கொல்கத்தா நெடுஞ்சாலையில் தொடரும் போக்குவரத்து நெரிசல்: சுங்கச்சாவடி இடமாற்றம் செய்யப்படுமா?
பொன்னேரி, டிச. 10: சென்னை - கொல்கத்தா நெடுஞ்சாலையில் உள்ள நல்லூர் பகுதியில் அமைந்துள்ள சுங்கச்சாவடி அருகே அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்ய வேண்டும் என க
பொன்னேரி, டிச. 10: சென்னை - கொல்கத்தா நெடுஞ்சாலையில் உள்ள நல்லூர் பகுதியில் அமைந்துள்ள சுங்கச்சாவடி அருகே அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை
எழுந்துள்ளது.
சென்னை முதல் ஆந்திர நுழைவு எல்லையான தடா வரை உள்ள 43 கி.மீ. தூரத்துக்கு ரூ.418.80 கோடியில் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை, நான்கு வழிப்பாதையில் இருந்து 6 வழிப் பாதையாக மாற்றும் பணி கடந்த 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இப்பணியில் புழல் பகுதியில் மேம்பாலம், காரனோடையில் உள்ள குசஸ்தலை ஆற்றின் குறுக்கே மேம்பாலம், சென்னை - கொல்கத்தா நெடுஞ்சாலையில் இருந்து பொன்னேரி செல்லும் சாலை சந்திப்பில் உள்ள தச்சூர் கூட்ரோட் பகுதியில் மேம்பாலம் ஆகியவை கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இச்சாலையை ஆறுவழிப் பாதையாக மாற்றும் பணிகளை செய்து வரும் தனியார் கட்டுமான நிறுவனம், சோழவரம் அருகே நல்லூர் பகுதியில் சுங்கச்சாவடி அமைத்து வாகனங்களில் செல்வோரிடம் சுங்கவரி வசூல் செய்து வருகிறது.
சென்னையில் இருந்து 20 கி.மீ. தூரம் உள்ள நல்லூர் பகுதியில் சுங்கச்சாவடி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சுங்கக் கட்டணம் அதிகமாக வசூலிப்பதாகக் கூறி லாரி உரிமையாளர்கள் கடந்த ஆண்டு சுங்கச்சாவடி முன்பு ஆர்ப்பாட்டம் செய்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
சென்னைக்கு அருகில் சுங்கச்சாவடி அமைத்துள்ளதால் சோழவரம், காரனோடை, பொன்னேரி, ஆண்டார்குப்பம், பஞ்செட்டி, அழிஞ்சிவாக்கம், தச்சூர், மாதவரம், நத்தம், பண்டிக்காவனூர் உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்கும் சுங்கவரி செலுத்தியப் பிறகே சுங்கச்சாவடியை கடந்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் சோழவரத்தில் இருந்து 10.கி.மீ. தூரமுள்ள செங்குன்றத்துக்குச் சென்று வர வேண்டும் என்றால் ரூ.100 வரை சுங்க வரி செலுத்தியப் பிறகே சென்று வர முடியும் என்ற நிலை உள்ளது. இதன் காரணமாக மேற்கண்ட இடங்களில் வசிக்கும் மக்கள் நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்ய நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாற்று பாதைதியில் செல்லும் வாகனங்கள்... அதே போன்று, வடசென்னை அனல் மின் நிலையம், எண்ணூர் துறைமுகம், சென்னை துறைமுகம் மற்றும் திருவொற்றியூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் கன்டெய்னர் கிடங்குகளுக்குச் செல்லும் வாகனங்கள் மேற்கண்ட இடத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியை கடந்து சுங்கவரி செலுத்துவதைத் தவிர்க்கும் வகையில் சென்னை - கொல்கத்தா நெடுஞ்சாலையில் உள்ள தச்சூர் கூட்ரோட் பகுதியில் பிரிந்து பொன்னேரி, மீஞ்சூர் வழியாக செல்கின்றனர்.
இதன் காரணமாக பொன்னேரி - மீஞ்சூர், தச்சூர் - பொன்னேரி சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசல் நிறைந்து காணப்படும்.
அத்துடன் அதிக அளவிலான கனரக வாகனங்கள் தச்சூர் - பொன்னேரி சாலையில் செல்வதால் இச்சாலை ஆங்காங்கே குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளது.
அத்துடன் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையில் நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை வேறு இடத்துக்கும் இடமாற்றம் செய்ய வேண்டும் என சோழவரம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்குள்ள சுங்கச்சாவடியில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக இச்சாலையில் பயணம் செல்வோர் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி பொதுமக்களுக்கு அவதியை உண்டாக்கும் வகையில் அமைந்துள்ள சுங்கச்சாவடியை கும்மிடிப்பூண்டி பகுதிக்கு இடமாற்றம் செய்ய தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் இச்சாலையில் பயணம் செய்வோரின் எதிர்ப்பார்ப்பாகும்.