்டாரங்களில் விசாரித்தபோது, சிறப்புப் பேருந்து என்ற பெயரில் வெளியூர்களுக்கு, சுற்றுலாத் தலங்களுக்கு, ஆன்மிகத் தலங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் பேருந்துகள் வந்து சேருவதில் தாமதம் ஏற்படுவதால்தான் இதுபோன்ற பிரச்னைகள் எழுவதாகதக் தெரிய வருகிறது.
அதேபோல, உதகமண்டலம், கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல எந்த ஊரிலிருந்தும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்தில் முன்பதிவு செய்ய முடியும். ஆனால், அங்கிருந்து திரும்பி வருவதற்கு முன்பதிவு செய்வதை அந்தந்த மையங்களில் உள்ள அலுவலர்கள் மறுக்கின்றனர். உதகமண்டலம் பேருந்து நிலையத்திலிருந்தும்கூட, முன்பதிவு செய்ய முடியாது.
"மலைக்கு மேலே ஏறிவரும் பேருந்துகள் நேரத்துக்கு வந்துசேரும் எனச் சொல்ல முடியாது' என்றுதான் இதற்குக் காரணம் என்றும் வெளிப்படையாகவே கூறுகின்றனர். மொத்தத்தில் "தாமதம் என்பது தவிர்க்க முடியாது' என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறது அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம். எனவே, தேவை அடிப்படையில் இன்னும் கூடுதலாக இக் கழகத்தில் பேருந்துகளை இயக்க மாநில அரசு முன்வர வேண்டும் என்கின்றனர் பயணிகள்.
மக்கள் மத்தியில் அதிகம் விரும்பப்பட்டு வரும் இந்தப் போக்குவரத்துக் கழகத்தில் இதுபோன்ற பிரச்னைகள் எழாமல் இருக்க, குறிப்பிட்ட "காலத்தில்' பேருந்துகளை இயக்க நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.