எட்டாக் கனியாக தமிழக அகலப் பாதை திட்டங்கள்: தமிழக எம்.பி.க்கள் குரல் கொடுப்பார்களா?
சென்னை, ஜன. 30: நிலஅளவை செய்து திட்ட மதிப்பீடுகள் தயாரித்து அனுப்பியும், தமிழகத்தில் பல்வேறு அகலப் பாதை திட்டங்கள் இன்னமும் எட்டாக் கனிகளாகவே உள்ளன. வரும் ரயில்வே பட்ஜெட்டிலாவது இந்த திட்டங்களுக்கு ந
சென்னை, ஜன. 30: நிலஅளவை செய்து திட்ட மதிப்பீடுகள் தயாரித்து அனுப்பியும், தமிழகத்தில் பல்வேறு அகலப் பாதை திட்டங்கள் இன்னமும் எட்டாக் கனிகளாகவே உள்ளன.
வரும் ரயில்வே பட்ஜெட்டிலாவது இந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து, அனுமதி கிடைக்குமா என்பதும் கேள்விக் குறியாக உள்ளது.
தமிழகத்தில் நில அளவை, மதிப்பீட்டுப் பணிகள் முடிந்தும் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள இந்த முக்கிய அகலப் பாதை திட்டங்களின் விவரம் (அடைப்புக் குறிக்குள் அகலப் பாதைகளின் தூரம் கிலோ மீட்டரில்):
சென்னை- பூந்தமல்லி வழியாக ஸ்ரீபெரும்புதூர் அகலப் பாதை (39).
தருமபுரியின் வளர்ச்சிக்கு...: ஜோலார்பேட்டை- ஒசூர் (கிருஷ்ணகிரி வழி 39). திருப்பத்தூர்- ஒசூர் (கிருஷ்ணகிரி வழி 101).
இந்த அகலப் பாதைப் பணிகள் நிறைவேற்றப்பட்டால் கிருஷ்ணகிரி- தர்மபுரி இடையே ரயில் போக்குவரத்து வசதியை மேம்படுவதோடு, பல்வேறு பின்தங்கிய பகுதிகளில் தொழில், வணிகம் ஆகியவை வளர்ச்சி பெறும். சத்தியமங்கலம்- மேட்டூர் (90). ஈரோடு-சத்தியமங்கலம் (69). இந்த வழித்தடங்கள் யானைகள் செல்லும் பாதையில் குறுக்கிடுவதால் வனத்துறையின் ஒப்புதலைப் பெறுவதில் சிக்கல் தொடர்கிறது.
நீடாமங்கலம்- பட்டுக்கோட்டை (54). இந்தப் புதிய அகலப் பாதைத் திட்டங்களை நிறைவேற்றினால், போதிய வருவாய் இராது என்பது உள்ளிட்ட காரணங்களால் ரயில்வே வாரியம் அனுமதி வழங்க பல ஆண்டுகளாக மறுத்து வருகிறது.
அனுமதிக்கு காத்திருக்கும் திட்டங்கள்: பூர்வாங்க நில அளவைப் பணிகள் முடிக்கப்பட்டு, ரயில்வே வாரியத்தின் ஒப்புதல் பெறுவதற்காக அனுப்பப்பட்டுள்ள புதிய அகலப்பாதை திட்டங்களின் மதிப்பீடு விவரம் (அடைப்புக் குறிக்குள் தூரம் கிலோ மீட்டரில்):
திண்டிவனம்- ஜோலார்பேட்டை (திருவண்ணாமலை, செஞ்சி வழி 168) ரூ. 356 கோடி.
மொரப்பூர்- தர்மபுரி (36)- ரூ. 146 கோடி.
மதுரை- காரைக்குடி (85) ரூ. 382 கோடி.
தஞ்சாவூர்- அரியலூர் (50)- ரூ. 279 கோடி.
சென்னை வில்லிவாக்கம்- காட்பாடி 5, 6-வது அகலப் பாதை (152)- ரூ. 1,353 கோடி.
சிதம்பரம்- ஆத்தூர் (அரியலூர், பெரம்பலூர் வழி 167)- ரூ. 590 கோடி.
ஜோலார்பேட்டை- அரக்கோணம்- காட்பாடி 3-வது அகலப் பாதை (145)- ரூ. 804 கோடி.
மதுரை- கோட்டயம் (போடிநாயக்கனூர் வழி 120)- ரூ. 820 கோடி.
திருக்கடையூர்- தரங்கம்பாடி- திருநள்ளாறு- காரைக்கால் (47). ரூ. 235 கோடி.
சேலம்- ஓமலூர்- மேட்டூர் அணை (43)- ரூ. 215.
ரேணிகுண்டா- அரக்கோணம் 3-வது அகலப் பாதை (79)- ரூ. 418 கோடி.
தஞ்சாவூர்- பொன்மலை 2-வது அகலப் பாதை (48)- 190 கோடி.
அத்திப்பட்டு- கும்மிடிப்பூண்டி (3, 4-வது அகலப் பாதை 25)- ரூ. 305 கோடி.
தூத்துக்குடி துறைமுகம்- உடன்குடி (50)- ரூ.376 கோடி.
இதற்கான விரிவான திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு ரயில்வே வாரியத்தின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளன.
நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல், மின்வாரியத்தின் அனுமதி பெறுவதில் தடை என்று பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இந்தத் திட்டங்கள் உள்ளன.
எனினும், இதற்கு முன்னதாக இந்த அகலப் பாதைத் திட்டங்களுக்கு ரயில்வே வாரியத்தின் அனுமதி கிடைத்தால் மட்டுமே வரும் 2011-12 நிதி ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் நிலை உள்ளது. நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் குரல் கொடுப்பார்களா?