ஆரம்பப் பள்ளி, மருத்துவம், ரேஷன் கடை, பஸ் வசதி, தார்சாலை இல்லாமல் 40 ஆண்டுகளாகப் போராடி வரும் கிராம மக்கள்
செஞ்சி, நவ. 19: அரசின் எந்த ஒரு அடிப்படை வசதியும் கிடைக்காத கிராமமாக செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வடகால் கிராமம் 40 ஆண்டுகளாக பரிதாப நிலையில் உள்ளது. செஞ்சி ஊராட்சி ஒன்றியம் கோணைபுதூர் ஊராட்சியை உ
செஞ்சி, நவ. 19: அரசின் எந்த ஒரு அடிப்படை வசதியும் கிடைக்காத கிராமமாக செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வடகால் கிராமம் 40 ஆண்டுகளாக பரிதாப நிலையில் உள்ளது.
செஞ்சி ஊராட்சி ஒன்றியம் கோணைபுதூர் ஊராட்சியை உள்ளடக்கிய வடகால் கிராமத்தில் 70 குடும்பங்கள் வசிக்கின்றன. இன்று வரை இந்த ஊருக்கு எந்த ஒரு அரசு மற்றும் தனியார் பஸ்ஸýம் சென்றதில்லை. சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஏரிக்கரையின் மீது நடந்துதான் செஞ்சி மற்றும் அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்ல வேண்டும்.
ஆரம்பப் பள்ளிக்கும், ரேஷன் பொருள்களை வாங்கவும் அருகில் உள்ள சோமசமுத்திரம் கிராமத்துக்கு செல்ல வேண்டும். மருத்துவ வசதி பெற 6 கிலோ மீட்டர் தூரம் உள்ள செஞ்சி அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். இரவு நேரங்களில் ஏரிக்கரையை கடந்து செல்வது கடினம். ஏரிக்கரையின் மீது மின் விளக்குகள் இல்லை.
வடகால் கிராமத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் செஞ்சி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர். மழைக்காலங்களில் ஏரிக்கரையில் சைக்கிளில் செல்லும்போது களிமண் வழுக்கி இதுவரை 7 மாணவர்களும், 9 மாணவிகளும் ஏரியில் விழுந்துள்ளனர். ஏரிக்கரையை பலப்படுத்தி அகலப்படுத்தி தார் சாலை அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக மனு அளித்தும் யாரும் செவி கொடுத்து கேட்கவில்லை.
தற்போது மழைக்காலம் என்பதால் வடகால் ஏரி நிரம்பி வழிகிறது. களிமண்ணால் ஆன ஏரிக்கரை சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. நடந்து சென்றாலே வழுக்கி விழும் நிலையில், சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்றால் வழுக்கி ஏரியில் விழும் அவலம். இதனால் பள்ளிக்கு செல்ல முடியாமலும், கிராம மக்கள் வெளியே செல்ல முடியாமலும், முதியோர் மற்றும் குழந்தைகள் மருத்துவ சிகிச்சை பெற முடியாமலும் முடங்கி கிடக்கும் அவல நிலையில் உள்ளனர்.சாலை வசதி வேண்டி மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், ஒன்றிய ஆணையாளர், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோரிடம் மனு அளித்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்கள் கூறுகின்றனர்.
மேலும் வடகால் கிராமத்துக்கு செல்லும் ஏரிக்கரை சாலை, வனத்துறை பாதுகாப்பில் இருப்பதாகவும், ஏரி உள்ளேயும், ஏரிக் கரை நெடுகிலும் ஆயிரக்கணக்கான பல்வேறு வகை மரங்களை வனத்துறை வளர்த்து பாதுகாத்து வருவதால் சாலை அமைக்க வனத்துறையினரும் முட்டுக்கட்டையாக இருப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
மேலும் சோமசமுத்திரம் கிராமத்தில் உள்ள பள்ளிக்கு செல்ல கால்வாயில் இறங்கி செல்ல வேண்டும். 1 முதல் 5 வகுப்பு வரை உள்ள பள்ளிக் குழந்தைகள் கால்வாயை கடந்து செல்வது என்பது ஆபத்தானதாகும்.
தற்போது கால்வாயில் தண்ணீர் செல்வதால் பள்ளிக்கு செல்லும் சிறுவர்கள் கடும் துன்பத்துக்கு ஆளாகி உள்ளனர். சில நாள்களுக்கு முன் பெய்த மழையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பள்ளியில் சிறுவர்கள் அகப்பட்டுக் கொண்டனர். செஞ்சி தீயணைப்பு வீரர்கள் சென்று குழந்தைகளை மீட்டனர். வாய்க்கால் மீது சிறு பாலம் அமைக்கவில்லை.
"எங்களுக்கு அரசின் எந்த சலுகையும் வேண்டாம்; வடகால் கிராமத்தில் இருந்து எங்கள் குழந்தைகள் கல்வி கற்க ஏரிக்கரை மீது தார் சாலையை அமைத்தாலே போதும்' என்று ஒட்டு மொத்த கிராம மக்களும் ஒன்று திரண்டு கூறினர். கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக கிராம மக்கள் கூறினர்.