முகப்பு
தமிழ்நாடு

இணையதள மையம் மூலம் ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் ஈட்டும் முன்மாதிரி நூலகம்

பொன்னேரி, ஜூலை 4: மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் இணையதள வசதியை அளித்து ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டும் முன்மாதிரி நூலகமாகத் திகழ்கிறது பொன்னேரி நூலகம்.  தமிழகம் முழுவதும் 32 மாவட்ட நூ

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:04 PM
பகிர்:

பொன்னேரி, ஜூலை 4: மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் இணையதள வசதியை அளித்து ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டும் முன்மாதிரி நூலகமாகத் திகழ்கிறது பொன்னேரி நூலகம்.

 தமிழகம் முழுவதும் 32 மாவட்ட நூலகங்கள், 1664 கிளை நூலகங்கள், 1724 ஊர்புற நூலகங்கள் 598 பகுதிநேர நூலகங்கள் என மொத்தம் 4028 நூலகங்கள் பொது நூலகத்துறை கட்டுப்பாட்டில் இயங்குகின்றன.

 இவை மட்டும் இல்லாமல் அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நிதியில் கட்டப்பட்டுள்ள நூலகங்கள் உள்ளாட்சி நிர்வாகம் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. கடந்த ஆட்சியில் அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நிதியின் கீழ் கட்டப்பட்ட பெரும்பாலான நூலகங்கள் இன்னமும் திறக்கப்படாமல் உள்ளன. அதே போன்று பொது நூலகத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் சில நூலகங்கள் போதிய இடவசதி இன்றியும், மழை பெய்தால் ஒழுகும் நிலையில் உள்ள வாடகை கட்டடங்களில் இன்னமும் இயங்கி வருகின்றன.

 திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 1954-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பொன்னேரி கிளை நூலகம் தற்போது 6ஆயிரம் உறுப்பினர்களுடன் இயங்கி வருகிறது. நூலகத்தில் மொத்தம் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. தினமும் இந்நூலகத்தை 1000 வாசகர்கள் பயன்படுத்துகின்றனர். இரவல் பெறும் பிரிவில் நாள்தோறும் 300 வாசகர்கள் நூல்களை எடுத்து செல்கின்றனர். அதே போன்று நாள்தோறும் 200-க்கும் மேற்பட்டோர் குறிப்புதவி பெற்று செல்கின்றனர்.

 அத்துடன் நூலகத்தில் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக உள்ள புத்தகங்களினால் இப்பகுதியில் வசிக்கும் மாணவர்கள் பெரிதும் பயன் பெற்று வருகின்றனர். மேலும் இந்நூலகத்தில் வாசகர் வட்டம் மற்றும் ரோட்டரி சங்கமும் இணைந்து புத்தக வங்கியை தொடங்கி அதன் மூலம் பட்டப் படிப்புகள் மற்றும் தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கு விலை உயர்ந்த புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.

 தனியார் நன்கொடையால் வளர்ந்த நூலகம்... இந்நூலகத்தில் தனியாரிடம் நன்கொடை பெற்று ரூ.12 லட்சம் செலவில் நூலகத்தின் முதல் தளம் கட்டப்பட்டு அதில் 2009-ம் ஆண்டு இணையதள மையம் தொடங்கப்பட்டது. அத்துடன் இணையதள மையத்துக்கு ரூ. 4 லட்சம் செலவில் 10 கணிப்பொறிகள் வாங்கப்பட்டன. மேலும் ரோட்டரி கிளப்பு மற்றும் சென்னை மிட்டவுன் ஆகியவை இணைந்து 10 கணிப்பொறிகளை இந்நூலகத்துக்கு இலவசமாக வழங்கியுள்ளன.

 மேலும் நெட்டூர் டெக்னிக்கல் ட்ரைனிங் பவுன்டேஷன் வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் மூலம் இப்பகுதியில் உள்ள மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் 1000 பேருக்கு கணிப்பொறியை பயன்படுத்துவது குறித்து அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டது.

 ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் வருவாய் ஈட்டும் முன்மாதிரி நூலகம்... இந்நூலகம் இணையதள மையம் மூலம் ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறது.

 தமிழ்நாடு அறக்கட்டளை நிறுவனத்தின் முயற்சியில் வெளிநாட்டைச் சேர்ந்த துக்காராம் என்பவர் அளித்த 41 ஆயிரம் நன்கொடையின் மூலம் இந்நூலகத்தில் அமைந்துள்ள இணையதள மையம் அண்மையில் முற்றிலும் குளிர்சாதன வசதிக்கு மாறியுள்ளது.

 இதன் மூலம் பேரூராட்சிகள் அளவில் செயல்படும் நூலகத்தில் குளிர்சாதன வசதி கொண்ட இணையதள மையமாக பொன்னேரி நூலகம் விளங்குகிறது.

 இதுகுறித்து பொன்னேரி கிளை நூலக நூலகர் பேனிக் பாண்டியன் கூறுகையில், நூலகத்தின் மாடியில் அமைந்துள்ள இணையதள மையத்தில் குறைந்த கட்டணம் நிர்ணயம் செய்துள்ளதால் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நாள்தோறும் இணைதள மையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

 அடையாளம் தெரியாத நிலையில் புதிதாக வரும் நபர்களிடம் ஓட்டுநர் அடையாள அட்டை நகல், வங்கி பாஸ் புத்தகம் நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல் ஏதும் இல்லை என்றால் பாதுகாப்பு கருதி அவர்களை அனுமதிக்கமாட்டோம் என தெரிவித்தார்.

 தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான நூலகங்கள் ஒழுகும் நிலையில் உள்ள கட்டடத்தில் அமைந்துள்ள போது ரூ.12 லட்ச ரூபாயில் நூலகக் கட்டடத்துக்கு முதல் தளம் அமைக்கப்பட்டு அதில் இணையதள வசதியை ஏற்படுத்தி அதன் காரணமாக ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் வருவாய் ஈட்டுவதன் மூலம் பொன்னேரி கிளை நூலகம் ஒரு முன்மாதிரி நூலகம் என கூறினால் அது மிகையாகாது.

 நாட்டின் கல்வி வளர்ச்சியில் ஒரு முக்கிய தூணாக விளங்குவது நூலகங்கள். அதே போன்று பொதுமக்கள் மற்றும் மாணவர்களை சிந்திக்க தூண்டுபவையும் நூலகங்கள்தான். எனவே தமிழகம் முழுதும் அமைந்துள்ள ஊர்புற நூலகங்களிலும் இதுபோன்று இணையதள வசதியை அமைத்துத்தர பொதுநூலகத்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் கிராமப்புற மாணவர்களின் படிப்புத்திறனை மேலும் வளர்த்து அவர்கள் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும்.

முழு கட்டுரையைப் படிக்க →