மாவட்டம்தோறும் அமைக்கப்படுமா மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகங்கள்?
மதுரை: தமிழகத்தில் மெட்ரிக் பள்ளிகள் துறைக்கு தனி இயக்குநரகம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் அலுவலகங்கள் மாவட்டம்தோறும் அமைக்கப்படாத நிலை இன்னும் தொடர்கிறது. மெட்ரிகுலேஷன் பள
மதுரை: தமிழகத்தில் மெட்ரிக் பள்ளிகள் துறைக்கு தனி இயக்குநரகம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் அலுவலகங்கள் மாவட்டம்தோறும் அமைக்கப்படாத நிலை இன்னும் தொடர்கிறது.
மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என்றாலே... கட்டணம் வசூலிப்பு மையங்கள்தான் என்று நினைக்கும் அளவுக்கு அவற்றின் மீது ஒருவித தவறான எண்ணம்
பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தமிழகத்தில் தினமும் ஏதாவது ஒரு
பகுதியில் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதும் வாடிக்கையாகிவிட்டது.
ஒருபுறம் மெட்ரிக் பள்ளிகள் சில தரமான உள்கட்டமைப்பு வசதியுடன், நியாயமான கட்டணத்தில் கல்வி அளித்து வருவதாகக் கூறப்பட்டாலும், ஆங்காங்கே புற்றீசல்கள் போல் மெட்ரிக் பள்ளிகள் பெருகி வருவதும், நிறுவனர்கள் கிடைத்த வரை லாபம் என்ற போக்கில் கட்டண வசூலிப்பில் ஈடுபட்டு வருவதும் பாமர மக்களும் அறிந்த விஷயமாகிவிட்டது.
இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாணும் வகையில் தமிழகத்தில் உள்ள சுமார் 10 ஆயிரம் மெட்ரிக் பள்ளிகளுக்கான கட்டணத்தை நிர்ணயித்து நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையை அமல்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப்பிரச்னை ஒருபுறம் பக்கம் இருக்க, தமிழகத்தில் மெட்ரிக் பள்ளிகளுக்கு ஒரு தனி இயக்குநரகம் கடந்த 2002-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் நிலையில், மெட்ரிக் பள்ளிகளைக் கண்காணிப்பதற்கும், அதற்கான வழிகாட்டுதலைச் செயல்படுத்துவதற்கும் மாவட்டம்தோறும் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் அலுவலகம் அமைக்க வேண்டிய நிலை உள்ளது.
தொடக்க காலத்தில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களில் மட்டும் மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் அலுவலகங்கள் செயல்பட்டன. மதுரையில் 1987-ல் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் அலுவலகம் அமைக்கப்பட்டது. இதன் கட்டுப்பாட்டின் கீழ் 10 மாவட்டங்கள் வரை இருந்துள்ளன. பின்னர், மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்கள் மட்டும் வரம்புக்குள் கொண்டுவரப்பட்டது. மெட்ரிக் பள்ளிகளின் அதிகரிப்பு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
2008-ம் ஆண்டின்போது, மதுரை மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் வரம்புக்குள் இருந்து விருதுநகர் மாவட்டம் பிரிந்து சென்றுவிட்டது. தற்போது மதுரை, சிவகங்கை மாவட்டங்களுக்கு உரிய மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகமாக செயல்படுகிறது.
ஊழியர்கள், அடிப்படை வசதிகள் பற்றாக்குறை: மதுரை மாவட்டத்தில் 84 மெட்ரிக் உயர்நிலைப் பள்ளிகளும், 88 மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளும், சிவகங்கை மாவட்டத்தில் 22 மெட்ரிக் உயர்நிலைப் பள்ளிகளும், 32 மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளும் இயங்கி வருகின்றன.
மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகத்தில் 7 பேர் பணியாற்ற வேண்டிய இடத்தில் 5 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.
மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், அலுவலகக் கண்காணிப்பாளர், இளநிலை உதவியாளர், துப்புரவுப் பணியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் மட்டுமே உள்ளன. தட்டச்சர், அலுவலக உதவியாளர், டிரைவர் பணியிடங்கள் இல்லாத நிலை உள்ளது.
கணினி இருந்தபோதும், அதை இயக்க ஆபரேட்டர் இல்லை. பெருகிவரும் பள்ளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பணியிடங்கள் ஏதும் உருவாக்கப்படவில்லை. மேலும், இந்த அலுவலகம் கடந்த பல ஆண்டுகளாக பெற்றோர்- ஆசிரியர் கழக அலுவலகக் கட்டடத்திலேயே இயங்கி வருகிறது. இதற்கென்று சொந்தக் கட்டடமும் ஏதும் இல்லை.
இதனிடையே, ஊழியர்களில் சிலர் அடிக்கடி விடுப்பில் சென்றுவிடுதால் பணிகளும் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதேபோன்று தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களிலும் சொந்தக் கட்டடம் இன்றி வாடகைக் கட்டடங்களிலேயே அநேக மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் இயங்குவதாகவும், ஊழியர் பற்றாக்குறை இருப்பதாகவும் மெட்ரிக் பள்ளிகள் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் சென்னை தவிர, இரு மாவட்டங்களுக்கு ஒரு மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகம் தான் செயல்பட்டு வருகின்றன. மாவட்டம்தோறும் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகத்தை ஏற்படுத்தினால் ஆண்டாய்வுப் பணிகள், மேம்பாட்டுப் பணிகள், கண்காணிப்புப் பணிகள் ஆகியவற்றை சிறப்பாக மேற்கொள்ள முடியும் என்று மெட்ரிக் பள்ளி துறையினர் தெரிவிக்கின்றனர்.