மாணவிக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஜன. 8: அரசு ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர இடம் கிடைத்த மாணவியை சேர்த்துக் கொள்ளாத தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகம், அந்த மாணவிக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடும், வழக்குச் செலவாக ரூ
தமிழ்நாடுமாணவிக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஜன. 8: அரசு ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர இடம் கிடைத்த மாணவியை சேர்த்துக் கொள்ளாத தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகம், அந்த மாணவிக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடும், வழக்குச் செலவாக ரூ
சென்னை, ஜன. 8: அரசு ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர இடம் கிடைத்த மாணவியை சேர்த்துக் கொள்ளாத தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகம், அந்த மாணவிக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடும், வழக்குச் செலவாக ரூ. 50,000-மும் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
தஞ்சாவூரைச் சேர்ந்த மாணவி கிருத்திகாவுக்கு சென்னை அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேருவதற்கு இடம் கிடைத்தது. அவர் கல்லூரியில் சேருவதற்கு தாமதமாக வந்ததாகக் கூறி அவருக்கு எம்.பி.பி.எஸ். இடம் மறுக்கப்பட்டது. அவர் தனக்கு எம்.பி.பி.எஸ். இடம் வழங்க கல்லூரிக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதைத் தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இதை எதிர்த்து அந்த மாணவி வழக்கறிஞர் ஆர். சிங்கார வேலன் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கடந்த நவம்பர் 1-ம் தேதியில் இருந்து விசாரித்து வந்தது. இறுதியாக அந்த மனு மீது நீதிபதிகள் வெள்ளிக்கிழமை (ஜனவரி 7) தீர்ப்பு வழங்கினர்.
அதில் நீதிபதிகள் கூறியிருப்பது: மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் முடித்துவிட வேண்டும் என்று உள்ளது. ஆனால், அன்றைய தினம் மாலை 5 மணிக்குள் மாணவர் சேர்க்கையை முடித்துவிட வேண்டும் என்று மருத்துவக் கவுன்சில் விதியில் கூறப்படவில்லை. தாமதத்தைக் காரணம் காட்டி மாணவிக்கு எம்.பி.பி.எஸ். இடம் மறுத்த அந்த கல்லூரி நிர்வாகம், அன்றைய தினம் 5 மணிக்கு மேல் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் 8 மாணவர்களைச் சேர்த்துள்ளது.
அந்தக் கல்லூரி சட்ட விரோதமாக லாபம் பார்க்க வேண்டும என்ற நோக்கில் செயல்பட்டுள்ளது. கல்லூரியின் செயல் சட்ட விரோதமானது. எதேச்சதிகாரமானது. தவறானது. நியாமில்லாதது. கிராமத்தைச் சேர்ந்த மாணவியான கிருத்திகா மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும் என்பதற்காக அவர் ஏற்கெனவே சேர்ந்த பல் மருத்துவக் கல்லூரியில் இருந்து மாற்றுச் சான்றிதழ் பெற்றுள்ளார்.
தனியார் மருத்துவக் கல்லூரியின் செயலால் அவருக்கு ஒரு வருட படிப்பு வீணானது மட்டும் அல்ல. அந்த மாணவியினுடைய எதிர்கால வாழ்வுக்கும் தடையாக அமைந்துள்ளது. எனவே, அந்தக் கல்லூரி நிர்வாகம், மாணவிக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடும், வழக்குச் செலவாக ரூ. 50,000-மும் அடுத்த 2 வாரங்களுக்குள் வழங்க வேண்டும்.
மேலும், அந்த மாணவி ஏற்கெனவே சேர்ந்த பல் மருத்துவக் கல்லூரியில் காலியிடம் இருக்கும்பட்சத்தில், அந்த கல்லூரியில் சேருவதற்கு மாணவிக்குத் தகுதி உண்டு. தவிர, அந்த மாணவி 2011-12-ம் ஆண்டு மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் பங்கேற்கவும் அவருக்குத் தகுதி உண்டு என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.