இடிந்து விழும் நிலையில் பால் குளிரூட்டும் நிலையம்
கள்ளக்குறிச்சி, பிப். 19: விழுப்புரம் மாவட்டம் மரவாநத்தம் கிராமத்தில் உள்ள சின்னசேலம் பால் குளிரூட்டும் நிலையம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. மேலும் இங்கு போதுமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் இர
கள்ளக்குறிச்சி, பிப். 19: விழுப்புரம் மாவட்டம் மரவாநத்தம் கிராமத்தில் உள்ள சின்னசேலம் பால் குளிரூட்டும் நிலையம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. மேலும் இங்கு போதுமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருக்கின்றன.
÷மரவாநத்தம் கிராமத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது சின்னசேலம் பால் குளிரூட்டும் நிலையம். விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் 3 பால் குளிரூட்டும் நிலையங்கள் உள்ளன. அதில் கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்குடி, விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், சின்னசேலத்தில் இயங்கி வருகின்றன.
சின்னசேலம் பால் குளிரூட்டும் நிலையத்தில் இருந்துதான் தரமான பாலும், அதிகப்படியான பாலும் விழுப்புரத்துக்கு செல்கின்றன.
÷இந்த நிலையத்தை 21.6.81-ம் ஆண்டில் அப்போதைய அமைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமி திறந்து வைத்தார். இக் குளிரூட்டும் நிலையத்தில் இருந்து நாள்தோறும் 45 ஆயிரம் லிட்டர் 5 டேங்கர் லாரி மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கின்றனர்.
÷இந்த பால் குளிரூட்டும் நிலையத்துக்கு கடலூர் பகுதியைச் சேர்ந்த சில பகுதிகளில் இருந்தும் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் வட்டத்துக்கு உள்பட்ட அனைத்து கிராமங்களிலிருந்தும் பால் சேகரிக்கப்படுகின்றன.
÷இக் குளிரூட்டும் நிலையத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையத்தின் மேல் பகுதியில் உள்ள குடிநீர்த் தொட்டியில் நீண்ட நாளாக நீர் கசிந்து சுற்றுச்சுவர் தண்ணீர் ஊறி கிடக்கிறது. கசிவு நீரினால் கட்டடத்தின் முன்பகுதி சிமென்ட் காரைகள் பெயர்ந்து, உள்ளே உள்ள கம்பிகள் எலும்புக் கூடு போல வெளியே காட்சியளிக்கின்றன. அதனால் இக் கட்டடம் வலுவிழந்த நிலையிலும், இடிந்து விழும் அபாயத்திலும் உள்ளது.
÷இக் கட்டடம்தான் இந்த நிலையில் உள்ளது என்றால் பால் குளிரூட்டும் எந்திரங்களும் துருபிடித்த நிலையில் உள்ளன. பாலை குளிரூட்டும் பகுதியில் உள்ள கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இக் குளிரூட்டும் நிலையத்துக்கு சுற்றுச் சுவரே இல்லாமல் திறந்தவெளியில் உள்ளது. போதிய பாதுகாப்பும் கிடையாது.
÷இக் கட்டடத்தில் போதுமான அடிப்படை வசதிகள் கூட கிடையாது. அங்கு பணிபுரிவோர் குடிப்பதற்காக நல்ல தண்ணீரும் கிடையாது.
÷இக் குளிரூட்டும் நிலையத்துக்கு தனி அலுவலராக மாவட்ட ஆட்சியர் தான் உள்ளார்.
மேலும் இதுதொடர்பாக நிலையத்தின் நிர்வாக மேலாளர் எம்.தமிழ்ச்செல்வனிடம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, மாற்று குடிநீர்த் தொட்டி (சின்டெக்ஸ்) சேலம் மாவட்டம் ஆத்தூரில் விலைப் புள்ளி வாங்கி கொடுத்துள்ளோம். விரைவில் மாற்றி விடுவோம். பால் குளிரூட்டும் குழாய்கள் துருபிடித்த நிலையில் உள்ளனவே என்று கேட்டதற்கு, அதற்கும் மாற்று ஏற்பாடு செய்துள்ளோம். கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் புதிதாக கட்டி வருகின்றோம். விரைவில் பணிகள் முடிந்துவிடும் என்றார்.