முகப்பு
தமிழ்நாடு

பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை தேவை நடவடிக்கை எடுக்குமா அரசு?

ஈரோடு: பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் இல்லாததால், அண்மையில் பெய்த கன மழையின்போது சுமார் 10 டிஎம்சி தண்ணீர் காவிரியில் கலந்து வீணாகியுள்ளது. பவானி ஆற்றின் குறுக்கே 1956-ல் பவானிசாகர் அணை கட்டப்பட்ட

Updated On : 20 செப்டம்பர், 2012 at 8:50 PM
பகிர்:

ஈரோடு: பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் இல்லாததால், அண்மையில் பெய்த கன மழையின்போது சுமார் 10 டிஎம்சி தண்ணீர் காவிரியில் கலந்து வீணாகியுள்ளது.

பவானி ஆற்றின் குறுக்கே 1956-ல் பவானிசாகர் அணை கட்டப்பட்டது. இந்த அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் நீலகிரி மாவட்டத்தில் உள்ளன. 120 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை மூலம் கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை உள்ளிட்ட பாசனத் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதில், கீழ்பவானி பாசனம் மூலம் மட்டும் சுமார் 1.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் பயனடைந்து வருகின்றன. நீலகிரி, கேரள பகுதியில் பெய்யும் கனமழையால் பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அவ்வப்போது அதிகரிக்கிறது. கடந்த ஆண்டில் அதிகபட்சமாக 2.1 லட்சம் கனஅடி தண்ணீர் அணைக்கு வந்ததையடுத்து ஒரே நாளில் அணையின் முழுக் கொள்ளளவும் நிறைந்து உபரி நீர் பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டது.

Advertisement

பவானிசாகரில் இருந்து பவானி கூடுதுறைவரை உள்ள 70 கிமீ தூரம் கொண்ட பவானி ஆற்றில் பல்வேறு இடங்களில் காட்டாறுகள் கலக்கின்றன.

இந்தத் தண்ணீர் அனைத்தும் காவிரியில் கலந்து வீணாகக் கடலில் போய் சேர்கிறது. இது போன்ற காலங்களில் அணையின் உபரி நீரைச் சேமிக்கும் வகையில் பவானி ஆற்றில் ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டப்பட்டால் வீணாகும் தண்ணீரைச் சேமித்து வறட்சிக் காலங்களில்கூட பாசனம் மேற்கொள்ள முடியும் என்பது விவசாயிகளின் நீண்ட காலக் கோரிக்கை.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாகப் பெய்து வரும் மழையினால் பவானி ஆற்றில் இருந்து சுமார் 10 டிஎம்சி தண்ணீர் காவிரியில் கலந்து வீணாகியுள்ளது.  

இதுகுறித்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசன சங்கச் செயலர் சுபி.தளபதி கூறியது:

பவானிசாகர் அணை முழுக் கொள்ளளவை எட்டி உபரி நீரை ஆற்றில் வெளியேற்றும் போதும், மழைக்காலங்களில் வீணாகும் மழைநீரைச் சேமிக்கவும் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று நீண்டகாலமாக விவசாயிகள் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகிறோம். குறிப்பாக, கொடிவேரி அணைக்கட்டின் உயரத்தை அதிகப்படுத்தினால் கூடுதலான தண்ணீரைச் சேமிக்க முடியும். இதனால் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனத்திற்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டிய அவசியமும் இருக்காது.

  இதேபோல தளவாய்பேட்டை அருகே பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலத்தோடு தடுப்பணையும் கட்டப்பட்டால், தேவையான அளவு தண்ணீரை தேக்கி வைக்க முடியும். தேவைப்பட்டால் மின் உற்பத்தியும் மேற்கொள்ள முடியும். பவானிசாகர் அணையில் இருந்து பவானி கூடுதுறை வரை 5 இடங்களில் தடுப்பணைகள் கட்டினால், ஓராண்டுக்கானப் பாசனத்தை எளிதாகச் சமாளிக்க முடியும். தடுப்பணைகள் கட்டுவதற்கு அரசுக்கு அதிக நிதியும் தேவைப்படாது.

கடந்த இரண்டு மாதங்களில் பெய்த தென்மேற்கு, வடகிழக்குப் பருவமழையினால் மட்டும் சுமார் 10 டிம்சி தண்ணீர் வீணாக காவிரியில் கலந்து கடலுக்குச் சென்றுள்ளது.  இதே போல கடந்த ஆண்டில் சுமார் 7 டிஎம்சி தண்ணீர் வீணாகியுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக சுமார் 10 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்து வீணாகி வருகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்து வருவதால் பாசனத்திற்குத் தண்ணீர் தேவைப்படாத நிலை உள்ளது. இதனால் காவிரியில் கலக்கும் தண்ணீர் கடலில் சென்று கலந்து வீணாகிறது. எனவே, பவானி ஆற்றில் தடுப்பணைகள் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.