முகப்பு
தமிழ்நாடு

கோபுரம் இல்லாத ஆலயம்

பொன்னேரி, ஜூலை 20: 1000-ம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த மேலூர் திருவுடையம்மன் கோயிலுக்கு ராஜகோபுரம் அமைத்து குடமுழுக்கு விழா நடத்த இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள்

Updated On : 20 செப்டம்பர், 2012 at 7:51 AM
பகிர்:

பொன்னேரி, ஜூலை 20: 1000-ம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த மேலூர் திருவுடையம்மன் கோயிலுக்கு ராஜகோபுரம் அமைத்து குடமுழுக்கு விழா நடத்த இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகாவில் உள்ள மேலூர் கிராமத்தில் அமைந்துள்ளது திருவுடையம்மன் உடனுறை திருமணங்கீஸ்வரர் ஆலயம். திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன், ஆவடி அருகே திருமுல்லைவாயலில் உள்ள கொடியுடையம்மன், மேலூரியில் உள்ள திருவுடையம்மன் ஆகிய 3 ஆலயங்களும் ஒரே காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோன்று ஒரே நாளில் இந்த மூன்று ஆலயங்களில் உள்ள வடிவுடையம்மன், திருவுடையம்மன், கொடியுடையம்மன் ஆகிய மூவரையும் வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.

 திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆலயம், திருமுல்லைவாயல் கொடியுடையம்மன் ஆலயங்கள் நன்கு பராமரிக்கப்பட்டு வருவதன் காரணமாக மேற்கண்ட இரண்டு கோயில்களுக்கும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

Advertisement

 போக்குவரத்து வசதி இல்லை: மீஞ்சூர் அருகே மேலூர் கிராமத்தில் உள்ள இக்கோயிலுக்கு செல்ல நேரடி போக்குவரத்து வசதி இல்லை. இதனால் மீஞ்சூர் அருகே உள்ள புங்கம்பேட்டில் இறங்கி சுமார் 2கிமீ தூரம் கோயிலுக்கு நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

 மேலூர் திருவுடையம்மன் கோயிலுக்கு சொந்தமாக அப்பகுதியில் 300 ஏக்கர் நிலங்கள் இருந்தும் அதை தற்போது பயன்படுத்தி வருபவர்களில் பெரும்பாலானோர்

 ஆண்டுதோறும் கோயிலுக்கு குத்தகைப் பணத்தை முறையாக செலுத்துவதில்லை என கூறப்படுகிறது.

 இதன் காரணமாக இக்கோயில் சீரமைப்பு செய்து குடமுழுக்கு விழா நடத்த முடியாத நிலை உள்ளது. இக்கோயில் குடமுழுக்கு விழா 1984-ம் ஆண்டு நடத்தப்பட்ட பின்னர் போதிய நிதி வசதி இல்லாததால் அதன் பிறகு இதுவரை குடமுழுக்கு விழா நடத்த முடியாத நிலை உள்ளது.

 பழைமைவாய்ந்த இக்கோயில் முகப்பில் ராஜகோபுரம் ஏதும் இன்றி வெறுமையுடன் காட்சியளிக்கின்றது. அதே போன்று கோயிலுக்கு சொந்தமான திருக்குளம் படிகள் ஏதுமின்றி அதில் உள்ள தண்ணீர் பாசிப் படர்ந்து காணப்படுகின்றது.

 மேலும் கோயிலுக்கு ராஜாகோபுரம் அமைக்க ரூ.1 கோடி ஆகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. எனவே ராஜகோபுரம் அமைப்பதற்கான திருப்பணிக்குழுவை அமைத்து அதன் மூலம் ராஜகோபுரம் அமைக்க முயற்சி மேற்கொள்ள

 வேண்டும்.

 அதே போன்று பாசிப்படர்ந்த நிலையில் உள்ள கோயில் குளம், கோயிலை புனரமைப்பு செய்து குடமுழுக்கு விழா மற்றும் திருக்குளத்தில் தெப்பத்திருவிழா நடத்த இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே கோயிலுக்கு வரும் பக்தர்களின் எதிர்பார்ப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.