முகப்பு
தமிழ்நாடு

விழிக்குமா கோவை மாநகராட்சி?

கோவை: கட்டடக் கழிவுகள் கொட்டப்படுவதால் கோவையில் உள்ள குளங்கள் கழிவுக் கிடங்குகளாக மாறி வருகின்றன. இதை சரிப்படுத்த வேண்டிய கோவை மாநகராட்சி கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்பது சுற்றுச்சூழல்

Updated On : 28 டிசம்பர், 2023 at 1:57 PM
பகிர்:

கோவை: கட்டடக் கழிவுகள் கொட்டப்படுவதால் கோவையில் உள்ள குளங்கள் கழிவுக் கிடங்குகளாக மாறி வருகின்றன. இதை சரிப்படுத்த வேண்டிய கோவை மாநகராட்சி கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் குமுறல்.

 ÷கோவை மற்றும் சுற்றுப்புறத்தில் பெரியகுளம், வாலாங்குளம், குறிச்சிக்குளம், சிங்காநல்லூர் குளம், முத்தண்ணன்குளம், சுண்டக்காமுத்தூர் குளம், பேரூர் குளம், கிருஷ்ணாம்பதி, மாவுத்தம்பதி, கோளரம்பதி, வேடப்பட்டி குளம் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட குளங்கள் உள்ளன.

 ÷மழைக் காலங்களில் இக்குளங்கள் நிறைந்து காட்சியளிக்கும். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இக் குளங்கள் பராமரிப்பின்றி கழிவுநீர்க் குட்டைகளாகவும்,

 கழிவுக் கிடங்குகளாகவும் மாறிவருகின்றன.

 ÷குளங்களைப் பராமரிக்கும் பொருட்டு பொதுப் பணித் துறையிடமிருந்த குளங்கள் மாநகராட்சி கட்டுப்பாட்டுக்குள் அண்மையில் கொண்டுவரப்பட்டன. ஆயினும் எந்தவிதப் பலனுமில்லை.

 ÷நகரின் பல்வேறு பகுதியிலிருந்து வரும் சாக்கடைக் கழிவு நீர் உக்கடம்- பெரியகுளத்தில் கலக்கிறது. சிறு தொழிற்கூடங்களில் இருந்து வெளியேறும் ரசாயனக் கழிவுகள், சாயப் பட்டறைக் கழிவுகள், நகைப் பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரில் மெர்க்குரியும் இக் குளங்களில் கலக்கின்றன.

 ÷சில சமயம் மருத்துவக் கழிவுகளும் கொண்டுவந்து குளக் கரைகளில் கொட்டப்படுகின்றன. கேரள மாநிலத்துக்கு சரக்குகள் ஏற்றிச் செல்லும் லாரிகள் அங்கிருந்து திரும்பும்போது அங்குள்ள கழிவுகளை ஏற்றிவந்து இரவு நேரங்களில் வாலாங்குளத்தில் கொட்டிவிட்டுச் சென்றுவிடுகின்றன. இது போதாதென்று வீடுகளின் செப்டிக் டாங்க் கழிவுகளை லாரிகள் இரவு நேரத்தில் குளங்களில் கலந்துவிடுகின்றனர்.

 ÷இக் குளங்களில் உள்ள ஆகாயத் தாமரையை அகற்ற உள்ளாட்சி அமைப்புகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் முயற்சி மேற்கொண்டன. ஆனால் எந்தப் பலனும் இல்லை. காரணம் கழிவுநீர் கலக்கும் வரை ஆகாயத் தாமரையின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாது என்பதுதான்.

 ÷உக்கடம்- பெரியகுளத்தின் கரையை மாட்டுத் தொழுவமாக உபயோகிக்கின்றனர் அப்பகுதியைச் சேர்ந்தோர். அங்கு சிலர் ஆக்கிரமித்தும் உள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.

 ÷7 ஆண்டுகளுக்கு முன்புவரை, இக் குளங்களில் பெலிக்கன், கார்மோரண்ட், நைட்ஹெரான், பெயின்டட் ஸ்டார்க், எல்லோ பில்ட் ஸ்டார்க், ப்ளூ ஜக்கா என பல வகையான நீர்ப் பறவைகள் இங்கு முகாமிட்டன. அவற்றைப் பார்க்க குளக் கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. குளங்களில் கழிவுநீர் கலப்பதால் தற்போது இப் பறவைகள் வேற்றிடங்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டன.

 ÷சிங்காநல்லூர் குளத்தில் பல லட்சம் செலவில் படகுத் துறை அமைத்தும், யாருக்கும் எந்தப் பயனுமில்லை. அங்கு இப்போது சாக்கடைக் கழிவுநீர் கலந்து, குளத்தை நாறடிக்கிறது.

 ÷இந்தக் குளங்களை சீராக்கி கழிவுநீர் கலக்காமல் முறையாகப் பராமரித்தால் படகுத் துறையாகவும், பறவைகள் வாழிடமாகவும், நகர மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சமாகவும் மாற்றலாம். எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு நல்ல சுற்றுச்சூழலை ஏற்படுத்துவது கோவை மாநகராட்சியின் கடமை. விழித்துக்கொள்ளுமா மாநகராட்சி நிர்வாகம்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.